பிகாரில் பாரதிய ஜனதா உடனான கூட்டணியை ஐக்கிய ஜனதா தளம் முறித்துக் கொள்வது ஏறத்தாழ உறுதியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றன.
நீண்ட நாளாக விரிசல்
பிகாரில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம், பாஜக கூட்டணியில் நீண்ட நாளாகவே விரிசல் இருந்து வருகிறது. பிகார் முதல்வர் நிதிஷ் குமார் தொடர்ந்து பிரதமர் மோடியை சந்திப்பதை வேண்டுமென்றே தவிர்த்து வருவதாகக் கூறப்படுகிறது. கடந்த மாதம், கொரோனா தொற்றை காரணம் காட்டி, குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அளித்த விருந்தில் பிகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் கலந்து கொள்ளவில்லை.
தொடர்ந்து புறக்கணிப்பு
இதைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கும் செல்லாமல், துணை முதலமைச்சரை அனுப்பி வைத்தார். இப்படி, பாஜகவை முதலமைச்சர் நிதிஷ் குமார் தொடர்ந்து புறக்கணித்து வருவது, பிகார் மற்றும் தேசிய அரசியலில் பரபரப்பைக் கிளப்பி உள்ளது. இதேபோன்று மத்திய அமைச்சரவை கூட்டத்திலும் பங்கேற்பதில்லை என்று நித்திஷ்குமார் முடிவு செய்தாக சொல்லப்படுகிறது.
அவசரக் கூட்டம்
இந்தநிலையில் நிதிஷ் குமார் தலைமையில் நாளை (ஆகஸ்ட் 9)அவசரமாக கட்சி எம்.பி.க்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இக்கூட்டத்தில் மிக முக்கிய முடிவுகள் எட்டப்படும் என்று தெரிகிறது. இன்று மாலையோ அல்லது நாளை காலைக்குள்ளோ ஐக்கிய ஜனதா தளத்தின் அனைத்து எம்.பி.க்களும் பாட்னா தலைமை அலுவலகத்துக்கு வருமாறு பணிக்கப்பட்டுள்ளது.
ஆர்.பி.சிங் மீது புகார்
இந்த கூட்டத்திற்கு முக்கிய காரணம் ஆர்.சி.பி.குமார் சிங் தான் என்று சில நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். பிகாரின் ஐஏஎஸ் அதிகாரியான ஆர்.சி.பி.குமார் சிங், ஐக்கிய ஜனதா தள மாநிலங்களவை எம்.பி.யாக இருந்தார். கடந்த ஜூலை 31ஆம் தேதியுடன் அவரது பதவி முடிந்தது. ஆனால் அவருக்கு மறுவாய்ப்பு வழங்கவில்லை. இதன் காரணமாக மத்திய அரசில் அவருக்கு அமைச்சர் பதவியும் பறிபோனது. இந்நிலையில் அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பையும் துறந்தார். தற்போது, ஆர்.பி.சிங் மீது ஊழல் குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளதால் அவரிடம் கட்சி விளக்கம் கேட்டு இருக்கிறது.
கருத்து மோதல்
பீகார் மாநிலத்தில், முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் – பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி அரசு அமைந்ததில் இருந்தே, முதலமைச்சர் நிதிஷ் குமார் மற்றும் பாஜகவுக்கும் இடையே அவ்வப்போது கருத்து மோதல்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன. அக்னிபத் திட்டம், ஜாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட விவகாரங்களில், பாஜகவுடன், முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு முரண்பாடு ஏற்பட்டது. இப்படி பல்வேறு விவகாரங்களில் கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன.
கூட்டணி முறிவு?
இந்தநிலையில் தான் நித்திஷ்குமார் பாஜக உடனான சந்திப்பை புறக்கணித்து வருகிறார். இதனால் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் அரசு பாஜக உடனான கூட்டணியை விரைவில் முறித்து காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், சமாஜ்வாதி, இடதுசாரிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்கலாம் என்று தகவல் கசிந்து வருகின்றன.
கலை.ரா
ஆளுநர் ஆர்.என். ரவி- நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு!A