திமுகவுக்கு ஆதரவானவரா திருச்சி ஆதீனம்?

அரசியல்

திருச்சி ஆதீனம் என்ற சாமியார் திமுக அரசின் அமைச்சர்கள் தனக்கு ஆதரவாக இருப்பதாக சொல்லி டெல்லி வரை அரசுப் பதவிகள் பெற்றுத் தர பணம் பெற்றுள்ளார் என்றும் காரியத்தையும் முடிக்காமல் பணத்தையும் திரும்பத் தராமல் இழுத்தடிக்கிறார் என்றும் மின்னம்பலத்துக்கு சில புகார்கள் வந்தன.

இதுகுறித்து விசாரித்ததில் திருச்சி ஆதீனத்திடம் வேலைக்காக பணம் கொடுத்த சிலர் பெயர் வெளியிட விரும்பாமல் நம்மிடம் தெரிவித்த தகவல்களை வெளியிட்டோம்.

மேலும்   அமைச்சர்களான சேகர்பாபு, அன்பில் மகேஷ் ஆகியோருடனும்  அமைச்சர் ஆவதற்கு முன்பே உதயநிதி ஸ்டாலினுடனும்   தான் எடுத்த போட்டோக்களை வெளியிட்டு தன்னை திமுகவுக்கு ஆதரவானவராக காட்டிக் கொள்ள முயற்சிப்பதாகவும் தெரிவித்தனர்.

நமது செய்திக்குப் பிறகு, ‘நான் திமுக அரசுக்கு ஆதரவாக இருப்பதால் என்னைப் பற்றி அவதூறு பரப்புகிறார்கள் ‘ என்று விளக்கம்  கொடுத்தார் திருச்சி ஆதீனம். அதையும் மின்னம்லபத்தில் வெளியிட்டோம்.

ஆனால் அவர்  இப்போது தன்னைக் காப்பாற்றிக் கொள்ள திமுகவுக்கு ஆதரவானவராக காட்டிக் கொள்வதாகவும் சொல்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள்.

மேலும் அவர்கள் நம்மிடம், ”இப்போது திருச்சி ஆதீனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அவர் மீது புகார் கொடுக்க ஆலோசித்து வருகிறார்கள். புகார் கொடுத்து வழக்கு கோர்ட் என்று சென்றால் கொடுத்த பணம் கிடைக்குமா கிடைக்காதா என்று சிலர் யோசிக்கிறார்கள்.  

ஆனால் யாராவது ஒருவர் புகார் கொடுத்தால்தான் நம்மைப் போல் வேறு யாரும் இவரிடம் சிக்காமல் இருப்பார்கள் என்றும் அவர்கள்  ஆலோசனை நடத்தியுள்ளனர்.

இந்த நிலையில்தான் தனக்கு திமுக  அமைச்சர்கள் ஆதரவு இருப்பதாகவும் காவல்துறை அதிகாரிகள் ஆதரவு இருப்பதாகவும் ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி வருகிறார் திருச்சி ஆதீனம்.

ஆனால்  அவர் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், தன்னை அதிமுகவின் பொதுச் செயலாளர் என்று இன்றும் சொல்லிக் கொள்கிற சசிகலா ஆகியோருடன் போட்டோ எடுத்து வெளியிட்டிருக்கிறார். சசிகலா, இளவரசி ஆகியோருடன் கோயில் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருக்கிறார்.

Is Trichy Atheenam a supporter of DMK

இப்படிப்பட்டவர் திமுக அரசுக்கு ஆதரவானவர் என்று தன்னை சொல்லுவது தன் மீதான புகார்களில்  நடவடிக்கை எடுக்கப்படாமல்  காப்பாற்றிக் கொள்ளத்தான்.  

கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி, ‘அதிமுகவும்,திமுகவும் மாறி மாறி ஆட்சிசெய்து வருகிறது. திருக்கோவில் உண்டியல் மற்றும் சொத்துக்களை முறையாக பராமரிப்பதில்லை.

