ஐ.நா. அதிகாரிகளுக்கு விசா மறுத்த இஸ்ரேல்: அப்படி என்ன பேசினார் ஐ.நா. பொதுச் செயலாளர்?

அரசியல் இந்தியா

ஐ.நா. அதிகாரிகள் இஸ்ரேலுக்குள் நுழைய இனி விசா வழங்கமாட்டோம் என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது.

அக்டோபர் 7 ஆம் தேதி பாலஸ்தீனத்தில் இருந்து ஹமாஸ் தீவிரவாத அமைப்பு இஸ்ரேல் மீது 5 ஆயிரம் ராக்கெட்டுகளை ஏவி தாக்குதலை நடத்தியது. இதையடுத்து பதிலடி கொடுப்பதற்காக அன்று முதல் இப்போது (அக்டோபர் 25) வரை இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் காசா நகர் மீது ஏவுகணைத் தாக்குதல்களை சரமாரியாக நடத்தி வருகிறது.

கடந்த வாரம் காசா நகரில் மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வந்தன. இதில் 500 பேர் வரை கொல்லப்பட்டனர். ஆனால் இந்த தாக்குதலை தான் நடத்தவில்லை என்று இஸ்ரேல் மறுத்தது. ஆனால் இஸ்ரேல் தான் இந்த தாக்குதலை நடத்தியதாக அல் ஜசீரா ஊடகம் வீடியோக்களோடு வெளியிட்டது.

இதற்கிடையே போர் நிறுத்தம் ஏற்படவேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியா குட்டெரெஸ் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று அக்டோபர் 24 ஐ.நா. அவையில் அதன் பொதுச் செயலாளர் அண்டோனியா குட்டெரெஸ் பேசிய பேச்சுக்கு இஸ்ரேல் அங்கேயே பதில் கொடுத்தது. இது வாக்குவாதமானது.

பாதுகாப்பு கவுன்சிலின் உயர் மட்ட அமர்வைத் தொடங்கிவைத்துப் பேசிய ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியா குட்டெரெஸ், “நான் ஒரு சிறிய அறிமுகம் செய்து, பின்னர் எனது சகாக்களிடம் பாதுகாப்பு கவுன்சிலுக்கு கள நிலவரத்தை விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மத்திய கிழக்கின் நிலைமை மணிக்கணக்கில் மோசமாகி வருகிறது. காசாவில் போர் மூளுகிறது மற்றும் பிராந்தியம் முழுவதும் பரவும் அபாயம் உள்ளது.

மக்கள் இடம்பெயர்ந்து சென்றுகொண்டே இருக்கிறார்கள். பதற்றங்கள் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. இது போன்ற ஒரு முக்கியமான தருணத்தில், கொள்கைகளில் தெளிவாக இருப்பது இன்றியமையாதது — குடிமக்களை மதிக்க வேண்டும்.

இஸ்ரேலில் ஹமாஸின் பயங்கரமான மற்றும் முன்னோடியில்லாத அக்டோபர் 7 பயங்கரவாத செயல்களை நான் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டித்தேன், கண்டிக்கிறேன். வேண்டுமென்றே கொலை செய்தல், காயப்படுத்துதல் மற்றும் பொதுமக்களைக் கடத்துதல் – அல்லது பொதுமக்கள் இலக்குகளுக்கு எதிராக ராக்கெட்டுகளை ஏவுதல் ஆகிய எதையும் நியாயப்படுத்த முடியாது.

அனைத்து பணயக்கைதிகளும் மனிதாபிமானத்துடன் நடத்தப்பட வேண்டும் மற்றும் உடனடியாக  நிபந்தனைகள் இல்லாமல் விடுவிக்கப்பட வேண்டும். ஹமாஸின் தாக்குதல்கள் வெற்றிடத்தில் நடக்கவில்லை, மக்கள் மீதுதான் நடந்தது என்பதை அங்கீகரிப்பதும் முக்கியம்.

பாலஸ்தீன மக்கள் 56 ஆண்டுகளாக (இஸ்ரேல் அதிகாரபூர்வமாக உருவான 1948 இல் இருந்து என்பதைத்தான் இப்படி மறைமுகமாக குறிப்பிடுகிறார்) ஆக்கிரமிப்புக்கு ஆளாகியுள்ளனர். அவர்கள் தங்கள் நிலம் குடியேற்றங்களால் தொடர்ந்து விழுங்கப்படுவதையும் வன்முறையால் பாதிக்கப்பட்டதையும் பார்த்திருக்கிறார்கள். அவர்களின் பொருளாதாரம் முடக்கப்பட்டது, அவர்களின் வீடுகள் இடிக்கப்பட்டன. அவர்களின் அவலநிலைக்கு அரசியல் தீர்வு கிடைக்கும் என்ற அவர்களின் நம்பிக்கை மறைந்து வருகிறது.

பாலஸ்தீன மக்களின் மனக்குறைகள் ஹமாஸின் பயங்கரமான தாக்குதல்களை நியாயப்படுத்த முடியாது. அதுபோலவே ஹமாஸின் அந்த பயங்கரமான தாக்குதல்களுக்காக பாலஸ்தீன மக்கள் மீதான கூட்டுத் தண்டனையை நியாயப்படுத்த முடியாது” என்று ஐ.நா. பொதுச் செயலாளர் கூறியதும் அவையில் இருந்த இஸ்ரேல் பிரதிநிதி அதிர்ந்தார்.

தொடர்ந்து பேசிய ஐ.நா. பொதுச் செயலாளர், “போருக்குக் கூட விதிகள் உண்டு. அனைத்து தரப்பினரும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் தங்கள் கடமைகளை நிலைநிறுத்தி மதிக்க வேண்டும். பொதுமக்களை காப்பாற்ற வேண்டும். மருத்துவமனைகளை மதிக்கவும் பாதுகாக்கவும் வேண்டும். இன்று 600,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களுக்கு ஐ.நா. அடைக்கலம் அளித்து வருகிறது.

இஸ்ரேலியப் படைகளால் காசா மீது இடைவிடாத குண்டுவீச்சு, பொதுமக்கள் உயிரிழப்புகளின் அளவு மற்றும் சுற்றுப்புறங்களின் மொத்த அழிவு ஆகியவை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன, மேலும் அவை ஆழமாக ஆபத்தானவை.

ஐ.நா.வின் UNRWA க்காக பாலஸ்தீனத்தில் நிவாரணப் பணிகளை செய்து வரும் ஐ.நா,. நண்பர்களில் துரதிர்ஷ்டவசமாக, குறைந்தது 35 பேர் மற்றும் கடந்த இரண்டு வாரங்களாக காசா குண்டுவீச்சில் கொல்லப்பட்டனர். அவர்களுக்கு நான் இரங்கல் செலுத்துகிறேன். இந்தக் கொலைகளுக்கும் இதே போன்ற பல கொலைகளுக்கும் நான் கண்டனம் தெரிவித்ததற்கு அவர்களின் குடும்பங்களுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

எந்தவொரு ஆயுத மோதலிலும் பொதுமக்களின் பாதுகாப்பு மிக முக்கியமானது. பொதுமக்களைப் பாதுகாப்பது என்பது அவர்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதைக் குறிக்காது.

குடிமக்களைப் பாதுகாப்பது என்பது, தங்குமிடம், உணவு, தண்ணீர், மருந்து, எரிபொருள் எதுவும் இல்லாத தெற்கே ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களை வெளியேறுமாறு கட்டளையிடுவதும், பின்னர் தெற்கே தொடர்ந்து குண்டுகளை வீசுவதும் அல்ல” என்று பெயர் குறிப்பிடாமல் இஸ்ரேலை கடுமையாகக் கண்டித்திருக்கிறார் ஐநா பொதுச் செயலாளர் அண்டோனியா குட்டெரெஸ்.

”காசாவில் சர்வதேச மனிதாபிமான சட்டம் அப்பட்டமாக மீறப்படுவதை கண்டு நான் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன். நான் தெளிவாக கூறுகிறேன்: ஆயுத மோதலில் ஈடுபடும் எந்தவொரு தரப்பினரும் சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல.

இறுதியாக, மனித கண்ணியத்தை நிலைநிறுத்தும் கொள்கையில் நாம் தெளிவாக இருக்க வேண்டும். நாம் யூத எதிர்ப்பு, முஸ்லிம் எதிர்ப்பு மதவெறி மற்றும் அனைத்து வகையான வெறுப்பு சக்திகளுக்கும் எதிராக நிற்க வேண்டும். ஐநா சாசனம் அமலுக்கு வந்து 78 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் ஐக்கிய நாடுகள் தினம் இன்று. அந்த சாசனம் அமைதி, நிலையான வளர்ச்சி மற்றும் மனித உரிமைகளை முன்னேற்றுவதற்கான நமது பகிரப்பட்ட உறுதிப்பாட்டை நாம் செயல்படுத்த வேண்டும்” என்று உரையாற்றினார் ஐ.நா பொதுச்செயலாளர்.

அவர் பேசி முடித்த பின் இஸ்ரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் எலி கோஹன் கோபத்தோடு எழுந்து ஐ.நா. பொது செயலாளரை நோக்கி விரலை நீட்டி, அக்டோபர் 7 அன்று இஸ்ரேலிய வரலாற்றில் மிக மோசமான தாக்குதலில் கொல்லப்பட்ட பொதுமக்களின் கணக்குகளை விவரித்தார்.

“மிஸ்டர் பொதுச் செயலாளார் நீங்கள் எந்த உலகில் வாழ்கிறீர்கள்?” என்று கோபத்தோடு கேட்டார் இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சர் கோஹன்.

ஐ.நா. பொதுச் செயலாளரின் இந்த கருத்துகளுக்கு எதிராக இஸ்ரேல் நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டது. “ இனி இஸ்ரேலுக்குள் ஐ.நா. அதிகாரிகள் யாரும் நுழைய அனுமதி இல்லை” என்று அறிவித்துள்ளது இஸ்ரேல்.
ஐ.நா மனிதாபிமான விவகாரங்களின் தலைவர் மார்ட்டின் கிரிஃபித்ஸுக்கு விசா வழங்க மறுத்ததாகவும் இஸ்ரேல் கூறியுள்ளது.

ஐநாவுக்கான இஸ்ரேல் தூதர் கிலாட் எர்டன் ராணுவ வானொலியில் பேசும்போது, “ஐ.நா. பொதுச் செயலாளரின் கருத்துகளை கண்டிக்கும் வகையில் ஐநா பிரதிநிதிகளுக்கு விசா வழங்க மறுப்போம். மனிதாபிமான விவகாரங்களுக்கான துணை பொதுச்செயலாளர் மார்ட்டின் கிரிஃபித்ஸுக்கான விசாவை நாங்கள் ஏற்கனவே மறுத்துள்ளோம். ஐ.நா.வுக்கு பாடம் புகட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஐ.நா பொதுச்செயலாளர் குட்டெரஸை ராஜினாமா செய்ய வேண்டும்” என்றும் அவர் கூறினார்.

வேந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு குறைபாடு இல்லை: பிரேம் ஆனந்த் சின்ஹா

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு: ரவுடி கைது!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0