மது ஒழிப்பு மாநாட்டுக்கு அதிமுகவை விசிக பொதுவாகத்தான் அழைத்துள்ளது என்று மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
விசிக சார்பில் வரும் அக்டோபர் 2ஆம் தேதி மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு நடத்தப்படவுள்ளது. இந்த மாநாட்டில் அதிமுக பங்கேற்கலாம் என்று விசிக தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார். தவெக தலைவர் விஜய்யும் பங்கேற்கலாம் என்றும் பாஜக, பாமகவுக்கு அழைப்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்
இதுதொடர்பாக ஈரோட்டில் இன்று (செப்டம்பர் 12) செய்தியாளர்களைச் சந்தித்த மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதுகுறித்து அவர் பேசுகையில், “படிப்படியாக மதுவிலக்கை கொண்டு வருவோம் என்று நாங்களே சொல்லியிருக்கிறோம்.
மதுக்கடைகள் தொடர்ந்து செயல்படுவதில் முதல்வருக்கு எள்ளளவும் விருப்பம் இல்லை. மதுக்கடைகளை என்றாவது ஒருநாள் மூடவேண்டும் என்பதுதான் அவரது எண்ணம்.
ஆனால் உடனடியாக மதுக்கடைகளை மூடினால் என்ன நிலைமை ஏற்படும் என்று எல்லோருக்கும் தெரியும். இந்த விவகாரத்தை மிக நிதானமாக அணுகி கொண்டு செல்ல வேண்டும். இதுதான் அரசின் நோக்கம். மது பழக்கத்தில் இருந்து மக்களை வெளியே கொண்டு வர கொண்டு வர, நிச்சயமாக மதுக்கடைகளை படிப்படியாக மூட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
மேலும் அவர், “விசிகவை பொறுத்தவரை அவர்கள் கொள்கை ரீதியாக இந்த மாநாட்டை நடத்துகிறார்கள். அதில் எந்த தவறும் இல்லை. ஆனால் அரசாங்கத்தையோ, முதலமைச்சரையோ எதிர்த்து செய்யவில்லை. அப்படி எடுத்துக்கொள்ள முடியாது” என்றார்.
அதிமுகவுக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்தது பற்றியும், அதனால் புது கூட்டணி உருவாகும் என பேசப்படுகிறது என்றும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த முத்துசாமி, “ஒரு கல்யாணத்துக்கு அழைப்பு கொடுக்கிறார்கள் என்றால், எல்லோரும் போய் ஒன்றாக இருக்கிறார்கள் என்று அர்த்தமா? எதிரிக்கு கூட அழைப்பு கொடுப்பார்கள்.
புது கூட்டணி வரவே வராது என்பது எங்களது எண்ணம். ஆனால் ஒரு அழைப்புக்கே அதிமுக இவ்வளவு ஆட்டம் ஆடுகிறது என்றால் எங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை.
அழைப்பு விடுத்ததை தவறு என்று சொல்லமுடியாது. யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம் என பொதுவாகதத்தான் சொல்லியிருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
மகாவிஷ்ணு அறக்கட்டளையில் சோதனை : முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!
58 ரன்கள்தான் தேவை… வங்கதேச தொடரில் விராட் படைக்க போகும் வரலாற்று சாதனை!