கோவை நாடாளுமன்ற தொகுதியிலே பாஜக வேட்பாளராக போட்டியிடும் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, “கோவையில் ஒரு வரலாற்று மாற்றத்திற்காக நாங்கள் நிற்கிறோம். கடந்த அறுபது எழுபது ஆண்டுகளாக நிலவும் அதர்மத்துக்கு எதிராக நிற்கிறோம். தமிழ்நாடு முதலமைச்சரே வந்து கோவையில் தங்கி வேலை பார்த்தால் கூட பாஜகவை தோற்கடிக்க முடியாது.
நூற்றுக்கணக்கான கோடிகளை இங்கே கொட்டுவார்கள். ஆனால் நான் ஓட்டுக்காக ஒரு ரூபாய் கூட செலவழிக்க மாட்டேன். ஒரு புதிய அரசியலை கோவைக்கு அறிமுகப்படுத்த போகிறேன்” என்றெல்லாம் ஆவேசமாக உணர்ச்சிகரமாக பேசினார்.
அண்ணாமலை சொல்வது போல ஓட்டுக்கு ஒரு ரூபாய் கூட செலவழிக்காமல்தான் இருக்கிறதா பாஜக? கோவை உள்ளிட்ட தமிழ்நாட்டில் பாஜக போட்டியிடும் தொகுதிகளில், அதன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் பண நிலவரம் எப்படி இருக்கிறது.
பாஜக வட்டாரங்களிலேயே விசாரித்தோம்.
அண்ணாமலைக்கு அரவக்குறிச்சி ஃபிளாஷ்பேக் மறந்து போச்சா?
அண்ணாமலை ஓட்டுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்க மாட்டேன் என்று இப்போது சொல்கிறார். ஆனால் 2021 சட்டமன்றத் தேர்தலில், அவர் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் அதிமுகவோடு பாஜக கூட்டணி வைத்திருந்தது. அண்ணாமலை போட்டியிட்ட முதல் தேர்தலும் அதுதான்.
அண்ணாமலை போட்டியிட்ட அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக ஒரு ஓட்டுக்கு 300 ரூபாய் விநியோகம் செய்தது. இந்த விவரங்கள் எல்லாம் அப்போது வேட்பாளராக போட்டியிட்ட அண்ணாமலைக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அவர் அதை தடுக்கவோ தடுத்து நிறுத்தவோ இல்லை.
மாவட்டத் தலைவர்களுக்கு பட்டுவாடா!
சட்டமன்றத் தேர்தலுக்கே அப்படி என்றால் நாடாளுமன்றத் தேர்தலுக்கு இப்போது பாஜக பல வகைகளில் தயாராகியிருக்கிறது.
கோவையிலே திமுகவும் அதிமுகவும் பூத் செலவு என்று முதற்கட்டமாக ஒரு லட்சம் ரூபாய் வழங்கியிருக்கிறார்கள். இதேபோல பாரதிய ஜனதா கட்சியும் பூத்துக்கு 75 ஆயிரம் ரூபாய் கொடுத்து இருக்கிறார்கள்.
இதைத் தவிர பாஜகவின் தேசிய தலைமை தமிழ்நாட்டிலே பாஜகவின் மாவட்ட தலைவர்கள் ஒவ்வொருவருக்கும் தேர்தல் செலவுக்காக 50 லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறார்கள். ஒரு மாவட்டம் என்பது இரண்டு அல்லது மூன்று சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியதாக இருக்கிறது.
இந்த வகையில் அனைத்து பாஜக மாவட்ட தலைவர்களுக்கும் தேசிய தலைமையில் இருந்து தேர்தல் செலவுக்காக 50 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது கோவைக்கும் பொருந்தும்.
A,B,C வகைத் தொகுதிகள்-எத்தனை கோடிகள்?
இன்னும் சொல்லப் போனால் தமிழ்நாட்டில் பாஜக போட்டியிடும் தொகுதிகளை A,B,C என்று மூன்று வகைகளாக தரவரிசைப்படுத்தி அதற்கேற்றது போல மேலும் பொருளாதார ஒதுக்கீடுகளை பாஜக தலைமை செய்திருக்கிறது.
A என்றால் அதிக வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகள். B என்றால் கொஞ்சம் கடினமான தொகுதிகள். C என்றால் வெற்றிக்கு வாய்ப்பே இல்லாத தொகுதிகள். இவ்வாறு தமிழ்நாடு பாஜக போட்டியிடும் தொகுதிகள் மூன்று வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
A வகை தொகுதிகளுக்கு ஒரு தொகுதிக்கு 15 கோடி ரூபாய் வீதமும், B வகையில் இருக்கும் தொகுதிகளுக்கு ஒரு தொகுதிக்கு 10 கோடி ரூபாய் வீதமும், வெற்றிக்கு வாய்ப்பே இல்லாத C வகையில் இடம் பெற்றுள்ள தொகுதிகளுக்கு கூட ஒரு தொகுதிக்கு 5 கோடி ரூபாய் வரையிலும் நிதி அளிக்கப்பட்டிருக்கிறது.
