விஸ்வகர்மா திட்டத்தில் மிஸ் ஆகிறதா தமிழ்நாடு?

அரசியல்

பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய பிறந்தநாளான இன்று (செப்டம்பர் 17) விஸ்வ கர்மா யோஜனா என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தின்போது செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் மோடி விஸ்வகர்மா திட்டத்தை அறிவித்தார். அடுத்த நாளே, ஆகஸ்ட் 16ஆம் தேதி அவரது தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ரூ.13,000 கோடி மத்திய அரசு நிதி ஒதுக்கியது.

தச்சர், கொல்லர், பொற்கொல்லர், குயவர், சிற்பிகள், கல் தச்சர்கள், காலணி செய்பவர், தைப்பவர், கொத்தனார், கூடை, பாய், துடைப்பம் தயாரிப்பவர், கயிறு செய்பவர், பாரம்பரியமாக பொம்மைகள் செய்பவர், முடிதிருத்தும் தொழிலாளர், பூமாலைகள் கட்டுபவர், சலவைத் தொழிலாளர், தையல்காரர், மீன்பிடி வலை தயாரிப்பவர், படகு தயாரிப்பவர், கவசம் தயாரிப்பவர், சுத்தியல் மற்றும் கருவிகள் செய்பவர்கள், பூட்டுகள் செய்பவர்கள்  இந்த திட்டத்தில் பயன் பெறலாம் என்றும் அறிவித்தது.

இந்த திட்டத்தில் சேர விரும்வோர் https://pmvishwakarma.gov.in/ இணையத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். அதன்படி, விஸ்வகர்மா சான்றிதழ், அடையாள அட்டை ஆகியவை வழங்கப்படும். தொழில் சார்ந்த கருவிகளை வாங்க ரூ.15,000 ஊக்கத் தொகைவழங்கப்படும். முதல் தவணையாக ரூ.1 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும். இரண்டாம் தவணையாக ரூ.2 லட்சம் வரை 5 சதவீத வட்டியுடன் கடன் வழங்கப்படும்.

ஆனால் இத்திட்டம் குலத் தொழிலை ஊக்குவிக்கிறது என தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இந்த திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று திராவிட கழக தலைவர்  கி.வீரமணி தலைமையில் கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, டாக்டர் எழிலன் எம்.எல்.ஏ, காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விஸ்வகர்மா திட்டத்தின் நோக்கம், பயன், அதன் வழிகாட்டி விதிமுறைகள் போன்றவை குறித்து ஆய்வு செய்து, இத்திட்டம் சமூக, பொருளாதாரத்தில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது குறித்து அறிக்கை வழங்க, தமிழ்நாடு அரசும் மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் தலைமையில் குழு அமைத்தது.

இந்தக்குழுவில், எழிலன் எம்.எல்.ஏ, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் கார்த்திகேயன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலர் ரீட்டா ஹரீஸ் தாக்கர் ஆகியோர் உறுப்பினர்களாகவும், குழு ஒருங்கிணைப்பாளராக தொழில் துறை செயலர் அருண்ராயும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று நடைபெற்ற திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் “விஸ்வகர்மா யோஜானா” திட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. “18 வயது நிறைந்துள்ளவர்களை கல்லூரிக்கு செல்ல விடாமல், பரம்பரை தொழிலையே செய்யத் தூண்டும் குலத்தொழிலை மேலோங்கச் செய்யும் திட்டமிட்ட சூழ்ச்சி. இத்திட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் கழக உறுப்பினர்கள் குரலெழுப்புவார்கள்” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் இன்று (செப்டம்பர் 17) டெல்லியில் பிரதமர் மோடி விஸ்வகர்மா திட்டத்தை தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில்  மூன்று இடங்களில் மத்திய அமைச்சர்கள் இத்திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

சென்னையில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ், மதுரையில் மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் எஸ்.பி.சிங் பாகேல், கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி ஆகியோர் கலந்துகொண்டனர்.

Image

பாஜக அரசு கொண்டு வந்த திட்டத்தை திமுக   அரசியல் ரீதியாக எதிர்ப்பது ஒருபக்கம் என்றாலும், மத்திய அரசு கொண்டு வந்த இந்த திட்டத்தை நிர்வாக  முறையின்படி மாநில அரசால் தான் செயல்படுத்த முடியும். அந்தவகையில் தமிழ்நாட்டில் இந்த திட்டம் எப்படி செயல்படுத்தப்படும் என்று கேள்வி எழுந்துள்ளது.

இதனிடையே பிரதமர் மோடியின் 73ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இன்று (செப்டம்பர் 17) பாஜக சார்பில் கோவையில் 73 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்துவிட்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது, விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்துவது தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை பேசினார்.

Image

“விஸ்வகர்மா திட்டத்தை மாநில அரசு செயல்படுத்த வேண்டும் என்ற அவசியமே இல்லை. மத்திய அரசு வங்கி இருக்கிறது. யாருக்கு கடன் கொடுக்க வேண்டுமோ, அவர்களுக்கு வங்கிகள், அதிகாரிகள் மூலம் செயல்படுத்திக் கொள்வோம். அரசு அதிகாரிகளை ஒளித்து வைத்துவிட்டால் இந்த திட்டம் நின்றுவிடுமா?  தமிழ்நாட்டில் இந்த திட்டத்தை நிறுத்தமுடியாது” என்றார்.

விஸ்வகர்மா திட்டத்துக்கு ஒரு பக்கம் திமுக கடுமையாக எதிர்ப்புத் தெரிவிக்கிறது. மறுபக்கம் தமிழ்நாட்டு அரசின் ஒத்துழைப்பே தேவையில்லை என்று அண்ணாமலை கூறுகிறார். எனவே இத்திட்டம் எப்படி தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

பிரியா, வேந்தன்

டிஜிட்டல் திண்ணை:  நடைபயணம் முடிவதற்குள் உடையும் கூட்டணி- அண்ணாமலை அட்டாக் பின்னணி!

ஆசியகோப்பை இறுதிப்போட்டி: இந்திய அணி சாம்பியன்!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *