ஆளுநர் சிறுபிள்ளையா? நயினார் ஆவேசம்!
ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட பத்து சட்ட மசோதாக்களை மீண்டும் சட்டமன்றத்தில் வைத்து நிறைவேற்றிட தமிழ்நாடு முதலமைச்சர் இன்று (நவம்பர் 18) தீர்மானம் கொண்டுவந்தார்.
இது தொடர்பான விவாதத்திலே பேசிய இந்திய கம்யூனிஸ்டு உறுப்பினர் தளி ராமச்சந்திரன், “ஏழரை கோடி தமிழர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் மன்றமாக இந்த சட்டமன்றம் விளங்குகிறது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பத்து சட்ட மசோதாக்களை பல மாதங்களாக கிடப்பில் போட்டு ஆளுநர் திருப்பியனுப்பியிருக்கிறார். அதுமட்டுமல்ல சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றால் அவை நிராகரிக்கப்பட்ட மசோதாக்கள்தான் என்று பொதுவெளியிலே சிறுபிள்ளைத் தனமாக பேசி வருகிறார்” என்று குறிப்பிட்டார்.
இதைக் கேட்டதும் பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் எழுந்து, ‘சிறுபிள்ளைத் தனமாக ஆளுநர் பேசி வருகிறார்’ என்ற வார்த்தைக்கு ஆட்சேபம் தெரிவித்தார்.
அப்போது சபாநாயகர், ‘சிறுபிள்ளை என்பதை சிறு குழந்தை என்று சொல்லிவிடுவிவோமா?” என்று கூறினார்.
இந்த நேரத்தில் அவை முன்னவரான அமைச்சர் துரைமுருகன் எழுந்து, ‘சிறுபிள்ளைத் தனமான என்பது அன் பார்லிமெண்ட் வார்த்தை அல்ல, சிறுபிள்ளைத் தனம் என்பது சிறு குழந்தைத் தனம்தான்” என்று விளக்கம் கொடுத்தார்.
மீண்டும் எழுந்த நயினார் நாகேந்திரன், “மாண்புமிகு அவை முன்னவர் சொல்வதை நான் ஏற்கிறேன். சிறுபிள்ளை என்றால் சிறு குழந்தை என்று அர்த்தம். ஆனால் திருநெல்வேலி பாஷையில் சின்னத் தனமான என்று சொல்வார்கள். அதுபோல ஓர் உள்நோக்கம் இதில் இருக்கிறது” என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து சபாநாயகர், ’நீங்கள் சொன்ன வார்த்தையெல்லாம் நீக்கிவிடுகிறேன்’ என்று கூறினார். அதையடுத்து தளி ராமச்சந்திரனும், “சிறுபிள்ளைத் தனமான என்ற வார்த்தையைத் திரும்பப் பெறுகிறேன். குழந்தைத் தனமாக பேசிவருகிறார் ஆளுநர்” என்று குறிப்பிட்டார்.
–வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஒப்புதல் அளிப்பதை தவிர ஆளுநருக்கு வேறு வழியில்லை: வேல்முருகன்
மீண்டும் வருகிறான் ஆளவந்தான்: 1000 தியேட்டர்களில் ரீ ரிலீஸ்!