”தோல்விக்கு தொண்டர்களை பழக்குவது பாவ காரியம்” : அதிமுக ஒன்றுபட பன்னீர் அழைப்பு!

Published On:

| By christopher

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. தூத்துக்குடி, நெல்லை, தேனி உள்ளிட்ட 7 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது.

இந்த தேர்தலில் 28 தொகுதிகளில் 2ஆம் இடத்தையும், 11 தொகுதிகளில் மூன்றாம் இடத்தையும், 1 தொகுதியில் 4வது இடத்தையும் பெற்று மோசமான தோல்வியை சந்தித்துள்ளது.

மேலும் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இதுவரை நடந்த 10 தேர்தல்களிலும் தோல்வியை மட்டுமே அடைந்துள்ளதால் அதிமுக தொண்டர்கள் மத்தியிலும் அதிருப்தி நிலவுகிறது.

இந்த நிலையில், கட்சியின் நலன் கருதியும், தமிழக மக்களின் நலன் கருதியும் அதிமுகவினர் அனைவரும் ஒற்றுமையோடு இணைந்து பணியாற்ற வேண்டும் என்று சசிகலா நேற்று அழைப்பு விடுத்திருந்தார்.

இதனையடுத்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அதிமுகவை ஒற்றுமையாக மீட்டெடுக்க தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்து இன்று (ஜூன் 4) அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் துவக்கப்பட்டு, புரட்சித் தலைவி ஜெயலலிதாவால் கட்டிக்காக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒற்றுமையால் மீட்டெடுக்க அறைகூவல்.

ஒற்றைக் குச்சியை ஒடிப்பது சுலபம். கத்தைக் குச்சியை முறிப்பது கடினம்.” இனியும் சமாதானம் சொல்லி, தோல்விக்கு தொண்டர்களை பழக்குவது பாவ காரியமாகும். ’தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம், ஓர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே’ என்னும் கழக நிறுவனர், புரட்சித் தலைவர், மக்கள் திலகத்தின் மந்திர மொழியை மருந்தாகக் கொள்வோம்.

நமது வெற்றியை நாளை சரித்திரமாக்கிட மனமாச்சரியம் மறந்து ஒன்றரைக் கோடி தொண்டர்களும் ஒன்றாகுதல் காண்போம். ஜெயலலிதா உச்சத்தில் அமர்த்திப்போன கட்சியையும், அவர் ஒப்படைத்துப் போன ஆட்சியையும் ஒற்றுமையால் மீட்டெடுக்க எத்தகைய தியாகத்திற்கும் ஆயத்தமாவோம். ” என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், பாஜக கூட்டணியில் சுயேட்சையாக ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிட்ட ஓ பன்னீர்செல்வம், அதிமுக வேட்பாளரை 3வது இடத்திற்கு தள்ளி, 3,42,882 வாக்குகள் பெற்று 2ஆம் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

உ.பி-யில் குழந்தைகளின் முன்பு தந்தை சுட்டுக்கொலை: அதிரவைக்கும் வீடியோ!

Rohit Sharma: தோனி சாதனைக்கு முற்றுப்புள்ளி… மிகப்பெரிய வரலாறு படைத்த ‘ரோகித் சர்மா’