லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: 100 பேர் பலி, அதிகரிக்கும் போர் பதற்றம்!

Published On:

| By Selvam

லெபனானில் நேற்று (செப்டம்பர் 23) இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 100 பேர் உயிரிழந்தனர். மேலும், 400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இஸ்ரேல் ராணுவம் மற்றும் லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா அமைப்புக்கு இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது.

கடந்த செப்டம்பர் 17-ஆம் தேதி ஹிஸ்புல்லா இயக்கத்தினர் பயன்படுத்திய 5,000 பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறின. இதில் பலர் உயிரிழந்தனர்.

இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது மிகப் பெரிய அளவில் தாக்குதல் நடத்துவோம் என்று ஹிஸ்புல்லா அமைப்பு எச்சரிக்கை விடுத்தது.

இதனைத் தொடர்ந்து, சில தினங்களுக்கு முன்பு லெபனானில் ஹிஸ்புல்லா இயக்கத்தினரைக் குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது.

லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 14பேர் உயிரிழந்தனர். இவ்வாறு மோதல் நீடித்த வண்ணம் இருந்தது.

இந்த நிலையில், லெபனானில் நேற்று (திங்கட்கிழமை) இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 100 பேர் உயிரிழந்தனர். மேலும், 400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

முன்னதாக, இஸ்ரேல் நேற்று அதிகாலை தெற்கு லெபனான் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. அதைத் தொடர்ந்து, அடுத்த நகர்வாக ஹிஸ்புல்லாக்களின் ஆயுதக்கிடங்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்திட இஸ்ரேல் திட்டமிட்டிருப்பதாக தகவலும் வெளியானது.

தெற்கு லெபனானில் கிராமங்கள், நகரப் பகுதிகள் உள்பட பல இடங்களை ஹிஸ்புல்லா ஆயுதக் கிடங்குகளாக பயன்படுத்தி வருவதாக இஸ்ரேல் தெரிவித்திருந்தது.

ஹிஸ்புல்லா அமைப்பின் மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்த உள்ள நிலையில், லெபனானில் உள்ள மக்கள் உடனடியாக தங்கள் வீடுகள் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆயுதங்களைச் சேமித்து வைத்திருப்பதாகக் கூறப்படும் கட்டிடங்களை விட்டு வெளியேறுமாறு எச்சரித்துள்ளது.

லெபனானில் இஸ்ரேல் பாதுகாப்புப் படை வான்வழித் தாக்குதல்களை மட்டுமே நடத்தி வரும் சூழலில், தரைவழித் தாக்குதல்களை உடனடியாக நிகழ்த்தும் திட்டம் குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார். இதனால், லெபனானில் பதற்றமான சூழல் நிலவுகிறது. மக்களும் அச்சத்தில் உள்ளனர்.

மோதல் தீவிரமானதிலிருந்து இஸ்ரேலிய எல்லைக்குள் ஆழமாக ஊடுருவி ஹிஸ்புல்லாக்கள் நேற்று தாக்குதல் நடத்தியது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக் கொண்ட ஹிஸ்புல்லா ராமட் டேவிட் விமானப் படைத் தளத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக அறிவித்துள்ளனர்.

இது, லெபனான் எல்லையிலிருந்து 50 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இஸ்ரேலிய விமானப் படைக்கு சொந்தமான மிக முக்கியமான விமான படை தளமாகும்.

இந்த தாக்குதலுக்கு பதிலடி தரும்விதமாக, இஸ்ரேலிய ஜெட் விமானங்கள் லெபனான் முழுவதும் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகின்றன. சுமார் 300 ஹிஸ்புல்லா நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: வாழையிலை மடக்கு

டாப் 10 நியூஸ்: சித்தராமையா வழக்கில் தீர்ப்பு முதல் அதிமுக மகளிரணி ஆர்ப்பாட்டம் வரை!

திமுக திடீர் நிபந்தனை… திருமாவளவன் ஷாக்… முறிவை நோக்கி கூட்டணி?

இருந்தாலும் அப்படி கேட்டுருக்க கூடாது: அப்டேட் குமாரு

Israel air strikes on Lebanon

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share