ராஜஸ்தானில் தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சி இரண்டாக உடையும் சூழல் ஏற்பட்டிருப்பதாக பரபரப்புத் தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.
ராஜஸ்தான் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான சச்சின் பைலட், தனது தந்தை ராஜேஷ் பைலட்டின் நினைவு தினமான ஜூன் 11-ம் தேதி ‘பிரகதிஷீல் காங்கிரஸ்’ என்ற புதிய கட்சியை தொடங்க வாய்ப்புள்ளதாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
மே 10 ஆம் தேதி நடந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் அறுதிப் பெரும்பான்மையுடன் வென்று ஆட்சியைப் பிடித்த நிலையில், யார் முதல்வர் என்பதில் பெரும் குழப்பம் நீடித்தது. காங்கிரஸ் தலைமையின் தலையீட்டின் பேரில் ஏறக்குறைய 10 நாட்களுக்கு பிறகு சித்தராமையா முதல்வராகவும், டி.கே.சிவகுமார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.
அடுத்தடுத்த தேர்தல்கள்!
அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு இறுதியில் மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
அடுத்த ஆண்டு வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற ராஜஸ்தான் உள்ளிட்ட நான்கு மாநில சட்டமன்ற தேர்தல் வெற்றிகளும் காங்கிரஸ் கட்சிக்கு முக்கியம்.
இந்நிலையில் ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் இடையே பலமாதங்களாக உட்கட்சி மோதல் நிலவி வருவது காங்கிரஸ் கட்சியின் அடுத்த சோதனையாக பார்க்கப்படுகிறது.
கடந்த மாத தொடக்கத்தில், முந்தைய பாஜக ஆட்சியில் நடந்த ஊழல்கள், வினாத்தாள் கசிவு ஆகியவற்றின் மீது உயர்மட்ட விசாரணை கோரி அஜ்மீரில் இருந்து ஜெய்ப்பூர் வரை ஐந்து நாள் பாதயாத்திரை மேற்கொண்டார் சச்சின் பைலட்.
![](https://storage.googleapis.com/minnambalam_bucket/minnambalam.com/wp-content/uploads/B64LDdcJ-image-edited-1024x683.jpg)
பேச்சுவார்த்தை வெற்றி?
இந்நிலையில் தான் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல்காந்தி ஆகியோர் தங்களுக்குள்ளே மோதி வரும் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இருவரையும் கடந்த மாதம் 29ஆம் தேதி டெல்லிக்கு அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில் இருவருக்கும் சமரசம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. மேலும் வெளியே வந்த அசோக் கெலாட் ”நாங்கள் இணைந்து செயல்பட்டால் ராஜஸ்தானில் மீண்டும் ஆட்சியமைப்போம்” என்று கூறினார்.
![is sachin pilot going to start new party in rajasthan](https://storage.googleapis.com/minnambalam_bucket/minnambalam.com/wp-content/uploads/AlWLlM5i-image-edited.jpg)
நீடிக்கும் குழப்பம்...
இந்த சூழ்நிலையில் தான் ”வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் இளைஞர்களுக்கு நீதி மற்றும் இழப்பீடு கிடைப்பதைப் பொறுத்தவரை, அதில் எந்த சமரசத்துக்கும் வாய்ப்பில்லை’ என சச்சின் பைலட் மீண்டும் தெரிவித்தது அவரது ஆதரவாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.
![is sachin pilot going to start new party in rajasthan](https://storage.googleapis.com/minnambalam_bucket/minnambalam.com/wp-content/uploads/0XbwoFmV-image-edited-1024x576.jpg)
இதனையடுத்து ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து சச்சின் பைலட் தனது தந்தை ராஜேஷ் பைலட்டின் நினைவு தினமான ஜூன் 11ஆம் தேதியன்று தௌசாவில் புதிய கட்சியைத் தொடங்குவார் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன.
குறிப்பாக, பிரசாந்த் கிஷோர் நடத்திவந்த ஐபேக் (IPAC) நிறுவனம், சச்சின் பைலட்டுக்கு புதிய கட்சியைத் தொடங்குவதற்கு உதவி வருவதாகவும், `முற்போக்கு காங்கிரஸ்’, `ராஜ் ஜன சங்கர்ஷ்’ ஆகிய இரண்டு கட்சிப் பெயர்கள் பதிவுசெய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
![is sachin pilot going to start new party in rajasthan](https://storage.googleapis.com/minnambalam_bucket/minnambalam.com/wp-content/uploads/xRCIUrsX-image.jpg)
வரும் தேர்தலில் ஒன்றாக போராடுவோம்
எனினும் இது ஆதாரபூர்வமற்ற தகவல் என்றும், காங்கிரஸை விட்டு விலகும் எண்ணம் சச்சின் பைலட்டுக்கு ஒருபோதும் இல்லை என்றும் அவரது ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து ராஜஸ்தான் வேளாண் விற்பனைத் துறை இணையமைச்சரான முராரி லால் மீனா கூறுகையில், ”சச்சின் பைலட் புதிய கட்சியை உருவாக்குவது குறித்த ஊகங்கள் ஆதாரமற்றவை. நாங்கள் அனைவரும் காங்கிரஸின் வீரர்கள். நாங்கள் ஒன்றாக வரும் தேர்தலில் போராடுவோம். அவருக்கு காங்கிரஸ் கட்சியை விட்டு விலகும் எண்ணம் இல்லை,” என்று கூறினார். தௌசா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான மீனா, சச்சின் பைலட்டின் விசுவாசி என்பது குறிப்பிடத்தக்கது.
![is sachin pilot going to start new party in rajasthan](https://storage.googleapis.com/minnambalam_bucket/minnambalam.com/wp-content/uploads/uVdZXsqo-image-1024x576.jpg)
காங்கிரஸின் சொத்து
காங்கிரஸ் அகில இந்திய பொதுச் செயலாளரும் ராஜஸ்தான் மாநிலப் பொறுப்பாளருமான சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா, “சச்சின் பைலட் புதிய கட்சியை உருவாக்குவது பற்றிய ஊகங்கள் ஆதாரமற்றது. ஊடகங்கள் தான் இதைபற்றி பேசி பெரிதாக்குகின்றன. கெலாட் மற்றும் பைலட் இருவருமே காங்கிரஸின் சொத்து. அவர்கள் இருவரும் வரும் சட்டசபை தேர்தலில் இணைந்து செயல்படுவார்கள்” என்று கூறியிருக்கிறார்.
தலைவர்கள் இவ்வாறு கூறினாலும், ராஜஸ்தானில் முக்கிய காங்கிரஸ் தலைவராக பார்க்கப்படும் சச்சின் பைலட் ஒருவேளை புதிய கட்சியைத் தொடங்கினால், அது அக்கட்சிக்கு பெரும் சேதத்தை விளைவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வரக்கூடிய நாட்களில் அசோக் கெலாட் – சச்சின் பைலட் இடையே எத்தகைய சமரசத்தை காங்கிரஸ் தலைமை ஏற்படுத்த போகிறது என்பது ராஜஸ்தான் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
10 லட்சம் லிட்டர் ஆவின் பால் திருட்டு: பொங்கும் ராமதாஸ்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: முதல்வருக்கு ஆம்னி பேருந்து சங்கம் கடிதம்!