குடியரசுத் தலைவரை வரவேற்க செந்தில் பாலாஜியை அனுப்பலாமா? ஸ்டாலின் நடத்தும் ஆலோசனை!

Published On:

| By Kavi

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வரும் நவம்பர் 27ஆம் தேதி நான்கு நாள் பயணமாக தமிழ்நாட்டுக்கு வருகிறார். 27 ஆம் தேதி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலமாக கோவை மாவட்டம் சூலூர் விமானப் படைத் தளத்துக்கு வருகிறார்.

அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருக்கும் ஆளுநர் மாளிகைக்கு செல்கிறார். ஒருவேளை வானிலை சரியாக இல்லையென்றால் சூலூரில் இருந்து மேட்டுப்பாளையம், கோவை வழி அல்லது எல்.அன்.டி. பைபாஸ் என சாலை மார்க்கமாக ஊட்டி ஆளுநர் மாளிகைக்கு செல்லவும் பாதுகாப்பு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

மறுநாள் நவம்பர் 28 ஆம் தேதி குன்னூர் வெலிங்டன் முப்படை பயிற்சிக் கல்லூரி விழாவில் பங்கேற்கிறார் குடியரசுத் தலைவர். 29 ஆம் தேதி ஊட்டி ஆளுநர் மாளிகையில் ஓய்வெடுப்பவர், 30 ஆம் தேதி ஹெலிகாப்டர் மூலமாக சூலூர் விமானப் படைத் தளத்துக்கு சென்று அங்கிருந்து விமானம் மூலம் திருச்சி செல்கிறார்.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக திருவாரூர் மத்திய பல்கலை பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் முர்மு… மீண்டும் திருச்சி திரும்பி அங்கிருந்தே விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார். இதுதான் குடியரசுத் தலைவரின் பயணத் திட்டம். குடியரசுத் தலைவரின் வருகையை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியிருக்கிறார்கள் தமிழக போலீஸார்.

இன்னொரு பக்கம் ஆளுநர் ஆர்.என்.ரவி நவம்பர் 26 ஆம் தேதியே சென்னையில் இருந்து புறப்பட்டு ஊட்டி ஆளுநர் மாளிகைக்குச் செல்கிறார். டெல்லியில் இருந்து குடியரசுத் தலைவரோடு பாதுகாப்பு அதிகாரிகள், மற்ற அதிகாரிகள், மருத்துவர்கள் என்று சுமார் 30 பேர் கொண்ட குழுவினர் வருகிறார்கள். அதேபோல சென்னை ஆளுநர் மாளிகையில் இருந்து ஆளுநரோடு சுமார் 40 பேர் கொண்ட குழுவினர் ஊட்டி செல்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் விதவிதமான விருந்துகள் படைக்கவும் தேவையான ஏற்பாடுகள் ஊட்டி ஆளுநர் மாளிகையில் கன ஜோராக நடந்து வருகின்றன.

Raj Bhavan – Ooty | The Nilgiris District, Tamilnadu | India

பொதுவாகவே குடியரசுத் தலைவர் போன்ற நாட்டின் மிக முக்கிய உயர் பதவியில் இருப்பவர்கள் மாநிலங்களுக்கு செல்லும்போது ஆளுநர், முதல்வர் ஆகியோர் நேரடியாக சென்று வரவேற்பது வழக்கம், இந்த வகையில் தமிழ்நாடு வருகிற குடியரசுத் தலைவரை முதலமைச்சர் ஸ்டாலின் நேரடியாக வரவேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் குடியரசுத் தலைவர் சென்னைக்கு வரவில்லை, அவர் நேரடியாக கோவைக்குதான் வருகிறார். மேலும் நவம்பர் 28, 29 தேதிகளில் முதலமைச்சர் ஸ்டாலின் விழுப்புரம் மாவட்ட கள ஆய்வுக்காக செல்ல உள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளார். எனவே குடியரசுத் தலைவரை வரவேற்க முதல்வர் ஸ்டாலின் கோவை செல்வது இப்போது வரை உறுதியாகவில்லை.

அப்படியெனில் துணை முதல்வர் உதயநிதி அல்லது மூத்த அமைச்சர்கள் யாரேனும் சென்று வரவேற்பார்களா என்ற கேள்வியும் எழுகிறது. துணை முதலமைச்சர் உதயநிதிக்கு 27 ஆம் தேதி பிறந்தநாள். அன்று அவர் சென்னையில்தான் இருக்கிறார் என்பதே இப்போதைய அவரது நிகழ்ச்சி நிரல் நிலவரம்.

இந்த சூழலில் குடியரசுத் தலைவரை வரவேற்க யாரை அனுப்புவது என்ற ஆலோசனையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார் என்கிறார்கள் கோட்டை வட்டாரங்களில்.

முதலமைச்சர், துணை முதலமைச்சர், மூத்த அமைச்சர்கள் குடியரசுத் தலைவரை வரவேற்கச் செல்வதாக இல்லையெனில்…. கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருக்கும் செந்தில்பாலாஜி குடியரசுத் தலைவரை வரவேற்க வேண்டும். மேலும் குடியரசுத் தலைவர் வருகை தரும் நீலகிரி மாவட்டத்துக்கென்று இப்போது அமைச்சர் யாரும் இல்லை.

செந்தில்பாலாஜி சமீபத்தில்தான் அமலாக்கத்துறையின் பி.எம்.எல்.ஏ. வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுதலையாகி மீண்டும் அமைச்சரானார். இந்த நிலையில் குடியரசுத் தலைவரை வரவேற்க செந்தில் பாலாஜியை அனுப்பலாமா அல்லது அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன், பெண் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் இவர்களில் ஒருவரை அனுப்பலாமா என ஆலோசனைகள் நடந்து வருகின்றன. இதில் அமைச்சர் கயல்விழியை அனுப்புவதற்கான அதிக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

-வணங்காமுடி

சபரிமலையில் இப்படி ஒரு எஸ்.ஐ: பாருங்கள் பக்தர்களே!

நெல்லையை தொடர்ந்து கும்பக்கோணம்… திண்டுக்கல் சீனிவாசனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share