தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தமிழகத்தில் அதிமுகவே தலைமை: ஜெயக்குமார்

அரசியல்

அதிமுக பாஜக கூட்டணி குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார்.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக களத்தில் இறங்கி வேலையைத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தேர்தலை முன்னிட்டு நேற்று பணிமனை அமைக்கப்பட்டது.

இதில் வைக்கப்பட்ட பேனரில் பாஜக தலைவர்கள் யாரும் இடம்பெறவில்லை. அதுபோன்று தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என இடம்பெற்றிருந்தது.

அந்த பதாகையில் அதிமுக கூட்டணியில் இருக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஜி.கே.வாசன், புரட்சி பாரதம் கட்சியின் பூவை ஜெகன்மூர்த்தி, புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமி ஆகியோரின் படங்கள் இடம்பெற்றன.

இதனால் அதிமுக பாஜக கூட்டணி முறிகிறதா எனக் கேள்வி எழுந்தது.

இதுதொடர்பாக இன்று (பிப்ரவரி 2) சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எந்த நிலையிலும் இரட்டை இலை சின்னம் முடக்கப்படாது. வழக்கு நிலுவையில் இருப்பதால் அதுகுறித்து பேச விரும்பவில்லை.

ஓபிஎஸ் ஒரு மண் குதிரை அவரை நம்பி ஆற்றில் இறங்கக்கூடாது என அவருடன் இருப்பவர்களுக்கும் தெரியும், மக்களுக்கும் தெரியும்.

டைப்போகிராபிக்கல் பிழை காரணமாக ’முற்போக்கு’ என்ற வார்த்தை வந்துவிட்டது. அதன்பிறகு அது சரிசெய்யப்பட்டது” என்றார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டெல்லி சென்ற பிறகு சரிசெய்யப்பட்டதா என்பது தொடர்பான கேள்விக்கு, “கட்சி விவகாரங்களில் எப்போதும் பாஜக தலையிட்டது கிடையாது. அண்ணாமலையும் எந்த அறிவுரையும் வழங்கியது கிடையாது.

என்னைப் பொறுத்தவரை அது டைப்போகிராபி பிழை. கூட்டணி தர்மம் என்ற அடிப்படையில் எல்லோருக்கும் மரியாதை உண்டு.

தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக தலைமையிலான கூட்டணி. தேசிய அளவில் பார்த்தால் தேசிய ஜனநாயகக் கூட்டணி.

தற்போது ஆரம்பக்கட்ட நிலை நிலவுகிறது. இது இறுதி செய்யும் போது யார் யார் எல்லாம் கூட்டணியில் இருக்கிறார்களோ அவர்களது படங்கள் எல்லாம் போடப்படும்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் 2019ல் இங்கு வந்த போது அதிமுக தலைமையிலான கூட்டணிதான் என்று கூறினார். அதுபோன்று இந்த கூட்டணி தொடர்கிறது.

அனுமான கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் தான் எல்லாம் போய் கொண்டிருக்கிறது. உரிய நேரத்தில் அவர்கள் முடிவெடுத்துச் சொல்வார்கள். நேரம் இருக்கிறது, பொறுத்திருந்து பாருங்கள்” என்றார்.

பாஜக வேட்பாளரை அறிவித்தால் அதிமுக தனது வேட்பாளரை திரும்பப் பெறுமா என்ற கேள்விக்கு அதிமுக முன்வைத்த காலை பின் வைக்காது” என கூறினார்.

பிரியா

அதானி குழும விவகாரம்: முடங்கிய நாடாளுமன்றம்!

ரூ.44 ஆயிரத்தை நெருங்கிய தங்கம் விலை!

+1
1
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *