Is the faith of the people in the Judiciary being undermined?

நீதித்துறையின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை ஆட்டம் காண்கிறதா?

அரசியல் சிறப்புக் கட்டுரை

ஆனந்த் டெல்டும்டெ

தமிழாக்கம்: எஸ்.வி.ராஜதுரை

தனஞ்சய் யஷ்வந்த் சந்திரசூட்டின் வீட்டில் நரேந்திர தாமோதரதாஸ் மோடி கணபதி பூஜை செய்ததில் என்ன தவறு இருக்கிறது? இருவரும் சமூக உறவுகள் என்ற அடிப்படையில் சந்திக்கக்கூடாதா? பண்பாட்டு அடிப்படையில் பார்த்தோமேயானால் பக்தி சிரத்தையுள்ள இந்துக்கள் என்ற முறையில்  அவர்கள் பண்டிகைகள் நடக்கும் சந்தர்ப்பத்தில்  ஒருவரையொருவர் சந்திக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே இருவரும் கணபதிக்கு ஆரத்தி எடுத்து வழிபட்டதைப் பற்றிய  சர்ச்சை ஏற்படுவதற்குக் காரணம் என்ன? சட்ட வல்லுநர்களாக உள்ள சில மூத்த வழக்குரைஞர்கள் அந்த நிகழ்வைக் கண்டனம்  செய்தது ஏன்?  இந்த கணபதி பூஜையில் எந்த சட்டமும் மீறப்படவில்லை என்பது நிச்சயம். இந்து மத விதிகள் ஏதும்  மீறப்படவில்லை. உண்மையில் ஏதோவொரு சந்திரசூட், ஏதோவொரு மோடியை சந்திப்பதிலோ அல்லது ஏதோவொரு மோடி, ஏதோவொரு சந்திரசூட்டைச் சந்திப்பதிலோ பிரச்சினை ஏதும் இல்லை.

ஆனால், மேற்சொன்ன இரு  கனவான்களும் சாதாரண மனிதர்கள் அல்லர் என்பதால்தான் பிரச்சினை எழுகிறது.  இருவரும் அரசமைப்புச் சட்டப்படி உருவாக்கப்பட்டுள்ள,  அரசின் இரு  சக்திவாய்ந்த கால்களாக உள்ளவற்றின் (நீதித்துறை, நிர்வாகத் துறை) முக்கியத்துவம் வாய்ந்த அதிகாரப் பிரிவுகளின் தலைவர்களாவர்.

நீதித்துறையின் சுதந்திரம் என்ற அடிப்படைக் கோட்பாட்டை அவர்கள் மீறிவிட்டதாகக் கருதும் பார்வையிலிருந்துதான்  கோபம் எழுகிறது. இந்திய அரசமைப்பு சட்டம், அதிகாரப் பிரிவுகளை ஆதரித்துப் பேசுவதால், இந்தியாவின் தலைமை நீதிபதிக்கும்  பிரதமருக்குமிடையே  காணப்பட்ட நல்லுறவு , இந்த நெறிகளுக்குக் குழி பறிக்கிறது என்று கருதப்படுகிறது. இதைவிட மிக முக்கியமாக, நிர்வாகத் துறையிலிருந்து  சுதந்திரமாக இயங்குவதாகக் கருதப்படும் நீதித்துறை மீது மக்கள் கொண்டுள்ள மெல்லிய நம்பிக்கையாகும். இந்த நம்பிக்கை மீறப்படுமானால், ஜனநாயக அரசு என்கிற   கட்டடம் முழுவதுமே தகர்ந்து விழுந்துவிடும் என்று கருதப்படுகிறது.

இந்தியாவின் தலைமை நீதிபதியின் வீட்டில் அவரும் பிரதம அமைச்சரும் ஒன்றாக கணபதி பூஜை செய்தது பற்றிய கோபம் பெரும்பாலும் நீதித்துறையைச் சேர்ந்தவர்களிடமிருந்து வருகிறது. அவர்கள் நீதித்துறையின் சுதந்திரம் என்பதன் மீதே கவனம் குவித்துள்ளனர் என்பது வெளிப்படை.ஆனால், அவர்கள் அரசமைப்பு சட்ட நெறிகளில் இன்னொன்றை , அதாவது மதச்சார்பின்மை என்பதைப்  பார்க்கத் தவறுகின்றனர்.

மதச்சார்பின்மை பற்றிய அலாதியான கருத்தை இந்தியா உருவாக்கியுள்ளது.  அதாவது அரசு மதம் என்பது ஏதுமில்லை, அரசு  எல்லா மதங்களையும் சரிசமமாக நடத்துகிறது என்பதுதான் அந்தக் கருத்து. குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் மிகப் பெரும்பான்மையாக (80 விழுக்காட்டுக்கும் கூடுதலாக)  இருக்கும் நிலையும், தேர்தலில் போட்டியிடுபவர்களில் யார் மற்ற எல்லோரைக் காட்டிலும் கூடுதலான வாக்குகளைப் பெறுகிறாரோ, அவரைத்தான் வெற்றி பெற்றவராகக் கருதும் தேர்தல் முறையும்  இருக்கும் ஒரு  நாட்டில் மதச்சார்பின்மை என்பது நம்பகத்தன்மையற்றது என்பது அது பிறந்த நாளிலிருந்தே அம்பலப்பட்டு வந்துள்ளது.

மோடி அதிகாரத்துக்கு வந்ததும் மதச்சார்பின்மை முழுமையாகத் தகர்க்கப்பட்டு விட்டது. கடந்த பத்தாண்டுக்கால பாரதிய ஜனதாக் கட்சியின் ஆட்சியின் போது,  இஸ்லாம் தேசவிரோத சக்தி என்று வெளிப்படையாகக் குறிவைத்துத்  தாக்கப்படுவதுடன், அதைப் பின்பற்றும் முஸ்லிம்கள் இரண்டாந்தரக் குடிமக்களாகத் தாழ்த்தப்பட்டுள்ளனர். மக்களும் மதச்சார்பின்மையைப் பற்றிப் பேசுவதை நிறுத்திக் கொண்டனர். ஆனால், இதன் பொருள் அரசமைப்புச் சட்டத்தின் முக்கிய பாதுகாவலராக உள்ளவரும்கூட ( தலைமை நீதிபதி) மதச்சார்பின்மை பற்றிய சிரத்தையில்லாதவராக இருக்க வேண்டும் என்பதல்ல.

கெடுவாய்ப்பாக, மக்களிடம் பரவலாகக் காணப்படும் கருத்துக்கு முரண்பட்ட வகையில், அதிகாரப் பிரிவு என்பதோ, மதச்சார்பின்மை என்பதோ அரசியல் சட்டத்தில் தெளிவாக வரையறுக்கப்படவில்லை. இந்த இரண்டு நெறிகளும் ஆட்சியாளர்களிடம் உள்ள தார்மிக நம்பிக்கைகளுக்கு விட்டு வைக்கப்பட்டுள்ளது. தார்மிகச் சீரழிவு நிலவும் இந்தக் காலகட்டத்தில்,  நேர்மையும் மனசாட்சியும் இல்லாத ஆட்சியாளர்கள் அரசியல் சட்டத்தில் உள்ள  இந்தக் குறைபாடுகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதையும்  நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

அதிகாரப் பிரிவு என்ற நெறி

அதிகாரப் பிரிவு என்ற கருத்து, ஜனநாயக அரசு என்ற முன்மாதிரியிலிருந்து தோன்றுகிறது. அதன் மூன்று கூறுகளான சட்டம் இயற்றும் அவை (Legislature), நிர்வாகத் துறை (Executive), நீதித்துறை (Judiciary) ஆகியன ஒன்றிலிருந்து மற்றொன்று தனியாக இருப்பதன் மூலம் சமநிலை பேணப்படும் என்று அந்த ஜனநாயக அரசு  கருதுகிறது. இந்த ஏற்பாடு மேற்சொன்ன மூன்று பிரிவுகள் ஒவ்வொன்றும் மற்ற இரண்டு பிரிவுகள் எல்லை மீறாமல் இருப்பதை உறுதி செய்து தமக்குள்ளே சமநிலையைப் பேணுவதை உறுதி செய்கிறது. அதிகாரப் பிரிவு என்ற கருத்தை உருவாக்கிய பெருமை மொந்தெஸ்க்யூ (Montesquieu) என்ற பிரெஞ்சு அரசியல் சிந்தனையாளருக்கு உரியது. அதிகாரம் ஒரு முனையில் மையப்படுத்தப்படுமேயானால், நீதி  தன்னிச்சையாக வழங்கப்படும் என்று அவர் கருதினார்.  ‘சட்டத்தின் ஆன்மா ’ (De L’Esprit des lois) என்ற தலைப்பில் அவர் எழுதிய புகழ்பெற்ற நூலில் எழுதினார்:  சட்டமியற்றும் அவையின் அதிகாரம் , நிர்வாகத்துறையின்  அதிகாரம் ஆகியவற்றிலிருந்து நீதித் துறையின் அதிகாரம் பிரிக்கப்படாமல் இருந்தால் சுதந்திரம் என்பது ஏதும் இருக்க முடியாது.  எங்கு  நீதித்துறை அதிகாரம் சட்டம் இயற்றும் அவையின் அதிகாரத்துடன் இணைக்கப்படுகிறதோ அங்கு குடிமக்களின் வாழ்க்கையும் சுதந்திரமும்  நீதிபதியின் மனம்போன போக்குக்கு உட்படுத்தப்படும். ஏனெனில் அங்கு நீதிபதி வன்முறையுடனும் ஒடுக்குமுறையுடனும் செயல்படக் கூடும். மேற்சொன்ன மூன்று அதிகாரங்களையும் ஒரே மனிதரோ அல்லது ஒரே அமைப்போ பிரயோகிக்கும் நிலை ஏற்பட்டால், அனைத்துக்கும் முடிவு கட்டப்படும். அனைத்து அதிகாரங்களும்  ஒரே ஓர் அமைப்பில் குவிக்கப்படுமானால்,  அது அபாயகரமானதாகிவிடும் என்றும், சட்டங்கள் தன்னிச்சையானவையாகவும் குறைபாடுள்ளவையாகவும் இருக்கும் என்றும் அவர் வாதிட்டார்.

அதிகாரப் பிரிவு என்ற  கோட்பாட்டின்  நோக்கம் அதிகாரத்தில் உள்ளவர்கள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதாகும். அது, அரசாங்கத்தின் எந்த அமைப்பும் தனக்குள்ள, குறிக்கோளுக்குள்ள வரம்புகளைத் தாண்டி அதிகாரத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று அறுதியிடுகிறது.

இந்தக் கோட்பாடு நான்கு  நெறிகளை அடிப்படையாகக் கொண்டது: (1) தனித்தன்மை; இது அரசாங்கத்தை மூன்று கட்டமைப்பு உறுப்புகளாகப் பிரிக்கிறது; (2) செயல்பாட்டுத்தன்மை: இது  ஒவ்வோர் உறுப்புக்கும் உள்ள செயல்பாடுகளை வரையறுத்து ஒவ்வொன்றும் மற்றவற்றுடன்  கலக்காமல்  இருப்பதை  உறுதிப்படுத்துகிறது; (3)   அரசாங்க உறுப்புகள்  ஒவ்வொன்றும் மட்டுமீறிய அதிகாரத்தைப் பெறுவதைத் தடுக்கும் பொருட்டு, ஓர் உறுப்பு மற்றொன்றின் செயல்களுக்குத் திருத்தம் கொண்டு வருவதை அல்லது அவற்றை ரத்து செய்வதை அனுமதிக்கின்ற ஏற்பாடு; (4) பரஸ்பரத்தன்மை: இது எல்லா  உறுப்புகளுக்குமிடையிலான கூட்டுறவை வளர்க்குமேயன்றி, அவற்றுக்கிடையிலான மோதல்களை அல்ல.

அரசமைப்புச் சட்டத்தில் அதிகாரப் பிரிவு இல்லாமை

இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு IVஇல் கூறப்படும், வழிகாட்டு   நெறிகளில் (Directive Principles)  மட்டுமே அதிகாரப் பிரிவு பற்றிச் சொல்லப்படுகிறது. அதை, அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களின் விருப்பப் பட்டியலில் உள்ள ஒன்று என்று மட்டுமே பார்க்க முடியுமே தவிர, அரசமைப்பு சட்டம் அதிகாரப் பிரிவு பற்றி எங்கும் சொல்வதில்லை.

அரசமைப்பு அவையில் (Constitiuent Assembly), அரசமைப்பு சட்ட வரைவுக் குழுவின் தலைவர் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அச்சட்டத்தின் வரைவை (Draft Constitution) அறிமுகப்படுத்துகையில் சட்டம் இயற்றும் அவை  (சட்டமன்றம், நாடாளுமன்றம்) நிர்வாக அமைப்பில் இருந்து பிரிக்கப்படவில்லை என்பதை ஒப்புக் கொண்டார். அதற்கு அவர் கொடுத்த விளக்கம் பின்வருமாறு: ”அமெரிக்காவிலுள்ள குடியரசுத் தலைவர் முறை நிர்வாக அமைப்பு, சட்டம் இயற்றும் அமைப்பு ஆகியவை  ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிக்கப்பட்டதை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அதன் காரணமாக குடியரசுத் தலைவரோ அல்லது அவரது செயலாளர்களோ நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களாக இருக்க முடியாது. ஆனால் (இந்திய) வரைவு அரசமைப்புச் சட்டம் இந்தக் கோட்பாட்டை அங்கீகரிப்பதில்லை. இந்திய ஒன்றியத்தின் அமைச்சர்கள் நாடாளுமன்றத்தின்  உறுப்பினர்களாவர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே அமைச்சர்களாக முடியும்.

“நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குள்ள உரிமை அமைச்சர்களுக்கும் உண்டு. அதாவது அவர்கள் நாடாளுமன்றத்தில் அமர்ந்து, விவாதங்களில் பங்கேற்று, நாடாளுமன்ற நடவடிக்கைகளில் வாக்களிக்க முடியும். இரண்டு அரசாங்க அமைப்புகளும் (அமெரிக்காவில் உள்ளது போன்ற குடியரசுத் தலைவர் ஆட்சி முறை, இந்திய ஒன்றிய அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் உள்ள ஆட்சி  முறை) ஆகிய இரண்டுமே ஜனநாயக ஆட்சி முறைகள்தான். இவற்றில் எதைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது என்பது மிக எளிதானதல்ல.”

அரசமைப்பு அவை உறுப்பினராக இருந்த வழக்குரைஞரும் சோசலிசப் பொருளாதார அறிஞருமான கே.டி.ஷா, நாடாளுமன்றம், நிர்வாகத்துறை, நீதித்துறை ஆகியவற்றின் அதிகாரத்தைப் பிரித்து வழங்குவதற்கான ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்தார். அதிகாரப் பிரிவை வழங்காத வரைவு அரசமைப்பு சட்டத்தை மிக தீவிரமாக ஆதரித்துப் பேசிய டாக்டர் அம்பேத்கர், கே.டி.ஷா கொண்டுவந்த திருத்தத்தை நிராகரித்தார். சட்டம் இயற்றக் கூடிய அவை, நிர்வாகத் துறை ஆகியவற்றின் அதிகாரத்தைப் பிரித்து வழங்கும் பிரச்சினையைப் பொறுத்தவரை தன் நிலைப்பாட்டிலிருந்து நெகிழ்ந்து கொடுக்காத அவர் கூறினார்: “நாடாளுமன்ற அரசாங்க முறையிலும்கூட  நீதித்துறையை நிர்வாக இயந்திரத்திலிருந்து பிரிப்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்துதான் என்பதாலும் வழிகாட்டும் நெறிகளின் பகுதியாக அமைந்துள்ளதும் ,  இப்போது நிறைவேற்றப்பட்ட அரசமைப்புச் சட்டப்  பிரிவின் காரணமாக அதை நாம் எல்லோரும்  ஏற்றுக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளோம் என்பதாலும், இந்தத் திருத்தத்தை ஏற்றுக்கொள்வது என்னைப் பொறுத்தவரை சாத்தியமற்றது.”

அம்பேத்கர் கூறும் சட்டப்பிரிவு 39 (ஏ), வரைவு அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெறவில்லை. ஆனால், அரசமைப்பு அவையில் நடந்த நீண்ட விவாதங்களுக்குப் பிறகு வரைவு அரசமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டது.  இப்போது அது இந்திய அரசமைப்பு சட்டத்தில் சட்டப் பிரிவு 50 ஆக ( வழிகாட்டும் நெறிகளில் ஒன்றாக) அமைந்துள்ளது.

அரசமைப்பு அவையில் நடந்த விவாதங்களின்போது  பேராசிரியர் கே.டி.ஷாவும் ஜஸ்பத் ராய் கபூரும் (அவரும் ஒரு வழக்குரைஞர்),  நீதித்துறை உறுப்பினர்கள், பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு ஆதாயம் தரும் எந்தப் பதவியையும் அலுவலையும் அரசாங்கத்திடமிருந்து பெறக் கூடாது என்ற ஆலோசனையை முன்வைத்தனர். நிர்வாக இயந்திரத்திலிருந்து சுயேச்சையாக நீதித்துறை  இயங்க வேண்டும் என்பதுதான் அந்த ஆலோசனையின் நோக்கம். ஆனால், அந்த ஆலோசனையில் விரும்பத்தக்க கூறு எதனையும் அம்பேத்கரால் பார்க்க முடியவில்லை என்பது ஆச்சர்யம். அவர் கூறினார்:  “அரசாங்கத்தின் நலன் சிறிதுகூட இல்லாத, எந்த அரசாங்க நலனுடனும் சம்பந்தப்படாத வழக்குகளில்தான் நீதித்துறை தீர்ப்பு வழங்குகிறது. குடிமக்களிடையே உள்ள பிரச்சினையில் தீர்ப்பு கூறுவதில் நீதித்துறை ஈடுபட்டுள்ளதே தவிர,  மிக அரிதாகவே அரசாங்கத்துக்கும் குடிமக்களுக்கும் உள்ள பிரச்சினையில் தீர்ப்பு வழங்குவதில் ஈடுபடுகிறது. இதன் விளைவாக, நீதித்துறையின் உறுப்பினர் எவரொருவரின் நடத்தையில் அரசாங்கம் செல்வாக்கு செலுத்துவது மிக மிக அரிது. எனவே, என் தனிப்பட்ட கருத்து என்னவென்றால் ஒன்றிய அரசாங்கத்தின்  பணித் தேர்வு ஆணையத்துக்குப் (Federal Public Services Commission) பிரயோகிக்கப்படக் கூடிய விதிகளுக்கு நீதித் துறையைப் பொறுத்தவரை எந்த இடமும் இல்லை.

”நான் கூறியுள்ளது போல, நிர்வாகத் துறைக்கும் உறுப்புக்கும்  நீதித் துறைக்கும் உள்ள உறவு என்பது, நீதித் துறையின் தீர்ப்புகளில் நிர்வாகத்துறை செல்வாக்கு செலுத்துவதற்கான வாய்ப்பே இல்லை  என்று கூறும் அளவுக்குத்தான். நீதித்துறை, நிர்வாகத்துறை ஆகியவற்றுக்குள்ள அதிகாரம்  தனித்தனியானதும் ஒன்றுக்கொன்று தெளிவான வேறுபாடு கொண்டதுமாகும். ஆகவே, அரசமைப்புச் சட்டப் பிரிவில் சேர்க்கப்பட வேண்டும் என்று கே.டி.ஷாவும் ஜஸ்பத் கபூரும் கூறிய இந்த ஆலோசனை தேவையற்றது; நான் திருத்தங்கள் அனைத்தையும் எதிர்க்கிறேன்.”

அம்பேத்கரின் கருத்து தவறானது.  உண்மை என்னவென்றால் தனிப் பெரும் வழக்காடியாகத் (Litigant) தொடர்ந்து இருந்து வருவது அரசாங்கம்தான். நிலுவையிலுள்ள வழக்குகளில் கிட்டத்தட்ட 50  விழுக்காடு அரசாங்கம் சம்பந்தப்பட்டவை. இதைக் கூறியவர் முன்னாள் தலைமை நீதிபதி என்.வி.ரமணாவே தவிர வேறு  யாருமல்ல.

இன்று அரசமைப்புச் சட்டத்திலுள்ள ஒவ்வோர் ஓட்டையையும்  முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் வைராக்கியத்தைக் கொண்டுள்ள அரசாங்கத்தின் கைகளில், மேற்சொன்ன உண்மை  ஒரு பிரச்சினையாக மட்டுமே மேல் எழும்பியுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதிகள், அரசாங்கத்துக்குச் செய்த உதவிகளுக்குக் கைம்மாறாக,  கொழுத்த ஊதியம் தரும் பதவிகளில் அமர்த்தப்பட்ட நான்கு  நிகழ்வுகள்  அண்மைக் காலத்தில் ஏற்பட்டுள்ளன.

உச்ச நீதிமன்ற நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற ஒரு மாதத்திற்குள் நீதிபதி அப்துல் நஸீர் ஆந்திராவின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அயோத்தியா ராம் பிரச்சினையில் வழங்கப்பட்ட சர்ச்சைக்குரிய தீர்ப்புக்கு அவர் வழங்கிய பங்களிப்புக்கான பரிசாக அந்த ஆளுநர் பதவி தரப்பட்டதாகத் தோன்றுகிறது. அதற்கு முன்பு, நீதிபதி பி.சதாசிவம், நீதிபதி ரஞ்சன் பி.கோகாய் ஆகியோர் முறையே கேரளாவின் ஆளுநராகவும் மக்களவை உறுப்பினராகவும்  நியமிக்கப்பட்டனர். இவர்களுடன் தேசிய மனித உரிமை ஆணையத்தின்  தலைவராக நீதிபதி அருண் மிஸ்ரா நியமிக்கப்பட்டதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

குறைந்தபட்சமாக நமக்குக் கிடைக்கும் ஒரே ஓர் அறிவியல்பூர்வமான  ஆய்வு, அரசாங்கம் நீதித்துறையின் மீது செல்வாக்கு செலுத்தும் உண்மையை நிறுவியுள்ளது.  மாதவ் ஆனெ, ஷுபங்கர் டாம், ஜியோவான்னி கோ ஆகியோர், 1999 முதல் 2014 ஆண்டு வரை இரு பதவிக் காலம் ஆட்சி செலுத்திய காங்கிரஸ் அரசாங்கம், ஒரு பதவிக் காலம் ஆட்சி செய்த பாஜக அரசாங்கம் ஆகியவை சம்பந்தப்பட்டவையும் செய்திகளாக வெளிவந்தவையுமான உச்ச நீதிமன்ற வழக்குகள் அனைத்தையும் பகுப்பாய்வு செய்தனர்.  அந்த ஆய்வு  தீய நோக்கங்களுக்காகத் தரப்படும் ஊக்குவிப்புகள்  நீதித்துறை  தீர்ப்பு வழங்குவதில் செல்வாக்கு செலுத்தியதை வெளிப்படுத்தியது, அரசாங்கத்துக்கு ஆதரவாக வழங்கப்படும் தீர்ப்புகளுக்கும், உச்ச நீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து  ஓய்வுபெற்ற பின் பெருமதிப்பு கொண்ட பதவிகளில் அமர்த்தப்படுவதற்கும் உள்ள தொடர்பைக் கண்டறிந்தது.  மேலும் ,இந்த ஆய்வு எங்கெல்லாம் அரசாங்கம்  நீதித்துறையின் முடிவுகள் மீது செல்வாக்கு  செலுத்தி நீதித்துறையின் சுதந்திரத்துக்குக் குழி பறிக்கிறதோ அங்கு லஞ்சமும் ஊழலும் நிலவுவதைச் சுட்டிக்காட்டியது.

இவ்வாறு அரசமைப்புச் சட்டம் அதிகாரப் பிரிவு என்ற கோட்பாட்டைத் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.  நீதித்துறையை நிர்வாகத் துறையிலிருந்து பிரிப்பதும்கூட அரசமைப்புச் சட்டத்தின் கடைசி வரைவு மீதான விவாதத்தின்போது  சொல்லப்பட்ட பல ஆலோசனைகளுக்குப் பிறகு அரசுக் கொள்கை பற்றிய  செயல் திறனற்ற வழிகாட்டு நெறிகளில் சேர்க்கப்பட்டது.

அரசமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகே, அப்போதிருந்த உச்ச நீதிமன்றத்தின் முற்போக்கான நெறிமுறைகள் அதிகாரப் பிரிவு என்ற கோட்பாட்டைப் பயன்படுத்தி அரசின் மூன்று உறுப்புகளின் அதிகாரத்துக்கான எல்லைகளை உருவாக்கியது. இந்திய உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில்  நிர்வாகத்துறை, அரசாங்கத்தின் இதர கிளைகள் ஆகியவற்றிலிருந்து நீதித்துறை சுயேச்சையாகச் செயல்படுவதன் முக்கியத்துவத்தைப் பற்றிய கருத்துகளைத் தெரிவித்ததுடன், நீதித்துறையின் சுதந்திரம் என்பது அத்துறையின் அடிப்படை அம்சம் என்பதை உயர்த்துப் பிடித்தது.

மதச்சார்பின்மை பற்றி

அதிகாரப் பிரிவைப் போலவே மதச்சார்பின்மை என்பதையும் அரசமைப்புச் சட்டம் தெளிவாக எடுத்துரைப்பதில்லை. உண்மையில் ‘மதச்சார்பின்மை’ என்ற சொல்லே அரசமைப்புச் சட்டம் என்ற பனுவலில் இல்லை. மதச்சார்பின்மை என்ற கோட்பாடு அடிப்படை உரிமைகள், அரசுக் கொள்கை பற்றிய வழிகாட்டு நெறிகள் ஆகியவற்றிலிருந்து அனுமானிக்கப்பட்டதாகும்.

அரசமைப்பு சட்டம் மதச்சார்பின்மை, சோசலிசம் ஆகியவற்றைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என்ற திட்டவட்டமான திருத்தத்தை கே.டி.ஷா கொண்டு வந்தார். அது தேவையற்றது என்று டாக்டர் அம்பேத்கர் அந்தத் திருத்தத்தை நிராகரித்தார். அரசுக் கொள்கை பற்றிய வழிகாட்டு  நெறிகளில் சோசலிசம் என்பது சேர்க்கப்பட்டுள்ளது என்பதை விளக்கிய அதேவேளை மதச்சார்பின்மை என்பதை  முற்றாகப் புறம்தள்ளினார்.

இதைப் பொருட்படுத்தாமல் பொதுமக்களின் சிந்தனையில் , மதச்சார்பின்மை என்ற கோட்பாடு – பல பத்தாண்டுகளில் மீறப்பட்ட பிறகும் –  உயிர்த்திருந்ததால் அது அரசமைப்பு சட்ட  நெறிகளில் ஒன்றாக உறுதியாக நிலைநாட்டப்பட்டு விட்டது.

தனிப்பட்ட விவகாரம் அல்ல

பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்ஸும் பிரதமரும்  இந்தியாவின் தலைமை நீதிபதியும் சந்தித்தது தொடர்பான விவாதத்தைக் குறைத்து மதிப்பிடும் பொருட்டு அவர்கள் இருவரும் தனிப்பட்ட முறையில்தான்  செயல்பட்டதாக வாதித்தன. ஆயினும் உயர் பதவிகளிலுள்ள தனிமனிதர்களுக்கு இந்த வாதம் பொருந்தாது. செய்தியேடுகள், தொலைக்காட்சி சேனல்கள் ஆகியவை இந்த நிகழ்வைப் பற்றிய செய்திகளை வெளியிடாமல் இருந்திருந்தாலும்கூட,  அரசமைப்புச் சட்டத்தின்படி ஒழுக வேண்டிய இரு முக்கிய மனிதர்கள் செய்த பூஜை பொதுமக்களின் பார்வைக்கு  வந்தவுடன், நீதித்துறைக்குள் மதத்தைப் புகுத்துவது பற்றிய கேள்விகள் எழத்தான் செய்தன.

இந்தியா பல மத நம்பிக்கைகளைக் கொண்ட நாடு. ஆக, அரசமைப்புச் சட்டத்தின்படி செயல்பட வேண்டியவர்கள், ஒரு குறிப்பிட்ட மதத்தைப் பொதுமக்களின் பார்வைக்குக் காட்டுவது அவர்களின் பதவிப் பிரமாணத்தின்போது கொடுத்த வாக்குறுதிகளுடன் ஒத்துப் போகிறதா? எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம், ”மதத்தை அரசு அதிகாரத்துடன் கலப்பதை அரசமைப்புச் சட்டம் அங்கீகரிப்பதில்லை.  அரசு அதிகாரம், நீதித்துறை அதிகாரம் ஆகிய இரண்டும் தனித்தனியாக வைக்கப்பட வேண்டும்” என்று கூறியது.

மோடி ஆட்சிக்கு வந்த நாள் முதல் வெட்கமே இல்லாமல் மதத்தைப் பறைசாற்றி வந்தார். இந்து சாத்திரங்களிலுள்ள மந்திரங்கள் ஓதப்பட்டும், பலவகையான சாதுக்களும் சாமியார்களும் அடங்கிய கூட்டத்திற்கு முன்,  சட்டை அணியாத  பிரதமர் நெடுஞ்சாண் கிடையாக  தரையில் விழுந்து நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தைத் திறந்து வைத்தபோதும், அயோத்தியில் ராமர் கோயிலைத் திறந்து வைக்கையில் தானே புரோகிதராக செயல்பட்ட போதும் மட்டுமல்ல, அவரது ஒவ்வொரு செய்கையும் வெட்கமே இல்லாமல் மதச்சார்பின்மை என்ற   நெறியை மீறியது.

ஆனால் , அரசமைப்புச் சட்டத்தின் பாதுகாவலரான தலைமை நீதிபதி, பொதுமக்களின் பார்வைக்குப் படும்படி தனது இந்துத்தன்மையைக் காட்சிப்படுத்தியது தகாத செயல். தலைமை நீதிபதியால் தனது வீட்டில் அமைதியாக பூஜை செய்திருக்க முடியும். அவரது சக நீதிபதிகளுக்கு அழைப்பு விடுத்திருக்கவும் முடியும். அது பெரும் சர்ச்சைக்கு இடம் தந்திருக்காது.

பாஜக முகாம் முன்வைக்கும் இன்னொரு  மொன்னையான வாதம் என்னவென்றால்,  முன்னாள் பிரதமர்கள் ‘இப்தார்’ விருந்துக் கூட்டத்தில் கலந்துகொண்டது பற்றியதாகும். ரம்லான் நோன்பின் கடைசி நாளன்று நடத்தப்படும் இப்தார் விருந்து கறாராகச் சொல்வதென்றால் மத நிகழ்ச்சியல்ல. மாறாக நல்ல உணவையும்  நல்லெண்ணத்தையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சிதான். மேலும், இப்தார் விருந்துக்கு வரும் பலர் எவ்விதமான மதச் சடங்குகளையும் செய்வதில்லை. இதைத் தலைமை நீதிபதியின் வீட்டில்  பூஜை நடத்த பிரதமர் அழைக்கப்பட்டதுடன் ஒப்பிட முடியாது.

இந்த பூஜை பற்றிய வீடியோ ‘வைரலாகப்’ பரவியது. அதைப் பகிர்ந்து கொண்ட மோடி கூறினார்: “இந்தியாவின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்ஜி வீட்டில் நடந்த கணேஷ் பூஜையில் நான் கலந்து கொண்டேன். பகவான் ஸ்ரீ கணேஷ் எங்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சியையும் வளத்தையும் அருமையான உடல்நலத்தையும் வழங்கி எங்களை ஆசிர்வதிக்கட்டும்”. இந்த செய்திதான் எதிர்வினைகள் வரச் செய்தது.

தேர்தல் நடக்கும் காலமாக இருந்தாலும் சரி, அவை நடைபெறாத காலமானும் சரி, மோடியை  இத்தகைய பாதுகாப்பின்மை உணர்வு இறுகப் பிடித்துக்கொண்டுள்ளது. அவருடைய செயல்கள் ஒன்றுகூட  வாக்குகளை மனதில் கொள்ளாமல் செய்யப்படுவதில்லை. பூஜை செய்யும்போது, அவருக்கு மிக முக்கியமானதாக விளங்கப் போகிறதும் மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெறவுள்ளதுமான  சட்டமன்றத் தேர்தலில் மராத்தி வாக்காளர்களைக் கவரும்  நோக்கத்துடன் மராத்தியர்களுக்கே உரிய உடையையும் ‘காட்டி தொப்பியையும்’ அணிந்திருந்தார்.

மோடியின் அரசியல் எப்போதுமே அவரது இந்து அடையாளத்தை வெளிப்படையாக அறுதியிடுவதைச் சார்ந்துள்ளது. அந்த வீடியோவை அவரே தானாகவும்  அவரது நட்புச் சக்தியான  ’ஆசியன் நியூஸ் இன்டர்நேஷனல் –ANI’  என்ற ஊடகத்தின்  மூலமும் வெளியிட்டது இந்துக்களின் வாக்குகளை அவருக்கு சார்பானதாக இருக்கும் வகையில் ஒருமுனைப்படுத்தக் கூடிய சர்ச்சையை உருவாக்கத்  திட்டமிட்டுச் செய்யப்பட்டதாகும்.

Is the faith of the people in the Judiciary being undermined?

நீதித்துறையின் அறம் 

கணபதி பூஜையைத் தன் வீட்டில் நடத்துவதற்கு பிரதமரை இந்தியாவின் தலைமை நீதிபதி  அழைத்ததற்கு எதிரான  தெளிவான சட்ட நெறி ஏதும் இல்லை என்றாலும், அவரது இந்தச் செயல் முக்கியத்துவம் வாய்ந்த தார்மிக, அறவியல் பிரச்சினைகளை எழுப்புகிறது.

சுதந்திரம் என்பது அடிப்படையில், கறாரான சட்ட நுணுக்கக் கூறுகளைக் கடந்து செல்லக் கூடியதாகும். நிர்வாகத்துறை, சட்டம் இயற்றும் அவை ஆகியவற்றிலிருந்து  நீதித்துறை சுதந்திரமாக  இயங்குவது என்பது அது பற்றி வகுக்கப்பட்ட திட்டவட்டமான நடைமுறை சார்ந்த விஷயம் மட்டுமன்று; மாறாக பொதுமக்கள் நீதித்துறையின் செயல்பாடுகளை எப்படிப் பார்க்கிறார்கள் என்ற விஷயமும் ஆகும்.

நீதி வழங்கப்பட வேண்டும் என்பது மட்டும் முக்கியமானது அல்ல. அது வழங்கப்படுவதாகத் தோன்றுவதும் முக்கியம். நீதித் துறையின் தலைவராக உள்ள இந்தியாவின் தலைமை நீதிபதிக்கு, உச்ச நீதிமன்றத்தின் பாரபட்சமற்ற தன்மையின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை நிலைநிறுத்தும் கடமையும் உண்டு.

முன்பு உச்ச நீதிமன்றம்,  ஓர் லட்சியபூர்வமான நீதிபதி எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்பதைப் பின்வருமாறு வகைப்படுத்தியது: அவர், ஆசைகளையும் அபிலாஷைகளையும் விட்டொழித்த  ஒரு துறவிபோல வாழவும் நடந்து கொள்ளவும் வேண்டும். இப்படி ’ஒதுங்கி வாழ்வது’ நீதிபதிகள் எந்த மனிதர்களின் உரிமைகள், பொறுப்புகள் ஆகியன பற்றிய தீர்ப்பு வழங்குகிறார்களோ அந்த மனிதர்களுடன் தொடர்பு கொள்வதைத் தடுக்கும் நோக்கம் கொண்டதாகும். ஒரு நீதிபதியின் பாரபட்சமற்ற தன்மை  எவ்விதப் பழிச்சொல்லுக்கும்  ஆளாகாமல் இருக்க வேண்டும்.   நீதிபதிகள் ‘ஒதுங்கி வாழ்வதும்’கூட அவர்களுடைய சுதந்திரத்தை உறுதி செய்கிறது. அது மட்டுமல்ல, விருப்பு வெறுப்பு இல்லாமல் ஒரு நீதிபதி தீர்ப்பு வழங்க  வேண்டும் என்ற எதிர்பார்ப்பு குடிமக்களிடம் உள்ளது. 1997-ல் உச்ச நீதிமன்றம்   நீதிபதிகள், தாங்கள்  பணியாற்றும் காலத்தில் பற்றியொழுக வேண்டிய 16 நெறிகள் பற்றிய விவரங்களை உள்ளடக்கிய ’நீதித் துறை வாழ்வின் விழுமியங்களை மீண்டும் எடுத்துரைத்தல்’  ( Restatement of Values of Judicial Life) என்ற ஆவணத்தை ஏற்றுக் கொண்டது.

அது கட்டாயமாக நடைமுறைப்படுத்தக் கூடியது அல்ல என்றாலும், தார்மிக நெறிகளைக் கொண்ட ஓர் ஆவணமாக சேவை புரிகிறது. சட்ட ஆணையம் (Law Commission)  தனது 195ஆம் அறிக்கையில், இந்த தார்மிக நெறிகளை மீறுவதை ஒரு   தவறான நடவடிக்கை என்று கருத வேண்டும் என்று பரிந்துரைத்தது. ஆனால் இந்தப் பரிந்துரை  இதுவரை செயல்படுத்தப்படவில்லை.

இந்த அறநெறிகளில் மிகவும் கவனிக்கத்தக்க இரு நெறிகள் உள்ளன: 1. ஒரு நீதிபதி, தன் பதவிக்குள்ள கண்ணியத்துக்கு இயைந்த வகையில் கணிசமான அளவில் ஒதுங்கி வாழ்வதைக் கடைப்பிடிக்க வேண்டும்; 2. ஒவ்வொரு நீதிபதியும் எல்லாத் தருணங்களிலும், தான் பொதுமக்களின் பார்வையின் கீழ் உள்ளதைப் பற்றிய உணர்வு கொண்டிருக்க வேண்டும்; சட்டம்  அவரிடமிருந்து எதிர்பார்க்கிற ஏதொன்றையும் செய்யத் தவறுவது அவரால் வகிக்கப்படுகின்றதும் பொதுமக்களால் மதிக்கப்படுகின்றதுமான உயர் பதவிக்குப் பொருந்தாததாகும்.”

இது, சட்டத்திற்குத் தொடர்பில்லாத விஷயங்களைப் பற்றி ஒரு கூட்டத்தில் பேசுகின்ற நீதிபதிக்கும் பொருந்தும். அப்படிப் பேசுவது அவரது விருப்புவெறுப்புகளை அம்பலப்படுத்துவதுடன் நீதிபதிகளின் பாரபட்சமற்ற தன்மையைப் பற்றிய சந்தேகங்களை எழுப்பும்.

சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் (International Criminal Court) ‘நீதித்துறை சார்ந்த  ஒழுக்க நெறிகள்’  என்ற ஆவணம், நீதிபதிகளின் சுதந்திரம், பாரபட்சமற்ற தன்மை, நேர்மை ஆகிய நெறிகளை வலியுறுத்துகிறது. மேற்சொன்ன ஆவணத்தின் பிரிவு 3 கூறுகிறது: “நீதிபதிகள் தங்கள் பதவிக்குள்ள சுதந்திரத்தையும் நீதிமன்றத்தின் அதிகாரத்தையும் நிலைநிறுத்த வேண்டும். அதற்கு இணங்கிய வகையில் தங்கள் நீதித்துறை செயல்பாடுகளை நிறைவேற்ற வேண்டும். நீதிபதிகள், தங்கள் நீதித்துறை செயல்பாடுகளில் குறுக்கிடும் வாய்ப்புள்ள அல்லது அவர்களது சுதந்திரத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைப் பாதிக்கின்ற எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது.”

இந்தியாவின் தலைமை நீதிபதியின் வீட்டில் பிரதமர் கணபதி பூஜை நடத்திய நிகழ்வு, நீதித்துறையின் சுதந்திரம் பற்றிய மிக முக்கியமான தார்மிக, அரசமைப்புச் சட்டப் பிரச்சினைகளை எழுப்புகிறது. இரு முக்கியமான அறவியல் பிரச்சினைகள் எழுகின்றன. அவை பின்வருமாறு: 1. பாரபட்சமற்ற தன்மை பற்றிய புரிதல்: மேற்சொன்ன நிகழ்வு மதம் சார்ந்ததாக இருந்தபோதிலும் இந்தியாவின் தலைமை நீதிபதியாக இப்போது பதவி வகிப்பவர் பிரதமரை தன் வீட்டிற்கு அழைத்து விருந்தோம்பியது நீதித் துறையின் பாரபட்சத்தன்மையை சந்தேகிக்கச் செய்யும். 2. நீதித்துறையின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை, அத்துறையின் உண்மையான சுதந்திரத்தை மட்டுமல்ல, அந்த சுதந்திரம் மக்களால் எவ்வாறு பார்க்கப்பட்டுப் புரிந்துகொள்ளப்படுகிறது என்பதையும் சார்ந்துள்ளது.

தலைமை நீதிபதிக்கும் பிரதமருக்கும் நடந்த சந்திப்பு போன்றவை, அவர்களுக்குள்ள  தனிப்பட்ட உறவுகள், நீதித் துறை வழங்கும் தீர்ப்புகளில் – குறிப்பாக அரசியல்ரீதியான உணர்ச்சிகளைத் தூண்டக் கூடியவையும் அரசாங்கம் தொடர்பானதுமான தீர்ப்புகளில் – தாக்கம் ஏற்படுத்தும்  என்ற சந்தேகங்களுக்கு வழிவகுக்கும்.

முரண்படும் நலன்கள்

இந்தியாவின் தலைமை நீதிபதி,  நிர்வாகத்துறையை நேரடியாகத் தொடர்புபடுத்தும் வழக்குகளை அல்லது இனிமேல் வரக் கூடிய வழக்குகளை  –  இவற்றில் அரசமைப்பு சட்டம் தொடர்பான வழக்குகள், தேர்தல் தகராறுகள், அல்லது ஏதேனும் ஒரு தரப்பினருக்கு ஆதாயத்தையோ, இழப்பையோ தரக்கூடிய வழக்குகள்  ஆகியன அடங்கும்  – விசாரணை செய்து கொண்டிருக்கக் கூடும்.

ஒரு நீதிபதி விருப்பு வெறுப்பு அற்றவராக இருப்பது மட்டுமின்றி அப்படிப்பட்டவராகத்  தோன்றவும் வேண்டும் என்ற  நெறி தலையாய முக்கியத்துவம் கொண்டதாகும்.  தலைமை நீதிபதி தனிப்பட்ட முறையில் பிரதமரைத் தன் வீட்டிற்கு அழைப்பது  மேற்சொன்ன நெறியை பலகீனப்படுத்தக் கூடியது என்று பார்க்கப்படலாம். அதற்குக் காரணம், இனிமேல்  அவரால் வழங்கப்படும் தீர்ப்புகளில் சட்டத்தின்  தேவைகளுக்கும் அவரது சொந்த விருப்பத்துக்குமிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகும் சாத்தியப்பாடு இருப்பதுதான்.

நீதித்துறை சுதந்திரம் என்பது  நீதிபதியின் பணித்துறை சார்ந்தது மட்டுமல்ல; அது தார்மிகரீதியான,  அறம்  சார்ந்த தேவையுமாகும். நீதிபதிகளிடமிருந்து எதிர்பார்க்கப்படுவது என்னவென்றால், அவர்  விருப்பு வெறுப்பு சார்ந்தவராகவோ வேறொருவரின் செல்வாக்குக்கு இசைந்து போகிறவராகவோ தோன்றுவதையும்கூடத் தவிர்க்க  வேண்டும் என்பதுதான்.

நீதித்துறை என்பது நிர்வாகத்துறையைக் கட்டுப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்று அரசமைப்புச் சட்டம் எதிர்பார்க்கிறது. இந்த இரண்டு துறைகளுக்குமிடையே  நெருக்கமான உறவு  இருப்பதாகப் பார்க்கப்படுவதும்கூட  நீதித்துறை வகிக்க வேண்டிய பாத்திரத்திற்குக் குழி பறிக்கும்.   இந்தியாவின் தலைமை நீதிபதியும் பிரதமரும் சந்தித்துக் கொண்டதில் தீய நோக்கம் ஏதுமில்லை என்றாலும்கூட, அந்தச் சந்திப்பு, அரசமைப்பு சட்டம் பெற்றுள்ள மரியாதைக்குக் குழி பறிக்கும் அபாயத்தைக்  கொண்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின்   நம்பகத்தன்மை என்பது, வெளியில் இருந்து வரும் நிர்பந்தங்கள், நீதிபதியின் விருப்பு வெறுப்புகள் ஆகியவற்றிலிருந்து விடுபட்டு பாரபட்சம் இல்லாமல் தீர்ப்பு வழங்கக்கூடிய ஆற்றல் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையைச் சார்ந்துள்ளது.  இந்த நம்பிக்கை  அற்றுப்போனால், அதை மீட்டெடுப்பது மிகவும் கடினமானது – கணபதி என்ற கடவுளுக்கும்தான்!

கட்டுரையாசிரியர் பற்றிய குறிப்பு:

Is the faith of the people in the Judiciary being undermined?

ஆனந்த் டெல்டும்டெ (Anand Teltumbde) சமகால இந்திய அறிஞர்களில் முக்கியமானவர்களில் ஒருவர், எழுத்தாளர், சிவில் உரிமைச் செயற்பாட்டாளர். இந்திய அரசாங்கத்தின் பொதுத்துறைகளாக  இருந்த BPCL –இல் நிர்வாக இயக்குநராகவும் PIL நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரியாகவும் பணிபுரிந்த பின்  கரக்பூரிலுள்ள IITயில் பேராசிரியராகவும் கோவா இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் என்ற உயர் கல்வி நிறுவனத்தில்  பெருந்தரவுகள் பகுப்பாய்வுத் துறையின்  (Department of Big Data Analisis) தலைவராகவும் முதுநிலைப் பேராசிரியராகவும் இருந்தவர். பீமா கோராகோவன் வழக்கில் ’நகர்ப்புற நக்சலைட்’ என்ற பொய்க்குற்றம் சாட்டப்பட்டு எட்டாண்டுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர். அவரது முக்கியமான நூல்களில் மூன்றும்  சிறு வெளியீடுகளில் ஒன்றும் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன. சட்ட வல்லுநர்களால் நடத்தப்படும் The Leaflet  என்ற ஆங்கில டிஜிட்டல் ஏட்டின் 19 செப்டம்பர் 2024 இதழில் அவர் எழுதிய ’Even Ganapathi cannot fix the breach of people’s trust in the judiciary’  என்ற கட்டுரையின் தமிழாக்கம் இங்கு தரப்படுகிறது.

மொழிபெயர்ப்பாளர் பற்றிய குறிப்பு :

Is the faith of the people in the Judiciary being undermined? By SV Rajadurai Article in Tamil

தமிழகத்தின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான எஸ்.வி.ராஜதுரை மார்க்ஸிய அறிஞர்; பெரியார், அம்பேத்கர் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டவர்; மொழிபெயர்ப்பாளர்; திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் பெரியார் உயராய்வு மையத்தின் தலைவராகவும் பேராசிரியராகவும் இருந்தவர். அவரது அண்மைக்கால நூல்கள்: மார்க்ஸியக் கலைச் சொற்கள், இருண்ட காலங்களில் பாடுவதும் இருக்குமா?, உச்சி வெயில். நீண்ட விளக்கவுரைகளுடன் மார்க்ஸ்,எங்கெல்ஸ் எழுதிய ‘கம்யூனிஸ்ட் கட் அறிக்கை’யைத் தமிழாக்கம் செய்துள்ளவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தொடர்புடைய கட்டுறைகள்:

பாசிசம் வீழ்த்தப்பட்ட வெற்றி நாள்!

மே நாள் பற்றி தந்தை பெரியார்

பாலஸ்தீனத்தில் நடக்கும் இனக்கொலை: இந்தியா வேடிக்கை மட்டுமா பார்க்கிறது?

காஸா போர் : இஸ்ரேலும் ஏகாதிபத்திய நலன்களும்!

டாப் 10 நியூஸ்: மோடி அமெரிக்க பயணம் முதல் இலங்கை அதிபர் தேர்தல் வரை!

கிச்சன் கீர்த்தனா: மோர் ஆப்பம்

+1
0
+1
1
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

1 thought on “நீதித்துறையின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை ஆட்டம் காண்கிறதா?

  1. அடேய்..ஆனந்..டம்டும்டே..
    விடுய்யா சென்னை வரும்போது பெரியார் திடலுக்கும் டோலர் நொல்லகண்ணு வீட்டுக்கும் போய் வர சொல்லிடுவோம்…
    காங்கிரஸ் ஆட்சியில் நடந்த நீதி! கொலைகள் பற்றி ஒரு வரி எழுதி இருந்தால்..நீயும் ஒரு ரைட்டப் பன்றவன்னு நம்பலாம்..
    போய் உரலை எடுத்து வயித்துலயே குத்திக்க..🤪🤪🤪🤪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *