Iran-Israel conflict

ஈரான்-இஸ்ரேலிய மோதல் மற்றுமொரு சூயஸ் கால்வாய் நெருக்கடியா?

அரசியல் சிறப்புக் கட்டுரை

பாஸ்கர் செல்வராஜ்

ஈரானின் சிரிய தூதரகத்தை இஸ்ரேல் தாக்கி தரைமட்டமாக்கி அந்நாட்டின் முக்கிய படைத்தலைவரைக் கொன்றதை அடுத்து வரலாற்றில் முதல்முறையாக ஈரான், இஸ்ரேலின் மீது நேரடி தாக்குதல் தொடுத்தது.

இதற்கு இஸ்ரேலின் பதிலடி, அதற்கு ஈரானின் பதிலடி என தொடர்ந்து இது மேற்காசியப் போராக வெடிக்குமோ என்று உலகமே அஞ்சிய நிலையில் ஈரானின் அணு உலைகள் அமைந்திருக்கும் இஸ்பகான் (Isfahan) மாகாண விமானதளப் பகுதியில் குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்டதாகச் செய்திகள் வெளியாகி பரபரப்பானது.

போர் மேகம் கலைந்தது

அது வலவனிலா வானூர்திகளுக்கு (Drones) எதிரான ஈரானின் ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகளின் செயல்பாடு என ஈரான் சொல்கிறது. இஸ்ரேலிய மேற்குலக ஊடகங்கள், அது இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதல் என்கின்றன. செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செய்து ஈரானின் விமானப்படை தளம் சேதமடையவில்லை என்கிறார்கள்.

உயரிழப்போ, பொருளாதார இழப்போ ஏற்படாத நிலையில் இஸ்ரேலின் மீது ஈரான் பதில் தாக்குதலைத் தொடுக்காது எனக் கூறியதால் இரு நாடுகளுக்கு இடையிலான ‘நேரடி’ (முறைமுக தாக்குதல்கள் தொடரும்) தாக்குதல்கள் முடிவுக்கு வந்து போர் பதற்றம் குறைந்தது.

மற்றுமொரு சூயஸ் தருணமா?

இஸ்ரேலின் மீதான ஈரானின் இந்த நேரடி தாக்குதலும் அதற்கு வலுவான எதிர்த்தாக்குதல் தொடுக்க முடியாத இஸ்ரேலின் நிலையையும் பார்க்கும்போது வரலாற்றில் இது இஸ்ரேலின் மற்றுமொரு சூயஸ் கால்வாய் அரசியல் நெருக்கடி நிலை என்கிறார் இந்திய முன்னாள் தூதரும் பூகோள அரசியல் நிபுணருமான பத்ராகுமார்.

இது ஈரானின் முக்கிய எதிரியான அமெரிக்காவையும் இஸ்ரேலையும் என்ன செய்வதென்று தெரியாமல் இருவரையும் ஒருசேர இக்காட்டில் திகைக்க வைத்த ஈரானின் அரசியல் செயற்திறன் வாய்ந்த நகர்வு என்கிறார் சீன ராணுவ பகுப்பாய்வாளர் சென் பங்கு (Chen Feng).

இது இஸ்ரேலின் சூயஸ் கால்வாய் நெருக்கடியா? இல்லை, அமெரிக்காவின் சூயஸ் கால்வாய் நெருக்கடியா? இந்த ராணுவ நடவடிக்கை வழியாக என்ன அரசியல் பொருளாதார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்பதை இந்தப் பிரச்சினையை இஸ்ரேலிய-பாலஸ்தீன மோதல் என்ற சட்டகத்தை விடுத்துப் பரந்து விரிந்த சட்டகத்தின் வழியே பார்ப்பதன் மூலமே அறிய முடியும்.

மோதல் வணிகப்பாதை தொடர்பானது

இஸ்ரேலும் ஈரானும் எலியும் பூனையுமாக நின்று மோதிக்கொள்ள பொதுவாகச் சொல்லப்படும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு அடாவடித்தனங்கள்,  இஸ்லாமிய-யூத மத மோதல், பாலஸ்தீனப் போராட்டம், ஈரான் தீவிரவாத ஆதரவு ஆகிய கருத்தாடல்களைத் தாண்டி பிரச்சினையின் மையம், ஆசிய-ஐரோப்பிய வணிகப்பாதையைக் கட்டுப்படுத்துவதில் இருக்கிறது.

மேற்காசிய எண்ணெய் வளத்தையும், ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான சரக்குக் கப்பல் போக்குவரத்து நிகழும் சூயஸ் கால்வாய் வழியான மத்திய தரைக்கடல் வணிகத்தைக் கட்டுப்படுத்தவும் அந்தப் பகுதியில் இஸ்ரேலின் இருப்பு இன்றியமையாதது.

இஸ்ரேலின் திமிருக்கான காரணம்

இப்படி ஒரு நாடு இல்லையென்றால் அமெரிக்கா தனது நலன்களைக் காக்க அந்தப் பகுதியில் இப்படி ஒரு நாட்டை உருவாக்க வேண்டியிருக்கும் என்ற இப்போதைய அதிபர் பைடனின் வார்த்தைகள் இதை உறுதிப்படுத்த போதுமானது.

அதன்பொருட்டு 175 F-16, 66 F-15 போர் விமானங்களையும் ரேடாருக்குத் தென்படாத 39 F-35 அதிநவீன போர் விமானங்களையும் ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகளையும் கொடுத்திருப்பதோடு ஆண்டுக்குப் பல பில்லியன் டாலர் பணத்தையும் நிதியாகக் கொடுத்து வருகிறது அமெரிக்கா.

உலக எண்ணெய் உற்பத்தி வணிக ஆதிக்கத்துக்கு அவசியமான இஸ்ரேலிய இருப்பும், அவ்வணிகத்தின் வழியாக உலக செல்வத்தைக் குவித்துக் கொழுத்திருக்கும் அமெரிக்க வங்கி நிதி மூலதன யூதக் குழுக்களின் நேரடி பண பல ஆதரவும், அறிவிக்கப்படாத அணு ஆயுத இருப்பு மற்றும் பல அதிநவீன ஆயுதங்களின் பலமும் சேர்வதால் கிடைக்கும் அசுரபலம் இஸ்ரேலியர்களைக் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட தனி இனமாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு யூத இனமத வெறியுடனும் திமிருடனும் நடக்க வைக்கிறது.

இங்கிலாந்தின் சூயஸ் தருணம்

உலகப்போரின் போதான யூத படுகொலையைத் தாண்டி அட்லாண்டிக் பகுதியில் இஸ்ரேலை உருவாக்க அப்போது உலகை ஆதிக்கம் செய்த இங்கிலாந்து முன்னெடுக்க முக்கிய காரணம் அது மத்திய தரைக்கடல் வணிகத்தைக் கட்டுப்படுத்த அவசியமானது என்பதுதான்.

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு இஸ்ரேலுக்கு அருகில் இருக்கும் எகிப்தின் அதிபர் நாசர் சூயஸ் கால்வாயைத் தேசியமயமாக்குவதைத் தடுக்க இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளுடன் இஸ்ரேல் சேர்ந்து கொண்டு அதை ஆக்கிரமித்தது. அப்போது இங்கிலாந்துக்கான உலக நிதியத்தின் நிதியுதவியை வெட்டிவிடுவேன் என அமெரிக்கா மிரட்டி பின்வாங்க வைத்ததை இங்கிலாந்தின் ‘சூயஸ் கால்வாய்த் தருணம்’ (Suyaz Moment) என வருணிக்கிறார்கள்.

அமெரிக்க எண்ணெய் வணிக ஆதிக்கம்

இங்கிலாந்தின் உலக மேலாதிக்கத்தின் மீது அடிக்கப்பட்ட கடைசி சாவுமணியாகப் பார்க்கப்படும் இந்த நிகழ்வுக்குப் பிறகு எகிப்து, இஸ்ரேல், துருக்கி நாடுகளைத் தன்பக்கம் கொண்டுவந்து மத்திய தரைக்கடல் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தி எண்ணெய் வளமிக்க சவுதி, ஈரான், ஈராக்கிய நாடுகளில் தனக்கு ஆதரவான அரசுகளை நிறுவி எண்ணெய் உற்பத்தி வணிகத்தில் அமெரிக்கா தனது ஆதிக்கத்தை நிறுவியது.

தங்கத்தைப் பின்புலமாகக் கொண்ட டாலர் உலகப்பணத்தின் வழியாக வணிகம் நடைபெற்ற அக்காலத்தில் அதிக டாலரை அச்சிட்டு அதன் மதிப்பைக் குறைத்த அமெரிக்காவிடம் டாலரைக் கொடுத்து தங்கத்தைக் கொடு என பிரான்ஸ் கேட்க, டாலரைக் கொடுத்தால்தான் எண்ணெய் தருவோம் என்று சவுதி நாடுகளை அமெரிக்கா சொல்ல வைக்க, பிரான்ஸில் தங்கியிருந்த கோமேனி, ஈரானில் இஸ்லாமியப் புரட்சி செய்து எண்ணெய் வணிகத்தில் உடைப்பை ஏற்படுத்தினார்.

அதன் பிறகு அந்த உடைப்பைச் சரிசெய்ய ஈராக்கின் சாதாமை அமெரிக்கா தூண்டிவிட்டு ஈரானைத் தாக்கியது, சோவியத் வீழ்ச்சியினால் எண்ணெய் வணிகத்துக்கு டாலரை மட்டுமே சார்ந்திருக்கும் சூழல் ஏற்பட்டது, மாற்றாக எழுந்த ஈரோ நாணயத்தில் வணிகம் செய்ய முயன்ற ஈராக்கை அமெரிக்கா தாக்கி ஆக்கிரமித்தது, கிழக்கில் சீன, இந்திய நாடுகளின் எண்ணெய் வணிகத்தேவை அதிகரிப்பு, தீவிரவாதத்தைக் காரணம் காட்டி கனிம வளமிக்க வணிக முக்கியத்துவம் வாய்ந்த ஆப்கானிஸ்தானை அமெரிக்கா ஆக்கிரமித்தது என தொடர்ந்த அமெரிக்க எண்ணெய் வணிக ஆதிக்க வரலாறு அனைவரும் அறிந்தது.

ஈரானைத் தனிமைப்படுத்தக் காரணம்

பாரசீக வளைகுடாவுக்கு மறுபக்கம் இருக்கும் சவுதி அரேபிய நாடுகளிலும் ஈரானின் எல்லையில் இருக்கும் ஈராக், ஆப்கானிஸ்தான் நாடுகளிலும் அமெரிக்கப் படைத்தளத்தை நிறுவி ஈரானை அமெரிக்கா சுற்றி வளைத்ததோடு அந்நாடு யாருடனும் எண்ணெய் வணிகம் செய்யமுடியாதபடிக்குப் பொருளாதாரத் தடை, விமானங்கள், ஏவுகணை உள்ளிட்ட ஆயுதங்களை வாங்கவும் விற்கவும் உற்பத்தி செய்யவும் ஆயுதத்தடை என தடை மேல் தடையாக விதித்து தனிமைப்படுத்தக் காரணம்…

ஈரான் எண்ணெய், எரிவாயு வளங்களை மட்டும் கொண்டிருக்காமல் பாரசீக வளைகுடாவின் வணிக முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் (Hormuz) நீரிணைப் பகுதியில் அமைந்திருப்பதும் முக்கிய காரணம். அந்நீரிணையை மூடி கட்டுப்படுத்தும் அளவுக்கு பொருளாதார ஆயுத பலம் அடைவதைத் தடுப்பது இத்தடைகளின் முக்கிய நோக்கம்.

இத்தடைகளினால் எண்ணெய் வணிகத்துக்கு டாலர் தவிர்த்த மாற்று நாணய அமைப்பு, அதை ஏற்கும் நாடு இருந்தால்தான் ஈரானால் வணிகம் செய்ய முடியும். அப்படியே ஏற்றாலும், அது அமெரிக்கக் கட்டுப்பாடு நிலவும் சூயஸ், மலாக்கா நீரிணையைத் தாண்டவேண்டும். இல்லையேல் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் வழியாக இந்திய, சீன நாடுகளையும் ஈராக், சிரியா வழியாக மத்திய தரைக்கடல் அல்லது துருக்கியை அடைந்து அங்கிருந்து ஐரோப்பாவையும் அடைய வேண்டும்.

திமிறி எழுந்த ஈரான்

தன்னைத் தனிமைப்படுத்தி முடக்கி ஒடுக்க ஏற்படுத்தப்பட்ட தடையை உடைத்து நிலைத்து நிற்க வடகொரியாவைப் போல அணு ஆயுதமும் அதைத் தாங்கிச் சென்று எதிரி இலக்கினில் வீச ஏவுகணை உற்பத்தியிலும் இறங்கியது ஈரான் (இவ்விரு நாடுகளுக்கும் இடையில் மறைமுக ஒத்துழைப்பு இருப்பதாக உறுதிப்படுத்தப் படாத செய்திகள் உண்டு).

உலகின் எந்த ஆளும் வர்க்கமும் தன்னை எதிரி வீழ்த்தி தூக்கி வீசாமல் இருக்க ஏற்படுத்திக் கொள்ளும் ஆயுள் காப்பான அணு ஆயுதத்தோடு எதிரிகளை உளவறிந்து இலக்கின் மீது குண்டுவீசி அழிப்பது ஆகியவற்றுக்கு அடிப்படையான சிக்கலான செலவுமிக்க போர் விமானங்களுக்குப் பதிலாக எளிதான செலவு குறைவான வலவனிலா வானூர்தியையும் கடல் வணிகத்தைக் கண்காணித்து கட்டுப்படுத்த போர்க்கப்பல்களுக்குப் பதிலாக மலிவான அதிவேகப் படகுகளையும் சொந்தமாக உருவாக்கி அதற்கான தொழில்நுட்பங்களை வளர்த்தெடுத்தது ஈரான்.

இந்த ஆயுதங்களோடு தன்னைச் சுற்றி வளைத்திருக்கும் அமெரிக்கப் படைத்தளங்களைத் சுற்றிவளைக்கும் நோக்கில் ஈராக், லெபனான் நாடுகளில் தனது ஆதரவு ஆயுதக் குழுக்களை ஏற்படுத்தியது. தனது எண்ணெய் ஏற்றுமதியை முடக்கினால் அவர்களின் வணிகத்தை முடக்கும் வகையில் செங்கடல் பகுதியில் கவுத்தி குழுவினரை ஆயுதம் கொடுத்து ஆதரித்தது.

சீன, ரஷ்ய, ஈரான் இணைவு

2008 பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு அமெரிக்கா சீனாவின் வணிகப்பாதைகளை சுற்றிவளைக்க முற்பட அது ரஷ்யாவின் வழியான பாதுகாப்பான எண்ணெய், எரிவாயுவை டாலர் அல்லாத சொந்த நாணயத்திலும் வணிகப்பரிமாற்று கட்டமைப்பிலும் இறக்குமதி செய்யத் தொடங்கியது.

டாலர் எண்ணெய் வணிகத்தில் உடைப்பை ஏற்படுத்தும் ரஷ்யாவின் ஐரோப்பிய எரிவாயு சந்தையை பாரசீகக் கடலில் உள்ள ஈரானும் கத்தாரும் கூட்டாகப் பகிர்ந்து கொள்ளும் உலகின் பெரிய பார்சு (Fars) எரிவாயு வயலில் இருந்து அமெரிக்க ஆதிக்கத்தில் இருக்கும் பக்ரைன், ஈராக் வழியாக மத்திய தரைக்கடலுக்கு குழாய் அமைத்து ஏற்றுமதி செய்யும் திட்டத்தை முன்னெடுத்தது அமெரிக்கா.

அதற்கு குறுக்கே இருக்கும் ஈரான் –ரஷ்ய ஆதரவு சிரியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் உள்நாட்டுக் கிளர்ச்சியைத் தூண்டிவிட்டது. சிரியாவுடன் ஈரான் – ரஷ்ய நாடுகள் கைகோத்துக் கொண்டு கிளர்ச்சியைக் அடக்கி ஆசாத் ஆட்சியைத் தக்கவைத்து ஒழுங்கை நிலைநாட்டின.

ஈரான் ஏற்றுமதிக்கு குறுக்கே அமெரிக்கப்படை

தோல்வியடைந்த அமெரிக்கா எதிர்த்தரப்பு ஈரானின் எரிபொருளை ஈராக், சிரியா வழியாகக் குழாய் அமைத்து மத்திய தரைக்கடல் வழியாக ஏற்றுமதி செய்வதைத் தடுக்க முக்கிய சாலைகள் சந்திக்கும் ஏற்றுமதி முக்கியத்துவம் வாய்ந்த அல் புகமால், அல்தனாபு பகுதியைக் கைப்பற்றி தனது படைத்தளத்தை நிறுவியது.

எண்ணெய் வளமிக்க குர்திய மக்கள் வசிக்கும் ஈராக்கின் கிர்குக், மொசூல், எர்பில் சிரியாவின் டயர்யெசூர் பகுதிகளில் ஆயுதக்குழுக்களுக்கு ஆதரவு அளித்து படைத்தளத்தை நிறுவி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.

டாலர் ஆதிக்கம் உடைந்து சீனா தனது நாணயத்தில் எண்ணெய் வாங்கத் தொடங்கியத்தைப் பயன்படுத்தி அதனுடன் ஈரான் எண்ணெய் வணிகம் செய்யத் தொடங்கியது. ஈரான், ரஷ்ய, சீன நாடுகள் நெருக்கமாகி எண்ணெய் வள ஒபெக் நாடுகளும் அதற்கு வெளியில் இருந்த ரஷ்யாவும் எண்ணெய் கூட்டணியை (opec+) ஏற்படுத்திக் கொண்டன.

ஈரான் எரிவாயு ஏற்றுமதிக்கு ரஷ்யாவுடன் கூட்டை (Cartel) ஏற்படுத்திக் கொண்டு அந்த ஏற்றுமதிக்குத் தடையாக நிற்கும் அமெரிக்காவை இப்பகுதியில் இருந்து வெளியேற்றும் வகையில் அவர்களின் ராணுவ நிலைகளில் மீது மறைமுக தாக்குதல் நடத்தி வந்தது.

யூரேசிய இணைவுத் திட்டங்கள்

இப்படி மாற்று டாலர் எரிபொருள் வணிகம் பெருகிய நிலையில் கொரோனா பெருந்தொற்று சேர்ந்து கொண்டு அமெரிக்க பொருளாதார நெருக்கடியைத் தீவிரமாக்கியது. டாலர் எண்ணெய் வணிகத்தில் உடைப்பை ஏற்படுத்தும் ரஷ்யாவை உடைக்கும் நோக்கில் உக்ரைனை நேட்டோவில் இணைக்கும் நகர்வைச் செய்து போரைத் தூண்டியது அமெரிக்கா.

சீன உதவியுடன் அரசியல் பொருளாதார ஒழுங்கைக் காத்த ரஷ்யா தனது வலுவான ராணுவத்தைக் கொண்டு உக்ரைனில் நேட்டோவைத் தோற்கடித்தது. ஆண்டுக்கணக்கில் நீளும் போரில் நேட்டோவின் ஆயுதக் கிடங்குகள் தரையைத் தட்டியிருந்த நிலையில், இஸ்ரேலின் மதவாதிகளின் ஆதிக்கம் சரிவதைத் தடுக்க மதவாத சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள அது உள்நாட்டுக் குழப்பத்தில் சிக்கியது.

இந்த சாதகமான சூழலைப் பயன்படுத்தி சீனா , ரஷ்யா, ஈரான் நாடுகள் சவுதியைத் தன்பக்கம் கொண்டுவந்து ஈரான்-சவுதி தூதரக உறவுகளை புதுப்பித்து யூரேசியா இணைவை வேகப்படுத்தின. அதைத் தடுக்க இந்திய, சவுதி, இஸ்ரேலிய நாடுகளை இணைத்து சூயஸ் அல்லாத மத்தியத் தரைக்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுடன் வணிக இணைப்பை ஏற்படுத்தும் மாற்று யூரேசிய இணைவை மேற்கொள்ள முனைந்தது அமெரிக்கா.

கமாசின் தாக்குதல்

பாலஸ்தீன இருப்பை மறுத்து எதிரணியின் யூரேசிய இணைவைத் தடுக்கும் இந்த நகர்வை மத்திய தரைக்கடல் பகுதியில் இருக்கும் கமாசின் இஸ்ரேலியத் தாக்குதல் முறியடித்தது. இந்தத் தாக்குதலுக்கு எதிர்த்தாக்குதல் நடத்தினால், இஸ்ரேல் சவுதியுடன் தூதரக உறவை ஏற்படுத்த இஸ்லாமிய மக்களின் அரசியல் எதிர்ப்பு இடம் தராது. அதோடு பாலசுதீன தனிநாடு உருவாக்கப் பிரச்சினை உலகின் முக்கிய பேசுபொருள் ஆகிவிடும்.

தாக்குதல் நடத்தத் தவறினால் இஸ்ரேலின் உள்நாட்டு அரசியல் நெருக்கடி ஏற்பட்டு மத்தியத் தரைக்கடல் பகுதியில் இந்த ஆயுதக் குழுவின் கையோங்கி மாற்று யூரேசிய இணைவு கேள்விக்குள்ளாகி பின்னுக்குத் தள்ளப்படும்.

இஸ்ரேலை இப்படித் திரிசங்கு நிலைக்குத் தள்ளும் அரசியல் செயற்திறன் வாய்ந்த நகர்வைச் செய்த ஈரானின் நோக்கத்தை முறியடிக்க கமாசையும் அங்குள்ள பாலஸ்தீன இனத்தையும் அழிக்கும் வகையில் உணவு, மருந்துப் பொருட்களை உள்ளே விடாமல் தடுத்துக் கொண்டே காசாவில் நுழைந்து குண்டுவீசி படுகொலையில் ஈடுபட்டது இஸ்ரேல். 22 லட்சத்தில் எஞ்சியவர்களை மற்ற நாடுகளுக்கு இடம்பெயரச் செய்ய வைக்கும் நோக்கில் எகிப்தின் எல்லையில் திட்டமிட்டு கொண்டுபோய் நிறுத்தியது.

கையறு நிலையில் இஸ்ரேல்

இஸ்ரேலிய எல்லையில் இருக்கும் ஹிஸ்புல்லாஹ்வின் (Hezbolla) தொடர் தாக்குதல் மூலம்   இஸ்ரேலிய ராணுவத்தின் மீது அழுத்தத்தையும் அந்நாட்டு மக்களிடம் அச்சத்தையும்  கூட்டிய அதேவேளை, இஸ்ரேலிய சரக்குக் கப்பல்கள் செங்கடல் பகுதியில் பயணிக்க முடியாத வகையில் கவுத்தி அமைப்பினரைக் கொண்டு பொருளாதார நெருக்கடி கொடுத்து அங்கே அரசியல் மாற்றம் ஏற்படுத்தும் நகர்வுகளைச் செய்தது ஈரான்.

கமாசை வீழ்த்த முடியாத கையறு நிலையில் பாலஸ்தீன மக்கள் நிறைந்திருக்கும் காசா, எகிப்திய எல்லைப் பகுதியான ரஃபாவைத் (Rafah) தாக்கி இன அழிப்பு செய்தும் இன இடப்பெயர்ச்சி செய்தும் தனது நோக்கத்தை அடையும் இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்ந்தது இஸ்ரேல்.

அப்படியானப் படுகொலை இஸ்ரேலுக்கு ஆயுதமும் பணமும் கொடுத்து நிபந்தனையின்றி ஆதரித்து வரும் அமெரிக்க மேற்குலக அணியைப் பெரும் அரசியல் நெருக்கடிக்கு உள்ளாக்கும் என்பதால் அமெரிக்கா அனுமதி மறுத்து நெதன்யாகு அரசில் அங்கம் வகிக்கும் பாதுகாப்பு அமைச்சரை அழைத்துப் பேசி அடுத்த மாற்று அரசியல் ஏற்பாட்டுக்குத் தயாரானது அமெரிக்கா.

இந்த நிலையில் நடந்த சிரிய தூதரகத்தின் மீதான தாக்குதல் இந்த அரசியலில் எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தி இஸ்ரேலை ஈரான் நேரடியாகத் தாக்குவதில் முடிந்தது. அது திட்டமிடப்பட்ட விதம், அதன் அரசியல் பொருளாதார நோக்கம் விளைவுகள் என்ன என்பதை அடுத்த கட்டுரையில் காணலாம்.

அடுத்த கட்டுரையில் காணலாம்…

கட்டுரையாளர் குறிப்பு
Is the Iran-Israel conflict another Suez Canal crisis? by Baskar Selvaraj Article in Tamil

 

பாஸ்கர் செல்வராஜ் – தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் – அரசியல் – பூகோள அரசியல் – சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டிஜிட்டல் திண்ணை: கொடைக்கானலில் ஸ்டாலின்… ஹாட் அமைச்சர்கள்!

ஊட்டிக்கு போகக் கூட பயமாதான் இருக்கு : அப்டேட் குமாரு

பிஎஸ்என்எல்-ன் முத்தான மூன்று திட்டங்கள்!

நிலை தடுமாறிய ஹெலிகாப்டர் : தப்பிய அமித்ஷா

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *