அது பேனாவல்ல… அமைச்சர் தங்கம் தென்னரசு

Published On:

| By Jegadeesh

அது பேனாவல்ல எங்கள் தலைவர் கலைஞரின் கை வாள் என்று தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரை சிறப்பிக்கும் வகையில் தமிழக அரசு 134 அடி உயரத்தில் பிரமாண்ட பேனா வடிவலான நினைவு சின்னத்தை சென்னை மெரினா கடற்கரை அருகே கடலுக்குள் நிறுவ திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இத்திட்டத்தை கடுமையாக விமர்சித்திருந்தார். பேனா சிலையெல்லாம் நிறுவ முடியாது . நான் நிறுவ விட மாட்டேன் .யாருடைய பணம் இது. இப்போது பேனா வைப்பீர்கள் நாளை உதயநிதி முதல்வரானால் எனது தந்தையின் விக் என்று ஒன்றை கடலுக்கு நடுவே கொண்டு வந்து வைப்பார். இதெல்லாம் தேவையில்லாத சேட்டை என்றார்.

இதற்கு பதிலளித்த பொதுப்பணி துறை அமைச்சர் எ. வ. வேலு ”கலைஞருக்கு செய்வதென்பது தமிழக மக்களின் நன்றிக்கடன். தமிழக மக்களின் நலனுக்காக  அதிகமான அரசாணைகளை அறிவித்தவர் என்றும் அவருக்கு கடலுக்கு நடுவில் பேனா வைப்பதை விமர்சிப்பவர்கள் அவருக்கு துரோகம் செய்வதாக அர்த்தம்” என்று கூறினார்.

தற்போது கலைஞருக்கு கடலுக்குள் நிறுவவிருக்கும் பேனா சிலைக்கு ஆதரவாகவும் அதை எதிர்த்தும் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன . இந்நிலையில், தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது ட்விட்டர்  பக்கத்தில் ”அந்த பேனா” என்ற தலைப்பில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்,

“தலைவர் கலைஞர் அவர்கள் 1945ம் ஆண்டு புதுச்சேரியில் இருந்து வெளிவந்த ‘தொழிலாளர் மித்திரன்’  இதழில் எழுதிய கட்டுரையின் தலைப்பு இது!
காந்தியடிகளின் ஆசிரமத்தில் இருந்து காணாமற் போய்விட்ட பேனா ஒன்றினைக் குறித்த கட்டுரை அது. அந்தக் கட்டுரைக்குப் பின்னர் தான்
புதுச்சேரி வீதிகளில் அவர் தாக்கப்பட்டு, பின்னர் தந்தை பெரியார் அவர்களால் ஈரோட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு குடி அரசு இதழில் எழுதத் தொடங்கினார்.

படத்தில் இருப்பது காணாமற் போன பேனா அல்ல; கலைஞரின் கை வாள்!
எத்தனையோ எழுத்தோவியங்களை வடித்தெடுத்த தலைவரின் கையில் இருந்த அறிவாயுதம். தலைவருடனான என் நினைவுகள் காலப் பெட்டகம் எனில் இந்தப் பேனாவோ நான் அடைந்த வாழ்நாள் பெருமை” என்று குறிப்பிட்டுள்ளார் அமைச்சர் தங்கம் தென்னரசு.

மு.வா.ஜெகதீஸ் குமார்-

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel