தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நேற்று (நவம்பர் 20) காலை 11 மணியளவில் தொடங்கி பிற்பகல் 2.30 வரை நடந்தது. is udayanidhi more important than Indira Gandhi
மாநில காங்கிரஸ் தலைவர் அழகிரி அதோ மாற்றப்படுகிறார், இதோ மாற்றப்படுகிறார் என்றெல்லாம் யூகங்கள் வந்து சென்ற நிலையில்… எம்பி தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால் அழகிரி இனி மாற்றப்படமாட்டார் என்று அவரது ஆதரவாளர்கள் அடித்துச் சொல்கிறார்கள்.
ஆனால் அழகிரி எதிர்ப்பாளர்களோ, 2019 தேர்தலுக்கு சில மாதங்கள் முன்பாகத்தான் அழகிரி தலைவராக நியமிக்கப்பட்டார். காங்கிரஸில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று இன்னமும் சொல்லி வருகிறார்கள்,
இந்தசூழலில் தான் நேற்றைய கூட்டத்தில் அழகிரியின் அணுகுமுறை, கூட்டணி பற்றி மாவட்ட காங்கிரஸ் தலைவர்களின் பேச்சு ஆகியவை கவனிக்க வைப்பதாக இருக்கின்றன.
வழக்கம்போல முன்னாள் மாநில தலைவர்கள், காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் செல்வப் பெருந்தகை போன்றவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. கடந்த சில மாதங்களாகவே அழகிரி கலந்துகொள்ளும் கூட்டங்களை அவர்கள் தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்கள்.
இந்தக் கூட்டத்தில் அறிமுக உரையாற்றிய கே.எஸ்.அழகிரி, “மக்களவைத் தேர்தலுக்கான ஆயத்தங்கள் பற்றி ஆலோசிக்கவே இந்த கூட்டம். 70க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 22 மாவட்டங்கள் தான் முழுமையான அளவில் பூத் கமிட்டி அமைத்துள்ளீர்கள்.
மீதி மாவட்டங்களில் 60% அளவுக்கு தான் அமைத்துள்ளீர்கள். வரும் டிசம்பர் 5 ஆம் தேதிக்குள் பூத் கமிட்டிகள் முழுமையாக அமைக்கப்பட வேண்டும். தேசிய தலைமையில் இருந்து கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். எனவே விரைவில் பூத் கமிட்டிகளை அமைக்கவில்லை என்றால், சம்பந்தப்பட்ட மாவட்ட தலைவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன்” என்றார் அழகிரி.
மேலும், “பூத் கமிட்டி அமைத்து முடித்த மாவட்டங்களில் ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டங்களை நடத்துங்கள்” என்றும் கூறினார்.
அழகிரியின் அறிமுக உரைக்குப் பின் மாவட்ட தலைவர்கள் சிலர் பேசினார்கள்.
திண்டுக்கல் மாநகர மாவட்ட தலைவர் மணிகண்டன் பேசும்போது, “நாங்கள் எங்கள் மாவட்டத்தில் பூத் கமிட்டிகளை முழுமையாக அமைத்துவிட்டோம். நாம் பூத் கமிட்டியை முழுமையாக அமைத்தால் தான் நம்மை திமுக போன்ற கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மதிப்பார்கள். அப்போது தான் அவர்கள் நம் பின்னால் வருவார்கள்” என்றவர் அடுத்து திண்டுக்கல் மக்களவைத் தொகுதி பற்றி அழகிரிக்கு பகிரங்க வேண்டுகோள் வைத்தார்.
“திண்டுக்கல் மக்களவைத் தொகுதி எப்போதுமே பாரம்பரியமான காங்கிரஸ் கோட்டை. இதுவரை திண்டுக்கல்லில் 11 முறை காங்கிரஸ் போட்டியிட்டிருக்கிறோம். 6 முறை வெற்றி பெற்றிருக்கிறோம். வரக்கூடிய தேர்தலிலும் காங்கிரசே போட்டியிட வேண்டும். அதை மாநிலத் தலைவர் பெற்றுத் தர வேண்டும்.
அழகிரி ராசியான தலைவர். 2019 மக்களவைத் தேர்தலில் 9 சீட் பெற்று எட்டு இடங்களில் ஜெயித்துக் கொடுத்தவர். 2021 சட்டமன்றத் தேர்தலில் 25 சீட்டுகள் பெற்று 18 ஜெயித்துக் கொடுத்தவர். வரும் தேர்தலிலும் காங்கிரஸ் பெரும் வெற்றி பெறும்.
எம்பி தேர்தலில் புதிய முகங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். திராவிட கட்சிகள் மாதிரி மாவட்ட தலைவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களுக்கு எம்பி தேர்தலில் வாய்ப்பு கொடுங்கள். அப்போதுதான் கட்சியை வளர்க்க முடியும்” என்று கைதட்டல்களுக்கு இடையே பேசி முடித்தார் திண்டுக்கல் மாநகர் மாவட்ட தலைவர் மணிகண்டன்.
அடுத்து சென்னை மாவட்ட தலைவர்களில் ஒருவரும், மாநில எஸ்.சி.எஸ்.டி. பிரிவு தலைவருமான ரஞ்சன் குமார் பேசினார். இவர் அழகிரிக்கு நெருக்கமானவர். அழகிரியின் வலதுகரமாகவே கருதப்படுபவர்.
“வருகிற எம்பி தேர்தலில் மாநில தலைவர் சுழற்சி முறையில் எம்பி வேட்பாளர் வாய்ப்பை கொடுக்க வேண்டும். குறிப்பாக வாரிசுகளுக்கு கொடுக்கவே கொடுக்காதீர்கள். அப்பா எம்பி, மகன் எம்பி என்றெல்லாம் சுகத்தை அனுபவித்துவிட்டு கட்சிக்கு எதுவும் செய்ய மறுக்கிறார்கள்.
இப்போது கூட பாருங்கள்… முன்னாள் மாநிலத் தலைவர்கள் யாரும் இந்த கூட்டத்துக்கு வரவில்லை. சில நாட்களுக்கு முன் திமுக இளைஞரணிச் செயலாளரும் அமைச்சருமான உதயநிதி நீட் விலக்கு தொடர்பாக கையெழுத்து பெற சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தார். அப்போது எல்லா முன்னாள் தலைவர்களும் மற்ற நிர்வாகிகளும் வந்தார்கள். ஆனால் நமது தலைவர் அழகிரி சத்தியமூர்த்தி பவனில் இந்திரா காந்தி பிறந்தநாள் விழா நடத்தினால் அவர்கள் வர மாட்டார்கள்.
உதயநிதி வந்தால் தான் இவர்களை எல்லாம் சத்தியமூர்த்தி பவனில் பார்க்க முடியும். அப்படிப்பட்டவர்களுக்கும், அப்படிப்பட்டவர்களின் வாரிசுகளுக்கும் தேர்தலில் வாய்ப்பு கொடுக்காமல் கட்சிக்காக உழைக்கும் புதியவர்களுக்கு கொடுங்கள்” என்று மாநில முன்னாள் தலைவர்களை தாக்கினார்.
ரஞ்சன் குமாரின் குரல் அழகிரியின் குரலாகவே இந்த கூட்டத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதேபோல வடசென்னை மாவட்ட தலைவர் திரவியமும், “புது முகங்களுக்கும், மாவட்ட தலைவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும்” என்று பேசினார்.
திருநெல்வேலி மாவட்டதலைவர் சங்கரபாண்டியன் பேசுகையில், “அடுத்த பிரதமர் யார் என்பதைத் தீர்மானிக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு ஓட்டு போட மக்கள் தயாராக இருக்கிறார்கள்.
கிராமப்புறங்கள் வரை ராகுல் காந்தியின் செல்வாக்கு கூடியிருக்கிறது. காங்கிரஸ் தான் இந்தத் தேர்தலின் முகம். எனவே எம்பி தேர்தலில் காங்கிரஸ் குறைந்தபட்சம் 15 சீட்டுகளாவது வாங்க வேண்டும். திமுக கூட்டணியில் 15 சீட் தரவில்லை என்றால்… இன்றைய அரசியல் சூழலில் நமக்கு அதிமுகவோடு பேசவும் வாய்ப்பு இருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்” என்று பேசி சலசலப்பைக் கிளப்பினார்.
மாவட்டத் தலைவர்களின் இந்த பேச்சுகளுக்கு அழகிரி எந்த பதிலும் அளிக்கவில்லை. மீண்டும் பூத் கமிட்டி அமைப்பதை பற்றி சில நிமிடங்கள் பேசி கூட்டத்தை முடித்தார் அழகிரி.
இந்தக் கூட்டத்தில் முன்னாள் மாநிலத் தலைவர்கள் பங்கேற்காதது பற்றி அழகிரியின் ஆதரவாளர் ரஞ்சன்குமார் பேசிய பேச்சு சீனியர் தலைவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
அதன் விளைவுதான் நேற்று ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மாநில தலைவர் ஈவிகேஸ் இளங்கோவன், “சத்தியமூர்த்தி பவனில் மர்மமான முறையில் கூட்டம் நடந்திருக்கிறது. எனக்கு முறைப்படி அழைப்பு இல்லை. முன்னாள் தலைவர்கள் என்றார்கள், மூத்த தலைவர்கள் என்றார்கள், இப்போது முடிந்துபோன தலைவர்கள் என்பது மாதிரி சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். மூத்த நிர்வாகிகள் யாரையும் அழைக்காமல் இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளது” என்று விமர்சித்துள்ளார்.. is udayanidhi more important than Indira Gandhi
–ஆரா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
10 வார ஊதியம் கிடைக்காமல் 100 நாள் வேலை திட்டத் தொழிலாளர்கள் தவிப்பு!
IND vs AUS: இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு!
சட்டைய கிழிக்காம என்னத்த கிழிக்க போறாங்களோ?!