உண்டியலில் மக்கள் பணம் போடுவதை நிறுத்தவேண்டும். அறநிலையத் துறையை நீதியரசர் மூலம் நிர்வாகிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

அவரே டிசம்பர் 30 ஆம் தேதி, திருச்செந்தூரில் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஐயா திருச்சி ஆதீனத்தை சந்தித்து ஆசிபெற்றார் என்று குறிப்பிடுகிறார்.

இதுமட்டுமல்ல தான் திமுக அரசுக்கு ஆதரவாக இருப்பதால் தன் மீது புகார்கள் கூறுகிறார்கள் என்று சொல்லும் திருச்சி ஆதீனம்,

செப்டம்பர் 19 ஆம் தேதி, ’அஇஅதிமுக எனும் பேரியக்கத்தின் எதிர்காலத்தை கருத்தில் எடுத்து அம்மாவின் சகோதரி வி. கே. சசிகலா அம்மையாருடன் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஒன்றாக இணைந்தால் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.

காலம் வீணாகப் போய்விட்டால் அதன் பலனை அனுபவிக்க நேரிடும். கழகம் ஒன்றிணையுமாறு கேட்டுக்கொள்கிறோம்’ என்று சசிகலா தலைமையில் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார்.

இப்படி அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் சசிகலாவுக்கு முழுமையாக ஆதரவு தெரிவித்தவர், இப்போது தன் மேல் மோசடிப் புகார்கள் போலீசாருக்கு சென்று அதன் பேரில் திமுக அரசு நடவடிக்கை எடுத்துவிடுமோ என்ற பயத்தால் தான் திமுக அரசுக்கு ஆதரவாக இருப்பதால் அவதூறு பரப்புகிறார்கள் என்று கூறுகிறார்” என்கிறார்கள்.

மின்னம்பலம் செய்திக்குப் பிறகு திமுக அமைச்சர்கள் சிலர் தரப்பில் இருந்து திருச்சி ஆதீனத்துக்கு எச்சரிக்கைகள் விடப்பட்டிருக்கின்றன. அதன் எதிரொலியாக நேற்று ஜனவரி1 இரவு தனது ட்விட்டர் பக்கத்தில்,

 ”எங்கள் நோக்கம் இறைவனை வழிபடுவது ,அடியார்களுக்கு வழிகாட்டுவது மட்டும் அல்ல. யாரெல்லாம் பொதுவாழ்க்கையிலும்,சமூக சேவையிலும்,மக்கள் பணியிலும் இருக்கிறார்களோ அவர்களை உற்சாகப்படுத்துவது, நல்லவழி காட்டுவது,அவர்களை ஊக்கப்படுத்துவதும் ஆன்மீகத்தொண்டாகத்தான் நினைத்து செயல்படுகிறேன்.

போற்றுவார் போற்றலும், புழுதிவாரி தூற்றுவார் தூற்றலும் போகட்டும் ஈசனுக்கே. என்னுடைய மடியிலே கனமில்லை, செல்லும் வழியிலே பயமில்லை. எமது பாதை தெளிவாக உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

இதைப் பார்த்துவிட்டு, ‘ஆட்டையப் போடுவதுதான் ஆன்மீகத் தொண்டா?’ என்று வேதனையோடும் கோபத்தோடும் கேட்கிறார்கள் பணத்தை பறிகொடுத்தவர்கள்.

வேந்தன்

டிஜிட்டல் திண்ணை: இளைஞரணியில் உதயாவின் புதிய ட்விஸ்ட்- உதறலில் மாசெக்கள்!

டெல்லியில் வெடித்தது போராட்டம்: பெண்ணுக்கு நீதி கேட்டு திரண்ட மக்கள்!

+1
0
+1
1
+1
0
+1
2
+1
3
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *