எதிர்க்கட்சிகள் அனைத்தும் அதானி விவகாரத்தை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அதானியும், சரத்பவாரும் நேற்று(ஏப்ரல் 20) சந்தித்து பேசியுள்ள சம்பவம் எதிர்க்கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின்(என்சிபி) தலைவர் சராத் பவார் உள்ளார். இவர் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு பாஜக அரசுக்கு எதிராக தேசிய கட்சிகளை ஒன்றிணைப்பதில் முக்கிய பங்கு வகிப்பார் என்று கருதப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சரத்பவார் கூறி வரும் கருத்துகள் எதிர்க்கட்சிகள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவதூறு வழக்கு தண்டனை காரணமாக பதவிநீக்கம் செய்யப்பட்ட ராகுல்காந்தி, கடந்த மாதம் செய்தியாளர்களை சந்தித்த போது சாவர்க்கரை கடுமையாக விமர்சித்தார்.
இது மகாராஷ்டிரா எதிர்க்கட்சி கூட்டணியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று காங்கிரஸ் தலைவர்களிடம் சரத்பவார் கூறினார். இதனால் இனி சாவர்க்கர் பற்றி விமர்சிக்க போவதில்லை என்று காங்கிரஸ் தெரிவித்தது.
இதற்கிடையே அதானி நிறுவன குற்றச்சாட்டுகள் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார்.
மேலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதானி விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டுகுழு விசாரணை நடத்த வேண்டும் என்று ஒரே குரலாக மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. இதனால் பாராளுமன்றத்தின் 2-வது அமர்வும் ஒட்டுமொத்தமாக முடங்கியது.
இந்தநிலையில் காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், எதிர்க்கட்சிகளின் கருத்துக்கு மாறாக குற்றம்சாட்டப்பட்ட அதானிக்கு ஆதரவாக பேசினார்.
அவர், ”அதானி விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை விட உச்சநீதிமன்ற கமிட்டி விசாரணையே பயன் அளிக்கும். அரசியல் காரணங்களுக்காக அதானி குறிவைக்கப்படுகிறார்.” என்று கூறினார்.
இது அதானிக்கு எதிராக குரல் எழுப்பி வரும் எதிர்க்கட்சிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனையடுத்து ’எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்காக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை எதிர்க்க மாட்டேன்’ என்று சரத்பவார் பல்டி அடித்தார்.
இந்நிலையில் தொழிலதிபர் அதானி நேற்று தென்மும்பையில் உள்ள சரத்பவாரின் ‘சில்வர் ஓக்’ இல்லத்தில் அவரை சந்தித்து பேசியுள்ளார். இருவரும் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை சுமார் 2 மணி நேரம் சந்தித்து பேசியிருப்பது எதிர்கட்சியினரிடையே மீண்டும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்ட ராகுல்காந்தின் மனு, சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட அதே நேரத்தில் தான் நேற்று சரத்பவார் – அதானி சந்திப்பு நடந்துள்ளது.
இந்த சந்திப்பைத் தொடர்ந்து, சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்தும் சரத்பவாரை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்துள்ளார்.
இதனையடுத்து சரத்பவார் மீது சந்தேகம் வலுத்துள்ளதாக எதிர்கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இது குறித்து திரிணாமுல் எம்பி மஹுவா மொய்த்ரா, “அதானியுடன் தனித்தனியாக விவாதிக்க எதுவும் இல்லை. அரசு நடவடிக்கை எடுக்கும் வரை எந்த அரசியல்வாதியும் அவருடன் எந்தவொரு தொடர்பையும் வைத்திருக்கக் கூடாது. ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், சரத் பவார் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் என்பதைக் குறிப்பிடும் வகையில், “பெரிய மராட்டியர்களை எதிர்கொள்வதில் எனக்கு எந்த பயமும் இல்லை” என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
தமிழ்நாட்டில் ஒரேநாளில் உச்சம் தொட்ட மின் நுகர்வு!
அமமுகவின் ஒரே ஒரு பேரூராட்சி தலைவரும் கட்சியில் இருந்து நீக்கம்!