“மோடியின் ஃபார்முலா இதுதானா?” : போதைப்பொருள் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ரகுபதி கேள்வி!

Published On:

| By Kavi

பாஜக ஆளும் மாநிலமான குஜராத்தில் தான் அதிக போதைப்பொருள் நடமாட்டம் இருப்பதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நேற்று மாலை நடந்த பாஜகவின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, “தமிழகத்தில், ஆட்சியில் இருக்கும் கட்சி ஆதரவில், போதைப் பொருள்கள் நடமாட்டம் அதிகரித்திருக்கிறது.

குழந்தைகளின் எதிர்காலத்தை அழிக்க நினைக்கும் இந்த போதைப் பொருள் கடத்தலுக்குத் துணைபோகும் கட்சிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். போதைப் பொருள் கடத்தலில் தொடர்புடையவர்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதே மோடியின் கேரன்டி” என்று கூறியிருந்தார்.

இதுதொடர்பாக இன்று (மார்ச் 5) நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க தமிழக முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். தமிழ்நாடு கஞ்சா பயிரிடப்படாத பூமி.

2019ல் 11,418 கிலோ, 2020 15,144கிலோ, 2020ல் 20,431 கிலோ, 2022ல் 28,381கிலோ, 2023ல் 23,364 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

2022-ம் ஆண்டு போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 2,016 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 80 சதவிகித வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 2023ல் 3567 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டன. இதில் 2988 வழக்குகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது.

போதைப்பொருள் எதிர்கால சந்ததியை பாதிக்கும் என்பதற்காக அதனை தடுக்க முழுவீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் பாஜகவைச் சேர்ந்த 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் போதை பொருள் நடமாட்டம் அதிகரிப்பதற்கு யார் பொறுப்பு. மற்றவர்கள் மீது பழிபோடுவதற்கு பெயர்தான் மோடி ஃபார்முலாவா என்று நாங்கள் கேட்கிறோம்.

ஆந்திரா, தெலங்கானா, ஒரிசா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கஞ்சா பயிரிடப்படுகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் அமைதியான ஆட்சி, நிலையான ஆட்சி நடைபெற்று வருகிறது. யாரும் குழப்பத்தை விளைவிக்க முடியாது. தேர்தலுக்காக தமிழக அரசு மீது பிரதமர் மோடி பழிபோடுவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

26,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் உள்ளிட்ட போதைபொருட்கள் குஜராத்தில் உள்ள கடற்கரையில் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.

அண்ணாமலை அவர் கட்சியில் போதைபொருள் நடமாட்டத்தை தடுக்கட்டும், பாஜக ஆளும் மாநிலங்களில் தடுக்கட்டும். இதற்கான முயற்சியை முதலில் அவர் செய்யட்டும்” என்று குறிப்பிட்டார்.

ஜாபர் சாதிக் குறித்து பேசிய அமைச்சர் ரகுபதி, “ஒருவரை கட்சியில் சேர்க்கும் போது குற்றப்பின்னணியை பார்த்து சேர்ப்பது கிடையாது. ஆனால் சிறையில் இருந்தாலோ அல்லது வழக்குத் தொடர்ந்தாலோ அவர்களை எல்லாம் நாங்கள் நீக்கிவிடுவோம். குற்றப் பின்னணி உள்ளவர்களை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்ற அவசியம் திமுகவுக்கு கிடையாது” என கூறினார்.

“இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இல்லம் தேடி குட்கா என விமர்சித்து பேசியிருக்கிறார். அவர் மீது வழக்கு இருப்பதை மறந்துவிட்டு இவ்வாறு பேசியிருக்கிறார். அவருடைய இல்லம் தேடி எல்லோரும் சென்று பார்க்கலாம்” என்றார் அமைச்சர் ரகுபதி.

எய்ம்ஸ் பணி குறித்து பேசிய அவர், “தேர்தலுக்காக மதுரை எய்ம்ஸ் பணி துவங்கியுள்ளது. தேர்தலுக்கு பின் பணி நின்றுவிடும்” என்று தெரிவித்தார்.

செந்தில் பாலாஜி விவகாரம் குறித்து பேசிய அவர், “இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் எதுவும் சொல்ல முடியாது. முதல்வர் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கவில்லை. அவராகவே தான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். எம்.எல்.ஏவாக அவர் நீடிக்கலாம். அவர் அமைச்சராக கூட நீடிக்கலாம். ஆனால் அவராகவே ராஜினாமா செய்துள்ளார். அவருக்கு நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்படவில்லை” என குறிப்பிட்டார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

”மேல ஏறி வாரோம்”: வசூலில் வரலாற்று சாதனை படைத்த ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ 

“காலியானது” : பொன்முடியின் திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல்?

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel