ஐயப்பனை இழிவுபடுத்தியதாக பாடகர் இசைவாணி மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் மீது தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு இன்று தெரிவித்துள்ளார்.
இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையத்தின் வழிகாட்டுதலின் படி 5 ஆண்டுகளுக்கு முன் ‘தி காஸ்ட்லஸ் கலக்டிவ்’ (The Castless Collective) என்ற இசைக் குழு உருவாக்கப்பட்டது. இந்த இயக்கம் தொடங்கிய முதலே பாடகராக உள்ளவர் இசைவாணி. இவர் அந்த பாடல் குழு சார்பாகப் பல பாடல்கள் பாடியுள்ளார்.
இந்நிலையில் 2018 ஆண்டு 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை சபரிமலை கோவிலுக்குள் அனுமதிக்காதது இந்திய அரசியலமைப்பிற்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த காலகட்டத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்று ‘தி காஸ்ட்லஸ் கலக்டிவ்’ குழு எழுதிய ‘ ஐ அம் சாரி ஐயப்பா” (I am sorry Iyappa) என்ற பாடலை இசைவாணி பாடியிருந்தார்.
இந்தச் சூழலில் இசைவாணி பாடிய அந்த பாடலை முன்வைத்து, அவர் இந்து மதத்தை புண்படுத்திவிட்டார் என்று சிலர் சமூக வலைத்தளத்தில் தங்களது கருத்துகளை சமீபமாகப் பகிர்ந்து வருகிறார்கள்.
இதன் தொடர்ச்சியாக இந்து மக்கள் கட்சி பெண்கள் பிரிவின் தலைவர் சுஷிலா தேவி, சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் இசைவாணி மற்றும் நீலம் அமைப்பின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்று புகார் அளித்துள்ளார்.
இதற்கு முன்னர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்திலும் இசைவாணி மற்றும் பா.ரஞ்சித் மீது புகார் அளிக்கப்பட்டிருந்தது.
இதற்கு நீலம் சார்பாக கடந்த நவம்பர் 24ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், “கோயில் நுழைவு என்பது அடிப்படை உரிமை. சட்ட ரீதியாகவும் சமூக ரீதியாகவும் மறுக்கப்பட்டவற்றைக் கேள்வி கேட்டுக்கொண்டே வந்ததின் விளைவாகத்தான் இன்று அவை சட்டமாக்கப்பட்டு இருக்கின்றன. அந்த அடிப்படை உரிமைக்கு எதிரான செயல்பாட்டைக் கண்டித்துத் தான் இந்தப் பாடல் உருவாக்கப்பட்டது.” என்று விளக்கம் அளித்திருந்தது.
இந்த நிலையில் சென்னை, கந்தகோட்டம் அருள்மிகு முத்துக்குமாரசாமி திருக்கோவிலில் இன்று (26.11.2024) அறுபடை வீடு ஆன்மீகப் பயணத்தின் முதற்கட்ட பயணத்தில் பங்கேற்கும் 200 மூத்த குடிமக்களுக்கு பயணவழிப் பைகளை வழங்கி, ஆன்மிகப் பயணப் பேருந்துகளை அமைச்சர் சேகர் பாபு கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.
பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது ஐயப்பனை இழிவு படுத்தியாக பாடகர் இசைவாணி மீது போலீஸில் அளிக்கப்பட்டுள்ள புகார் தொடர்பாக அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அவர் “எல்லோருக்கும் எல்லாம் என்று ஆட்சி செய்பவர் ஸ்டாலின். ஒரு மதத்தினர் பிற மதத்தினரை இழிவுபடுத்துவதை முதல்வர் அனுமதிக்க மாட்டார்.
இசைவாணி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதை பத்திரிகை மூலமாக அறிந்தேன். சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து, தவறு இருந்தால் இசைவாணி மீது தமிழக அரசு உறுதியாக நடவடிக்கை எடுக்கும். மதத்தால், இனத்தால், மக்களை பிளவுபடுத்த முயற்சிக்கும் சக்திகள் இந்த ஆட்சியில் தலைதூக்க முடியாது” என்று சேகர்பாபு பதிலளித்தார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
உதயநிதியின் பிறந்தநாள் பாடல்… அன்பில் சொன்ன மெசேஜ்!
அதானி விவகாரம் … மோடி மீது குற்றச்சாட்டு வைக்க ராமதாஸ் தயாரா?: வைகோ கேள்வி!
தாழ்த்தப்பட்ட மாணவனின் புத்தகத்தில் சாதிப் பெயரை எழுதிய ஆசிரியர்… பின்னணி என்ன?