அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர் வீட்டில் இரண்டாவது நாளாக இன்றும் (ஜனவரி 8) வருமான வரித்துறை சோதனை தொடர்கிறது.
ஈரோடு மாவட்டம் செட்டிபாளையம் ஸ்டேட் வங்கி நகர் பகுதியில் ராமலிங்கத்துக்கு சொந்தமான என்.ஆர் மற்றும் ஆர்.சி.சி.எல் கட்டுமான நிறுவனங்களின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனங்கள் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா என அரசு கட்டுமான பணிகளை ஒப்பந்தம் மூலம் செய்து வருகிறது.
குடிநீர் கட்டுமான பணிகள், சாலை கட்டமைப்பு பணிகள், உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கிறது.
இந்த நிலையில் நேற்று (ஜனவரி 7) கோவையில் இருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் ராமலிங்கத்துக்கு சொந்தமான அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டனர். ரகுபதிநாயகன் பாளையத்தில் உள்ள இவரது வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது, அலுவலகங்களில் பணியில் இருந்தவர்கள் வெளியில் எந்த தொடர்பும் ஏற்படுத்த முடியாத வகையில் தடுப்பு நடவடிக்கைகளை செய்தனர்.
அதைத்தொடர்ந்து கணினி, ஆவணங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர்.
சென்னை, திருச்சி, ஈரோடு என 26 இடங்களில் நேற்று சோதனை நடைபெற்றது.
சென்னையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள எஸ்.பி.எல் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம், தேனாம்பேட்டை, பூக்கடை ஆகிய பகுதிகளிலும் சோதனை நடத்தப்பட்டது. நேற்று காலை 11.30 மணியளவில் தொடங்கிய இந்த சோதனையானது நள்ளிரவு வரை நீடித்தது.
இந்த நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் ராமலிங்கத்துக்கு சொந்தமான இடங்களில் ஐடி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
பவானி அருகே பூனாட்சி பகுதியில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் அக்கா மகன் வெற்றிவேலுக்கு சொந்தமான மரவள்ளி கிழங்கு ஆலை, முள்ளம்பரப்பு பகுதியில் செல்வசுந்தரம் என்பவருக்கு சொந்தமான ஆர்பிபி கட்டுமான நிறுவனம் , நவநாயக்கன் பளையத்தில் உள்ள செல்வசுந்தரத்தின் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
2016 ஆம் ஆண்டு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டபோது நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர்.
அப்போது ராமலிங்கத்துக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்ற நிலையில் முக்கிய ஆவணங்கள் மற்றும் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாகவும், வரி ஏய்ப்பு புகார் காரணமாகவும் இந்த ரெய்டு நடத்தப்படுவதாக தகவல்கள் வரும் நிலையில் வருமானவரித்துறை இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
ஹெச்எம்பிவி… சுற்றுலா பயணிகள் மாஸ்க் அணிவது அவசியம்: நீலகிரி ஆட்சியர்!
டாப் 10 செய்திகள் : ஒரே நாடு ஒரே தேர்தல் ஜேபிசி கூட்டம் முதல் புதிய இஸ்ரோ தலைவர் வரை!