சென்னை எண்ணூர் பகுதியில் இன்று (டிசம்பர் 17) ஆய்வு மேற்கொண்ட கமல்ஹாசன், ”எண்ணெய் கழிவை அகற்றும் பணியில் பாதிக்கப்பட்ட மீனவர்களிடமே பாத்ரூம் பக்கெட் கொடுத்து அள்ளுங்கள் என்பது மனித தன்மையற்ற செயல்” என்று வேதனை தெரிவித்துள்ளார்.
மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையின்போது சென்னை எண்ணூர் சிபிசிஎல் நிறுவனத்திலிருந்து வெளியேறிய கச்சா எண்ணெய் கழிவுகள் கொசஸ்தலை ஆறு மற்றும் கடல் முகத்துவாரத்தில் படர்ந்து பரவியது.
இதனால் அங்குள்ள மீனவர்களின் வீடுகள் மற்றும் படகுகள் சேதமாகி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒருவார காலமாக அங்கு எண்ணெய்க் கழிவுகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வரும், இந்த நிலையில் எண்ணூர் காட்டுக்குப்பம் முகத்துவார பகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் இன்று காலை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
பைபர் படகில் சென்று எண்ணெய் கழிவு பாதிப்புகளை பார்வையிட்ட கமல்ஹாசன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
நிறுவனத்திற்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்!
அப்போது அவர் பேசுகையில், “எண்ணூர் முகத்துவாரப்பகுதிக்கு வருவது எனக்கு முதல்முறையல்ல. 7 வருடத்திற்கு வரும்போது இப்போதும் அப்படியே நிற்கிறது.
இப்போது முந்தைய சூழ்நிலையை விட மோசமான சூழல் ஏற்பட்டுள்ளது. ஆற்றில் பிளாஸ்டிக் கம்பளம் விரித்தது போல் எண்ணெய் கழிவு படர்ந்துள்ளது.
இதனை இன்றைக்குள் (டிசம்பர் 17) அகற்ற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் நடைபெற்று வரும் பணிகளை பார்க்கும்போது இன்னும் 17 நாள் ஆனாலும் அகற்றுவது கடினம்.
எண்ணெய் கழிவை அகற்றும் பணியில் நவீன இயந்திரங்களை பயன்படுத்தாமல், பாதிக்கப்பட்ட மீனவர்களிடமே பாத்ரூம் பக்கெட் கொடுத்து அள்ளுங்கள் என்பது மனித தன்மையற்ற செயல்.
ஆனால் இந்த எண்ணெய் கழிவு வெளியேறியதற்கு காரணம் நான், நீ என்று ஒருவர் மீது ஒருவர் ஆள் காட்டிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த எண்ணூர் பகுதியில் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்பு, மீனவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பிற்கு பொறுப்பேற்று அதற்கான செலவை சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனம் வழங்க வேண்டும்.
மேலும் மக்களின் உயிருடன் விளையாடும் இதுபோன்ற நிறுவனங்களுக்கு அரசு கடும் தண்டனை அளிக்க வகை செய்யவேண்டும். அப்போது தான் அவர்களுக்கு பயம் வரும். இல்லையென்றால் அப்பாவி மக்களையும், அற்புதமான சுற்றுசூழலையும் வருடாவருடம் இதுபோன்ற நிறுவனங்கள் அழித்து வரும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடும் கிடைக்கும் என்பதற்கு மத்திய, மாநில அரசுகள் உறுதியளிக்க வேண்டும்.
நான் இரண்டு நாட்களுக்கு முன்பு வந்திருந்தால் எனக்கு மூச்சு முட்டியிருக்கும். இப்போது இயற்கையின் தயவினால் அது குறைந்துள்ளது.
அரசின் மீன்வளத்துறை அமைச்சர் இன்னும் இந்த பகுதிக்கு வரவில்லை. பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவில்லை என்பது வழக்கமான ஒன்றுதானே.
கூடிய கூக்கிரத்தில் அரசு ஆற்றில் கலந்துள்ள எண்ணெய் கழிவுகளை அகற்றி, பாதிக்கப்பட்ட மீனவ மக்களின் வாழ்வாதரத்திற்கு வழிவகை செய்யவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
‘தென் மாவட்டங்களுக்கு சம்பவம் இருக்கு…’: வெதர்மேன் அப்டேட்!
IPL2024: ரோஹித் மனைவி கொடுத்த ‘க்ளூ’… அப்போ அது கன்பார்ம் தானா?