திமுக கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்துக்கொண்ட நிலையில், திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டிருப்பதாக அரசியல் அரங்கில் பேசப்படுகிறது.
இந்நிலையில் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் வைத்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சந்தித்தார்.
இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோவிடம், திமுக கூட்டணியில் மதிமுக தொடர்கிறதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு, “திமுக கூட்டணியில் தான் இருக்கிறேன்” என்றார்.
அதிமுக பாஜக கூட்டணி முறிவுக்குப் பிறகு திமுக கூட்டணியில் சிறு சலசலப்பு ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறதே? என்ற கேள்விக்கு, “எந்த சலசலப்பும் இல்லாமல் அமைதியாக நீரோடை போலச் சென்று கொண்டிருக்கிறது” என கூறினார்.
இந்தியா’ கூட்டணியில் இருக்கக்கூடிய கட்சிகள் தமிழ்நாட்டில் கூட்டணியில் தொடருகிறோம் என்று தெரிவித்த வைகோவிடம், திருமாவளவன் உள்ளிட்ட அனைவரும் ஒற்றுமையாகக் கூட்டணியில் இருக்கிறார்களா? என்று கேட்கப்பட்டது.
இதற்கு அவர், எல்லோரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்றார்.
விசிக தலைவர் திருமாவளவனுக்கு அதிமுக தரப்பில் தூது விடுவதாகச் சொல்கிறார்களே? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, அதுமாதிரி இல்லை. தமிழ்நாட்டைப் பொருத்தவரை இந்தியா கூட்டணியில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை என குறிப்பிட்டார் வைகோ.
அதுபோன்று “அதிமுக – பாஜகவினர் உண்மையிலேயே பிரிந்துவிட்டார்களா? அல்லது நாடகமா? என்பது காலப்போக்கில் தான் தெரியும்” என்றும் கூறினார்.
பிரியா
ஆளுநர் விவகாரம்: வைகோவிற்கு குடியரசுத் தலைவர் மாளிகை பதில்!
ஆஸ்கர் விருதுக்கு தேர்வான மலையாள திரைப்படம்!