44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியைப் பிரதமர் மோடி ஜூலை 28ஆம் தேதி தொடங்கி வைத்தார். ஜூலை 29ஆம் தேதி மாமல்லபுரத்தில் முதல் சுற்று தொடங்கியது. போட்டியைத் தொடங்கிவைக்க திமுக அமைச்சர்களுடன் சென்றவர்கள் ஒரு பக்கம் தள்ளுமுள்ளு செய்ய, இன்னொருபக்கம் மத்திய அமைச்சர்களுடன் சென்றவர்கள் மோடி படத்தை வைக்கச் சொல்லி சத்தம் போட்டனர். இது அயல் நாட்டிலிருந்து வந்தவர்கள் மத்தியில் முகசுழிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை ஜூலை 29ஆம் தேதி மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்ய நாதனும் இருவரும் தொடங்கி வைத்தனர்.
மொத்தம் 350 அணிகள் இடம் பெற்றுள்ளன. பொது அணிகள் 188 மற்றும் பெண்கள் அணிகள் 162 என வெளிநாட்டு விளையாட்டு வீரர்கள் 187 நாடுகளிலிருந்து வந்து கலந்துகொண்டுள்ளனர். அனைவருக்கும் ஈசிஆர் சாலை மற்றும் ஓஎம்ஆர் சாலைகளில் மூன்று ஸ்டார் மற்றும் ஐந்து ஸ்டார் ஹோட்டலில் அனைத்து வசதிகளுடன் அறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணிக்கும் ஒரு எஸ்ஐ பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
செஸ் விளையாட்டு வீரர்களை விளையாட்டு அரங்கத்திலிருந்து அறைக்கு அழைத்துச் செல்லவும், அறையிலிருந்து விளையாட்டு அரங்கத்திற்கு அழைத்து வரவும் தமிழக அரசு பேருந்தும், தனியார் பேருந்துகளும் வழங்கப்பட்டுள்ளன. ஏசி பொருத்திய பேருந்தாக இருந்தாலும் சொகுசு என்னவோ சுமாராகத்தான் இருப்பதாகப் பேருந்தில் பயணிக்கும் விளையாட்டு வீரர்கள் கூறுகிறார்கள்.
மாமல்லபுரத்தில் இரண்டு விளையாட்டு அரங்கம் போன்று இரண்டு ஃபுட் கோர்ட் அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி 39 மெட்டல் டிடெக்டர் பொருத்தப்பட்டுள்ளது. அரங்கம் உள்ளேயும் வெளியேவும் கடற்கரையிலும் என சுமார் இரண்டாயிரம் போலீசார் பாதுகாப்புப் பணிகளுக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
ஜூலை 29ஆம் தேதி செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கி வைக்க பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு, விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன், சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோருடன் கட்சி பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள் என 50 பேர் எந்தவித பரிசோதனையும் இன்றி உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அரங்குக்குள் இருந்த ஃபுட் கோர்ட்டில் டீ, காபி வகைகள், உணவு வகைகள், ஸ்நாக்ஸ் மற்றும் மதுபானங்கள் ஆகியவை வைக்கப்பட்டுள்ள இடத்துக்குச் சென்று அமர்ந்தனர். இதைக் கண்ட ஹோட்டல் நிர்வாகத்தினர் பதறிப்போய் “சார், இங்கு விளையாட்டு வீரர்களுக்கும், அவர்களுடன் வந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு அனுமதி இல்லை. உணவு வழங்கப்படமாட்டாது” என்று தெரிவித்தனர். இதனால் அமைச்சர்களுடன் வந்த நிர்வாகிகளுக்கும் ஹோட்டல் நிர்வாகத்தினருக்கும் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டுவிட்டு, சிறிது நேரத்தில் சரியானது. இதைக்கண்ட வெளிநாட்டு வீரர்கள் முகம்சுழித்துப் போனார்கள்.
இதையடுத்து மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோருடன் சுமார் 25 பாஜக நிர்வாகிகள் வந்தனர். அவர்கள், எங்கேயும் இந்தியப் பிரதமர் மோடி படம் வைக்கவில்லை, இப்போதே மோடி படத்தை வைக்க வேண்டும் என்று கூச்சலிட்டுக் கோஷமிட்டனர். இதையும் பார்த்த அயல்நாட்டு விளையாட்டு வீரர்கள் சிரித்துக்கொண்டு… இது என்ன செஸ் போட்டியா அல்லது அரசியல் போட்டியா என விமர்சனம் செய்து சென்றனர்.
-வணங்காமுடி
H
Hi