தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலத் தலைவர் அழகிரி மாற்றப்படப் போகிறார் என்று மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஊடகங்களில் தகவல் பறந்து கொண்டே இருக்கும். பிறகு அந்த தகவல் அப்படியே தரையிறங்கிவிடும்.
இப்படியாக, ‘காங்கிரஸில் இது சகஜமப்பா’ என்றாகிவிட்ட நிலையில் நேற்று (ஜூன் 25) தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி டெல்லி சென்று இன்று (ஜூன் 26) மாலை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்துள்ளார். இதன் மூலம் காங்கிரஸ் தமிழ்நாடு தலைவர் மாற்றப்படுகிறாரா என்ற கேள்விகள் வலிமை அடைந்துள்ளன.
2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார் கே.எஸ். அழகிரி. ஐந்து வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் அழகிரி தலைவர் பதவியில் இருந்து மாற்றப்படுவார் என்று காங்கிரஸ் வட்டாரத்தில் தகவல்கள் தீவிரமாக பேசப்படுகின்றன.
இதுகுறித்து காங்கிரஸ் வட்டாரங்களில் விசாரித்தபோது,
“2019, 2021 ஆகிய மக்களவை, சட்டமன்றத் தேர்தல்களில் அழகிரியை தலைவராகக் கொண்டு காங்கிரஸ் நல்ல வெற்றி பெற்றது. ஆனால் கூட்டணியில் இதற்கு முன்பு பெற்ற இடங்களை காங்கிரஸால் பெற முடியவில்லை என்ற குறை அழகிரி மீது சொல்லப்பட்டது.
மேலும் ஆரம்பத்தில் எல்லா தரப்பினரையும் அரவணைத்துச் சென்ற அழகிரி போகப் போக அதில் இருந்து மாறினார். சமீப மாதங்களில் காங்கிரஸ் மாநிலத் தலைவரான அழகிரி கலந்துகொள்ளும் எந்த நிகழ்ச்சியிலும் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, தங்கபாலு, ஈவிகேஸ் இளங்கோவன், திருநாவுக்கரசர் உள்ளிட்ட யாரும் பங்கேற்பதே இல்லை. மாதங்களுக்குப் பின் கடந்த ஜூன் 19 ஆம் தேதி ராகுல் பிறந்தநாள் நிகழ்ச்சியில்தான் இவர்கள் அனைவரும் ஒன்று சேர பங்கேற்றனர். மேலும் கட்சி நிர்வாக அமைப்பில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகவும் டெல்லி தலைமைக்கு புகார்கள் போயின.
மேலும் தன்னை மாற்றப் போகிறார்கள் என்பதை அறிந்தோ என்னவோ அழகிரியே முக்கியமான நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை சில மாதங்களாகவே தவிர்த்துவிட்டார். ஈரோடு இடைத் தேர்தல் வேட்பாளர் முடிவு செய்யும் கூட்டத்தில் கூட அழகிரி பங்கேற்கவில்லை.
இந்த பின்னணியில் புதிய தலைவர் யார் என்ற கேள்வி கட்சிக்குள் எழுந்திருக்கிறது. இதில் தற்போதைய கிருஷ்ணகிரி எம்பி செல்லகுமாரின் பெயர் முன்னணியில் இருக்கிறது. முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த செல்லகுமார் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். ராகுல் காந்தி, சோனியா காந்தியோடு மிகவும் நெருக்கமானவர்.
அதேநேரம் சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் தனக்கு மாநில காங்கிரஸ் தலைவர் ஆவதில் ஆர்வம் இருப்பதாக வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். அவருக்காக அவரது தந்தை ப.சிதம்பரம் டெல்லியில் பிரியங்கா காந்தி மூலமாக முயற்சி செய்வதாக டெல்லி காங்கிரஸ் வட்டாரங்களில் கூறுகிறார்கள்.
அதேநேரம் கர்நாடக தேர்தல் வெற்றியில் காங்கிரசுக்கு முக்கியப் பங்காற்றிய சசிகுமார் செந்தில், கரூர் எம்பி ஜோதிமணி ஆகியோரது பெயர்களும் காங்கிரஸ் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகின்றன” என்கிறார்கள் காங்கிரஸ் வட்டாரத்தில்.
இதற்கிடையே இன்று (ஜூன் 26) மாலை டெல்லியில் காங்கிரஸ் அகில இந்திய தலைவர் கார்கேவை சந்தித்திருக்கிறார் அழகிரி. ஒருவேளை அழகிரி காங்கிரஸ் தலைவராக தொடர்ந்தால் அவர் வரும் மக்களவைத் தேர்தலில் நிற்க முடியாது. மக்களவையில் தேர்தலில் நிற்க விரும்பினால் தலைவராக தொடர முடியாது என்கிறார்கள் டெல்லி காங்கிரஸ் வட்டாரங்களில்.
-வேந்தன்
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்: உயர்நீதிமன்ற தீர்ப்பின் முழு பின்னணி!
அதிபர் மகனின் ‘அந்த’ போட்டோக்கள் : அமெரிக்க அரசியலில் புயல்!