”உண்மைகளை மறைத்துவிட்டு தான்தோன்றித்தனமாக அண்ணாமலை விமர்சனம் செய்வது நாகரீகமான அரசியல் இல்லை” என்று கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே லக்கமத்தனப்பள்ளி கிராமத்தில் மார்கண்டேயன் ஆற்றில் இருந்து ஏரிக்கு செல்லும் பாசன கால்வாய் ரூ.57 லட்சத்தில் புனரமைக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று (ஜனவரி 12) நடைபெற்றது.
இதில் அதிமுக துணை பொதுச் செயலாளரும், வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான கேபி.முனுசாமி பங்கேற்று துவக்கி வைத்தார்.
காமராஜருடன் ஒப்பீடா?
அதன்பின்னர் அங்கிருந்த செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், “பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் செல்கிறார். கடந்த 10,11 தேதிகளில் கிருஷ்ணகிரி வந்தார். இதில் சிறப்பு ஒன்றுமில்லை.
பாதயாத்திரையில் பிரதமர் மோடியை காமராஜருடன் ஒப்பிட்டு அவர் பேசியுள்ளார். இது கண்டனத்திற்குரியது.
பிரதமர் மோடி மட்டுமல்ல தற்காலத்தில் உள்ள தலைவர்கள் யாரையும் மக்களுக்காக மட்டுமே வாழ்ந்து மறைந்த காமராஜருடன் ஒப்பிட்டு பேச முடியாது.
சொந்த மாநிலத்திற்கு மட்டுமே பிரதமர்
சமீபத்தில் தமிழ்நாட்டில் நடந்து முடிந்த முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து அண்ணாமலை பேசியுள்ளார்.
அவரிடம் நான் கேட்கிறேன், ‘ஒரே நாடு ஒரே தேசம் என்று சொல்லும் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள், எல்லா மாநில முதல்வர்கள் நடத்தும் மாநாட்டிலும் கலந்துகொண்டு, அங்கு வரும் தொழில் முனைவோர்களிடம் ‘இங்கு தொழில் தொடங்குங்கள் பாதுகாப்பான மாநிலம்’ என்று சொல்வார்களா?’ அப்படி சொல்லி இருந்தால் உண்மையில் பாராட்டலாம்.
ஆனால் குஜராத்துக்கு சென்று தொழில் முதலீட்டாளர்களை அழைத்து பேசி அனுப்புகிறார். ஒரு நாட்டின் பிரதமரான மோடி தனது சொந்த மாநிலம் என்ற சிறிய வட்டத்திற்குள் அமர்ந்து வேலை பார்க்கிறார்.
பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்காமல் வஞ்சிகிறது என்பதே உண்மை. நிலைமை இப்படி இருக்கும் பட்சத்தில் தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாடு குறித்து பேச அண்ணாமலைக்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் இல்லை.
பாஜக அரசே பாராட்டியுள்ளது!
திராவிட இயக்கங்கள் ஆண்ட 50 ஆண்டுகால ஆட்சியில், குறிப்பாக அதிமுகவின் எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக விளங்கி இருக்கிறது.
அண்ணாமலை குற்றஞ்சாட்டுகிற அதே தமிழ்நாடு தான் அவரது மத்திய பாஜக ஆட்சியில் ’சிறந்த மாநிலம்’ என பாராட்டு பத்திரம் பெற்றது.
அதையெல்லாம் மறைத்துவிட்டு தான்தோன்றித்தனமாக இங்குள்ள அரசியல்வாதிகளை அண்ணாமலை விமர்சனம் செய்வது நாகரீகமான அரசியல் இல்லை.
ராமர் கோவில் – விருப்பமில்லை!
அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு நிகழ்வு அரசியல் பேச அதிமுகவிற்கு விருப்பமில்லை. இதுதான் அதிமுக நிலைப்பாடு.
தேர்தலை முன்வைத்து தான் பாஜக அரசு அவசரம் காட்டுகிறது என்பது காங்கிரஸின் நிலைப்பாடு. அதில் நாம் ஒன்றும் கருத்து தெரிவிக்க முடியாது. ” என்று கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
கேப்டன் மில்லர் : ட்விட்டர் விமர்சனம்!
”எனக்கு உடல்நலமில்லையா?”: அயலக தமிழர் விழாவில் முதல்வர் ஸ்டாலின்