அந்த வகையில் A தரவரிசைப்படி தென்சென்னை, மத்திய சென்னை, கன்னியாகுமரி, நெல்லை, கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய தொகுதிகள் இடம் பெற்று இருக்கின்றன.
அப்படி பார்த்தால் அண்ணாமலை போட்டியிடும் கோயம்புத்தூர் A பிரிவில் வருகிறது. இதற்கு தனியாக 15 கோடி ரூபாய் தலைமை ஒதுக்கி இருக்கிறது.
இதெல்லாம் கட்சி அளிக்கும் நிதி விவரங்கள். இதுமட்டுமல்லாமல் அண்ணாமலையின் நண்பர்கள், அவருக்கு நெருக்கமான தொழிலதிபர்கள் என்று பலரும் பலவிதங்களில் கோவை உள்ளிட்ட பாஜக போட்டியிடும் தொகுதிகளுக்கு பண உதவி செய்து வருகிறார்கள்.
பாஜக போட்டியிடும் தொகுதிகளில் வாக்குக்கு பணம் கொடுக்கவும் ஏற்பாடுகள் நடக்கின்றன. ஆனால், பூத் கமிட்டிகளைப் பொறுத்தவரை அதிமுக, திமுக போல பாஜகவுக்கு வலிமை இல்லை என்பதால் வாக்குக்கு பணம் கொடுக்கும் தெளிவான மெக்கானிசம் பாஜகவிடம் இல்லை என்பதே எதார்த்தம்!
மோடி, அமித் ஷாவின் ரோடு ஷோ பட்ஜெட்!
இதுமட்டுமல்லாமல் அடுத்தடுத்து பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வந்துகொண்டே இருக்கிறார். அடுத்து அமித் ஷாவும் வருகிறார். தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், ஏப்ரல் 9, 10 தேதிகளிலும், அடுத்து 13, 14 தேதிகளிலும் மீண்டும் தமிழ்நாட்டுக்கு வருகிறார் மோடி.
ஏப்ரல் 9 ஆம் தேதி வேலூரில் போட்டியிடும் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி. சண்முகத்துக்காக வேலூரில் ரோடு ஷோவும், அதே நாள் சென்னையில் பாஜக வேட்பாளர்கள் தமிழிசை, வினோஜ் ஆகியோருக்காக ரோடு ஷோவும் செய்கிறார் பிரதமர் மோடி.
அதேபோல் 10 ஆம் தேதி நீலகிரி தொகுதியில் ரோடு ஷோ, அன்றே கோவையில் அண்ணாமலை, முருகனுக்காக மோடியின் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. மீண்டும் ஏப்ரல் 13 ஆம் தேதி பெரம்பலூரில் தேஜகூட்டணி வேட்பாளர் ஐஜேகே பாரிவேந்தருக்காக பொதுக்கூட்டம், ஏப்ரல் 14 ஆம் தேதி சித்திரைத் திருநாள் அன்று விருதுநகரில் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்காக பொதுக்கூட்டம் என்று அதிரடி காட்டுகிறார் மோடி.
சென்னையில் பாண்டி பஜார் முதல் தேனாம்பேட்டை சிக்னல் வரை பிரதமர் மோடியின் ரோடு ஷோவுக்கு திட்டமிட்டப்பட்டிருக்கிறது. சரியாக ஒன்றே முக்கால் கிலோ மீட்டர் தூரமுள்ள இந்த தூரத்தில் பிரதமர் மோடி ரோடு ஷோ செய்ய பட்ஜெட் இரண்டு கோடி ரூபாய் என்கிறார்கள். அமித் ஷாவின் ரோடு ஷோவுக்கு பட்ஜெட் 50 லட்சம் ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
‘ஆதின்னா பொட்டு வச்சு பொங்க சாப்பிடுறவன்னு நினைச்சியா?’ என்பது சிவாஜி பட டயலாக். அதேபோல, ‘பிஜேபின்னா தயிர் சாதம் சாப்பிட்டு கட்சி வேலை பாக்குறவன்னு நினைச்சியா… நாங்க எலக்ஷன் பாண்ட்ல இருந்து எடுத்து செலவு பண்ற கட்சி’ என்கிறார்கள் பிஜேபியினரே.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–வேந்தன்
தேர்தல் அதிகாரிக்கு கொலை மிரட்டல் : எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு!
33 ஆண்டுகளுக்கு பிறகு… முருகன் உள்பட மூவர் இலங்கை சென்றனர்!
‘காதல் கைகூடியது’ மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகரை மணக்கும் டாடா ஹீரோயின்!
புஜேபியே தொகுதிக்கு 15 கோடின்னா அப்ப பிமுக எதிமுக குறைச்சலா 300 கோடி இறக்குவாங்கே! தேர்தல் கமிசன் உசார்..