தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசுவது போல இரண்டு ஆடியோக்கள் சில நாட்கள் இடைவேளைகளில் வெளியாகி தமிழ்நாட்டு அரசியலையே அதிர வைத்து வருகிறது. இதற்கு முன்பாக கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் மீது 200 கோடி ஊழல் குற்றச்சாட்டை பகிரங்கமாக வைத்தார். அதன் பின் திமுக முன்னோடிகளின் சொத்துப் பட்டியலையும் வீடியோவாக வெளியிட்டார்.
முழுதாக இரு வாரங்கள் ஆகும் நிலையிலும் அதுகுறித்து முதல்வரிடம் இருந்தோ, தமிழக அரசிடம் இருந்தோ அரசியல் ரீதியாகவோ சட்ட ரீதியாகவோ எந்த பதிலும் இல்லை.
ஆனால் கடந்த சில மாதங்களில் முதலமைச்சர் ஸ்டாலினை, திமுக அரசின் செயல்பாடுகளை சமூக தளங்களில் விமர்சித்ததற்காக மட்டுமே கைது செய்யப்பட்டவர்களும் உண்டு.
ஒவ்வொருவராய் பார்ப்போம்
கலைஞர், ஸ்டாலின் மீது அவதூறு… கைது!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் குறித்து அவதூறாக ட்வீட் செய்தற்காக பாஜக ஆதரவாளரான தொழிலதிபர் ஜான் ரவி கைது செய்யப்பட்டார். சென்னை கொட்டிவாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜான் ரவி சமூக ஊடகங்களில் அரசியல் தொடர்பான தனது கருத்துகளை தொடர்ந்து பதிவிட்டு வந்தார். அதில் பல திமுகவினரை எதிர்த்து வைக்கப்பட்ட விமர்சனங்களே.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 21 அன்று ஒரு ட்விட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆகியோர் குறித்து அவதூறாக பதிவிட்டார். இதனையடுத்து ஜான் ரவி மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் அருகே உள்ள குறிச்சியைச் சேர்ந்த தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜசேகர் பந்தநல்லூர் போலீசாரிடம் புகார் அளித்தார். ராஜசேகர் அரசு வழக்கறிஞராகவும் இருக்கிறார். இந்தப் புகாரையடுத்து மின்னல் வேகத்தில் செயல்பட்ட தஞ்சாவூர் போலீஸார் சென்னை சென்று ஜான் ரவியை கைது செய்து திருவிடைமருதூர் நீதிமன்றத்தில் பிப்ரவரி 27 ஆம் தேதி ஆஜர்படுத்திய பின்னர் சிறையில் அடைத்தனர்.
பட்ஜெட் கிண்டல்- பதிவர் கைது!
மார்ச் 20 ஆம் தேதி திமுக அரசின் இரண்டாவது பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர் தாக்கல் செய்தார். அதில் முக்கிய அறிவிப்பாக தேர்தல் வாக்குறுதியாக கொடுக்கப்பட்ட மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று அறிவித்தார். தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு இந்த உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார் பிடிஆர். இதையடுத்து குடும்பத் தலைவிகள் ஆயிரம் ரூபாய் பெறுவதற்கு என்ன தகுதி என்ற விவாதம் மக்களிடையே எழுந்தது.
இந்த நிலையில்தான் பழைய படமொன்றில் கவுண்டமணி வேலைக்காக பெண்களை தேர்வு செய்யும் ஒரு காமெடியை, இந்த தகுதி வாய்ந்த பெண்கள் என்பதோடு ஒப்பிட்டு ட்விட்டர் தளத்தில் வெளியிடப்பட்டது. இந்த வீடியோ சமூக தளத்தில் பலரால் பகிரப்பட்டது.

இது அரசை கொச்சைப்படுத்துவதாகவும், அவதூறு செய்வதாகவும், பெண்களை இழிவு படுத்துவதாகவும் அமைந்திருப்பதாக மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் இந்த வீடியோ தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் அந்த வீடியோவை வெளியிட்ட ட்விட்டர் கணக்கு பக்கத்தின் அட்மின் பிரதீப் மீது, பெண்களை அவமானப்படுத்துதல், கலகத்தை தூண்டுதல், வதந்தி பரப்புதல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். வேகவேகமாக தேடுதல் வேட்டை நடத்திய போலீஸார் அந்த ட்விட்டர் கணக்கு நடத்தி வரும் பிரதீப் என்பவரை மார்ச் 21 ஆம் தேதி இரவே கும்மிடிப்பூண்டி அருகே கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்ட அவர் சில நாட்களுக்கு முன்புதான் ஜாமீனில் வெளியே வந்தார்.
துரைமுருகன் மீது அவதூறு அதிமுக நிர்வாகி கைது!
மார்ச் 29 ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் பேசிய அமைச்சர் துரைமுருகன், ‘என் கல்லறையில் கோபாலபுரத்தின் விசுவாசி இங்கு உறங்குகிறான் என்று எழுதினால் போதும்’ என்று உருக்கமாக பேசினார். இதையடுத்து இந்த வாசகங்களை அடிப்படையாக வைத்து துரைமுருகனை அவதூறாக சித்தரித்து ஒரு மீம்ஸ் உருவாக்கிப் பரப்பப்பட்டது.

இதையடுத்து வேலூர் மாவட்டம் காட்பாடி காவல்நிலையத்தில் காட்பாடி வடக்கு திமுக பகுதி செயலாளர் வன்னியராஜா புகார் அளித்தார். இதன் அடிப்படையில் இந்த சர்ச்சை மீம்சை பரப்பியதாக அதிமுக ஐடி விங்கை சேர்ந்த பொள்ளாச்சி அருண்குமார் என்பவரை வேலூர் மாவட்ட போலீஸார் சென்று கைது செய்தனர். காட்பாடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.

செந்தில்பாலாஜி மீது அவதூறு -கைது!
அமைச்சர் செந்தில்பாலாஜி குறித்து ட்விட்டரில் அவதூறு கருத்து பதிவிட்டதாக, கோவை பாஜக மாநில நிர்வாகி செல்வகுமாரை சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்தனர்.
கோவை காளபட்டியைச் சேர்ந்தவர் செல்வகுமார் பாஜக மாநில தொழில் துறைப் பிரிவு துணைத் தலைவராக உள்ளார். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில், மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்பாக அவதூறான கருத்துகளை தொடர்ந்து பதிவிட்டு வந்ததாக திமுகவினர் கோபத்தில் இருந்தனர். இந்நிலையில், கோவை கணபதி புதூரைச் சேர்ந்த ஆர்.கே.சுரேஷ்குமார் கோவை மாநகர சைபர் க்ரைம் பிரிவு போலீஸில் புகார் அளித்தார். அதில், “ ‘மின்சாரத் துறை அமைச்சரும் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான செந்தில்பாலாஜி குறித்து அவதூறாக கருத்துகளை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட செல்வகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியிருந்தார்.

அதன் பேரில், மாநகர சைபர் க்ரைம் போலீஸார் அவதூறாக பேசுதல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து செல்வகுமாரை ஏப்ரல் 12 ஆம் தேதி கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். செல்வகுமார் சில நாட்களில் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த மூன்று சம்பவங்களும் கடந்த பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்றவை.
இதையெல்லாம் பட்டியல் போடும் திமுகவினர்,
“அதிமுக, பாஜகவின் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நிர்வாகிகள் மற்றும் சமூக தளங்களில் தனித்து இயங்குபவர்கள் மீதெல்லாம் அவதூறு என்று குற்றம் சாட்டி பாய்ந்து கைது செய்கிறது தமிழ்நாடு போலீஸ். ஆனால் அண்ணாமலை ஏப்ரல் 14 ஆம் தேதி பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது மறைந்த கலைஞர் பற்றி கண்ணதாசன் சொன்னதாக ஓர் கீழ்த் தரமான அவதூறை பரப்பினார். அதுமட்டுமல்ல இப்போதைய முதல்வர் ஸ்டாலின் மீது 200 கோடி ரூபாய் ஊழல் புகாரை எழுப்பினார். அதற்கு மெட்ரோ ரயில் நிறுவனம் கூட பதில் தெரிவித்தது. ஆனால் அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் இல்லை.இப்போது முதல்வர் குடும்பத்தினரான உதயநிதி, சபரீசனை தொடர்புபடுத்தி பிடிஆர் சொன்னதாக இரு ஆடியோக்களை வெளியிட்டுள்ளனர். இதில் இரண்டாவது ஆடியோவை அதிகாரபூர்வமாக அண்ணாமலையே வெளியிட்டுள்ளார். ஆனால் அண்ணாமலை மீது இதுவரை ஒரு சட்ட நடவடிக்கையுமே இல்லையே ஏன்?” என்று கேட்கிறார்கள்.
முரளி மனோகர் ஜோஷி மீது அவதூறு வழக்கு தொடுத்த ஜெயலலிதா

மின்னம்பலம் யு ட்யூப் சேனலுக்கு பேட்டியளித்த மூத்த பத்திரிகையாளர் மணி, “2005 இல் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது… காஞ்சி சங்கராச்சாரியார் கைது விவகாரம் தொடர்பாக தனக்கு எதிராக கருத்து தெரிவித்த அப்போதைய மூத்த பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷி மீதே அவதூறு வழக்குத் தொடுத்தார். ஆனால் முதலமைச்சர் மீதே குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அரசியல் ரீதியாகவும் திமுக பதிலளிக்கவில்லை. அரசு என்ற வகையில் சட்ட ரீதியாகவும் பதில் அளிக்கவில்லை. ஜெயலலிதா முதலைமைச்சராக இருந்தால் அடுத்த வேலை நாளிலேயே அவதூறு வழக்கு அரசு வழக்கறிஞர் மூலம் தொடுக்கப்படும். அரசு தொடுக்கப்படும் அவதூறு வழக்கு என்பது அந்த அரசின் பதவிக் காலத்துக்குப் பிறகும் தொடரும். இந்த நிலையில் அண்ணாமலை மீது திமுக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
திமுகவின் தொடர் மௌனம் திமுகவுக்கு உள்ளேயும் வெளியேயும் பல(த்த) கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருக்கிறது.
–வேந்தன்
இந்தப் பக்கம் எடப்பாடி- அந்தப் பக்கம் அண்ணாமலை: டெல்லியில் அமித் ஷா சொன்ன மெசேஜ்!
Comments are closed.