மோடியின் ’25’ வாஷிங் மெஷின்… துவைத்து தொங்க போட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ்!

அரசியல்

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் என முதல்வர்கள் தொடங்கி தமிழகத்தில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வரை பலரும் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தேர்தல் பயத்தால் எதிர்க்கட்சிகளை குறிவைத்து அமலாக்கத் துறை, வருமான வரித்துறை, சிபிஐ மூலம் மத்தியில் ஆளும் பாஜக அரசு பழிவாங்குகிறது என்பது எதிர்க்கட்சிகள் வைக்கும் முக்கிய குற்றசாட்டு.

இதுதவிர ஊழல் செய்தவர்கள் பாஜகவில் இணைந்தால் அவர்கள் புனிதர்களாகிவிடுவார்கள் என்றும் விமர்சித்து வருகின்றனர்.

அந்தவகையில், ஊழலை எதிர்கொண்ட எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள், கடந்த 2014ஆம் ஆண்டு முதல் தற்போது வரை யார் யார் பாஜகவில் இணைந்திருக்கிறார்கள் என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

2014 முதல், ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் மத்திய அமைப்புகளின் வழக்குகளை எதிர்கொண்ட 25 முக்கிய அரசியல்வாதிகள் பாஜகவில் இணைந்துள்ளனர் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் பட்டியலுடன் தெரிவித்துள்ளது.

இதில் 10 பேர் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள். தேசியவாத காங்கிரஸ், சிவசேனா ஆகிய கட்சிகளில் இருந்து தலா 4 பேர், திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து மூன்று பேர், சமாஜ்வாதி மற்றும் ஒஎஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து தலா ஒருவர் பாஜகவில் இணைந்துள்ளனர்.

இவர்கள் மீதான  வழக்குகளில் மூன்று வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன; இன்னும் 20 பேர் மீதான வழக்குகள் நிலுவையில் உள்ளன அல்லது விசாரணை இல்லாமல் முடக்கப்பட்டுள்ளன, சொல்லப்போனால் இவர்கள் மீதான மத்திய விசாரணை அமைப்புகளின் நடவடிக்கை கட்சி மாறிய பிறகு முடங்கியிருக்கிறது.

இந்தப் பட்டியலில் உள்ள 25 அரசியல்வாதிகளில் 6 பேர், சில வாரங்களுக்கு முன்புதான் பாஜகவுக்குச் சென்றிருக்கின்றனர்.

சுவேந்து அதிகாரி

நாரதா ஸ்டிங் ஆபரேஷன் வழக்கில் மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவரான முன்னாள் எம்.பி சுவேந்து அதிகாரி மீது வழக்குத் தொடர மக்களவை சபாநாயகரின் அனுமதிக்காக 2019 ஆம் ஆண்டு முதல் சிபிஐ காத்திருந்தது. இதையடுத்து 2020ஆம் ஆண்டு அவர் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு சென்றார். இந்நிலையில் அவர் மீதான வழக்கு, குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லாமல் பெயரளவில் மட்டுமே உள்ளது.

ஹிமந்தா பிஸ்வா சர்மா

அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவான் ஆகியோர் மீதான வழக்குகளும் இந்த நிலையில் தான் உள்ளன.

2014-ம் ஆண்டு சாரதா சிட் ஃபண்ட் ஊழல் வழக்கில், அசாம் முதல்வர் பிஸ்வா சிபிஐ விசாரணை மற்றும் சோதனைகளை எதிர்கொண்டார். ஆனால் 2015ஆம் ஆண்டு காங்கிரஸில் இருந்து  பாஜகவில் இணைந்த பிறகு பிஸ்வா மீதான வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை.

அசோக் சவான்

ஆதர்ஷ் வீட்டுவசதி வழக்கில் அசோக் சவான் மீதான சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையின் நடவடிக்கைகளுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்த நிலையில், அவர் இந்த ஆண்டு பாஜகவில் இணைந்தார்.

அஜித் பவார்

கட்சி மாறியது : தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கு தாவல்

வழக்கு விவரம் : மகாராஷ்டிரா மாநில கூட்டுறவு வங்கியில் முறைகேடு நடந்ததாக மும்பை பொருளாதார குற்றப்பிரிவு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மற்றும் அஜித் பவார் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தது.

ஆகஸ்ட் 2019 : பொருளாதார குற்றப்பிரிவு எப்.ஐ.ஆர் பதிவு செய்தது.

செப்டம்பர் 2019 : இந்த எப்.ஐ.ஆர் அடிப்படையில் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்தது.

அக்டோபர் 2020 : பொருளாதார குற்றப்பிரிவு வழக்கை முடித்துவைக்க நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. அமலாக்கத் துறை அதை எதிர்த்தது.

ஏப்ரல் 2022: அஜித் பவார் பெயர் இல்லாமல் ஒரு குற்றப்பத்திரிகையை அமலாக்கத் துறை தாக்கல் செய்தது.

ஜூன் 2022 :சிவசேனா கட்சி உடைந்து ஏக்நாத் ஷிண்டே பாஜகவில் இணைந்து மாநிலத்தில் என்.டி.ஏ கூட்டணி ஆட்சி அமைக்கிறது.

ஜூலை 2023: அஜித் பவார் பாஜகவில் இணைந்து என்.டி.ஏ கூட்டணி ஆட்சியில் துணை முதல்வர் ஆகிறார்.

ஜனவரி 2024: பொருளாதார குற்றப்பிரிவு மீண்டும் அவர் மீதான வழக்கை முடித்து வைக்க அறிக்கை தாக்கல் செய்தது.

வழக்கின் தற்போதைய நிலை: பொருளாதார குற்றப்பிரிவு வழக்கை முடித்து வைக்க கோரிய விவகாரத்தில் அமலாக்கத் துறை இடையீட்டு மனு தாக்கல் செய்து வழக்கு நிலுவையில் உள்ளது.

பிரஃபுல் படேல்

கட்சி மாறியது : தேசியவாத காங்கிரஸில் இருந்து பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி

வழக்கு விவரம் : மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சராக பிரஃபுல் படேல் பதவி வகித்தபோது, ஏர் இந்தியா நிறுவனத்துக்காக விமானங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றதாக வழக்குத் தொடரப்பட்டது. சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தனித்தனியே வழக்குகளை தொடர்ந்தன.

மே 2017: சிபிஐ எஃப்ஐஆர் பதிவு செய்தது

மே 2019 : அமலாக்கத் துறை தனது வழக்கில் பிரஃபுல் படேலின் பெயரை குறிப்பிடுகிறது.

ஜூன் 2023: பிரஃபுல் படேல் என்.டி.ஏ கூட்டணியில் இணைகிறார்.

மார்ச் 2024: வழக்கை முடிக்க சிபிஐ அறிக்கை தாக்கல் செய்கிறது.
தற்போதைய நிலை: பிரஃபுல் படேல் மீதான வழக்கை முடித்து வைக்க கோரிய வழக்கு நிலுவையில் இருக்கிறது.

பிரதாப் சார்நாயக்

கட்சி மாற்றம் : சிவசேனாவில் இருந்து பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் 2022ஆம் ஆண்டு இணைகிறார்.

வழக்கு விவரம் : மகாராஷ்டிராவைச் சேர்ந்த டாப்ஸ் குரூப் நிறுவனத்துக்கு பாதுகாப்பு ஒப்பந்தம் பெற உதவியதாக சிவசேனா செய்தித் தொடர்பாளராக இருந்த பிரதாப் சார்நாயக் மீது மும்பை பொருளாதார குற்றப்பிரிவு மற்றும் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்தது.

நவம்பர் 2020: மும்பை போலீஸ் பதிவு செய்த எப்.ஐ.ஆரின் அடிப்படையில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.

ஜனவரி 2021: அவர் மீதான வழக்கை முடித்து வைக்க மும்பை பொருளாதார குற்றப்பிரிவு அறிக்கை தாக்கல் செய்கிறது.

ஜூன் 2022: பிரதாப் சார்நாயக் என்.டி.ஏ கூட்டணியில் ஏக்நாத் ஷிண்டேவுடன் இணைகிறார்.

செப்டம்பர் 2022: பிரதாப் சார்நாயக் மீதான வழக்கை முடித்து வைக்க கோரிய போலீஸின் அறிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. இது அமலாக்கத் துறை விசாரணையை மழுங்கடிக்கிறது.

வழக்கின் தற்போதைய நிலை : அடுத்தக்கட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

இப்படி… மத்திய விசாரணை அமைப்புகளின் சோதனை மற்றும் விசாரணைகளை எதிர்கொண்ட தேசியவாத காங்கிரஸில் இருந்த ஹசன் முஸ்ரிப் 2023ல் பாஜகவில் இணைந்தார்.

சிவசேனாவில் இருந்த பாவனா கவாலி, யாமினி மற்றும் யஸ்வந்த் யாதவ், தெலுங்கு தேசம் கட்சியில் இருந்த சி.எம்.ரமேஷ், சுஜனா சவுத்ரி, காங்கிரஸில் இருந்த பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் மகன் ரனீந்தர் சிங்,

சமாஜ்வாதி கட்சியில் இருந்த சஞ்சய் செத், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்த கீதா, திரிணமூல் கட்சியில் இருந்த சோவன் சட்டர்ஜி, தபாஸ் ராய், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்த சாகன் புஜ்பால், காங்கிரஸில் இருந்த கிரிஷ்பா சங்கர் சிங், திகம்பர் காமத், நவீன் ஜிண்டால், அர்ச்சனா பாட்டில், கீதா கோதா, பாபா சித்திக், ஜோதி மிர்தா உள்ளிட்ட அரசியல்வாதிகள் அமலாக்கத் துறை, வருமான வரித்துறை, சிபிஐ நடவடிக்கைகளை தொடர்ந்து பாஜகவில் இணைந்துள்ளனர். இவர்கள் மீதான வழக்குகளில் பெரிதாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்தநிலையில் தான் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின்,  “பா.ஜ.க.வின் ‘வாஷிங் மெஷின்’ பாணியை ஆதாரப்பூர்வமாகத் தோலுரித்துள்ளது இந்தியன் எக்பிரஸ் நாளேடு. பா.ஜ.க.வுக்குத் தாவிய எதிர்க்கட்சித் தலைவர்கள் 25 பேரில், 20 பேர் மீதான ஊழல் வழக்குகளில் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், 3 பேர் மீதான வழக்குகள் மொத்தமாக முடித்தே வைக்கப்பட்டு விட்டன.

10 ஆண்டு பா.ஜ.க. ஆட்சி என்பது இந்தியாவின் உயர் விசாரணை அமைப்புகளை எவ்வளவு இழிவான நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்பதற்கு இதைவிடச் சான்று வேண்டுமா?

“பேச நா இரண்டுடையாய் போற்றி” என அண்ணா அன்று சொன்னது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ… ஊழல்வாதிகளை எல்லாம் கட்சியில் இணைத்து உத்தமர்களாக்கிவிட்டு, ஊழலை ஒழிப்போம் எனக் கூசாமல் புளுகும் பிரதமருக்கு நன்றாகவே பொருந்துகிறது!

மோடியின் குடும்பம் என்பது ‘ED – IT – C.B.I.’தான்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

அந்தவகையில், அரசியல் ஆதாயத்துக்காக விசாரணை அமைப்புகளை பாஜக பயன்படுத்துகிறது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

அந்த கண்ணு, உதடு, மூக்கு… அவங்ககிட்ட என்னமோ இருக்கு: விஜய் தேவரகொண்டா!

காங்கிரஸுக்கு குட்பை: பாஜகவில் இணைந்தார் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங்

+1
0
+1
0
+1
5
+1
1
+1
0
+1
0
+1
0

Comments are closed.