தமிழ்நாடு அரசியலே மு.க.ஸ்டாலினுக்கு தெரியாது. இதில் தேசிய அரசியல் எதற்கு என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை ஆர்.கே. நகரில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75ஆவது பிறந்தநாள் கொண்டாட்ட பொதுக்கூட்டம் இன்று (மார்ச் 5) நடைபெற்றது. இதில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், “அதிமுக இரண்டாக உடைந்துவிட்டதாக முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால் இப்போது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் ஒன்றாகி விட்டது” என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது அவரது மகன் உதயநிதி ஸ்டாலினை தமிழ்நாடு முழுவதும் அனுப்பி அறிமுகப்படுத்தி வருகிறார். ஏன் கட்சியில் மூத்த தலைவர்களே இல்லையா? உதயநிதி மூலம் அவர் தன்னை வளர்த்து வருகிறார்.
இதனால் தான் சொல்கிறேன் திமுக என்பது கட்சி அல்ல கார்ப்பரேட் கம்பெனி” என்று விமர்சித்தார்.
பின்னர் கலைஞர் பேனா நினைவு சின்னம் குறித்து பேசுகையில், “இன்று கலைஞரின் நினைவாக மதுரையில் நூலகம், மெரினா கடற்கையில் பேனா சின்னம் ஆகியவற்றை முன்னெடுத்து வருகிறார்கள்.
அதற்கு அதிமுக எதுவும் சொல்லவில்லை. ஆனால் எழுதாத பேனாவை எங்கு வைத்தால் என்ன? கடலில் தான் வைக்கவேண்டுமா? அதற்கு பதிலாக எழுதுகின்ற பேனாவை மாணவர்களுக்கு கொடுங்கள்” என்று தெரிவித்தார்.
மேலும் அவர், “அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம், மகளிர் இருசக்கர வாகனம், முதியோர் உதவித்தொகை போன்ற எண்ணற்ற திட்டங்களை காழ்புணர்ச்சியின் காரணமாக திமுக நிறுத்தி வைத்துள்ளதாக கூறினார்.
எல்.இ.டி டிவியில் பல காட்சிகளை திரையிட்டு காட்டிய எடப்பாடி, திமுக ஆட்சியில் தற்போது விலைவாசி உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு, கஞ்சா விற்பனை, மணல் கடத்தல், கொலை, கொள்ளை அதிகரித்து விட்டதாக குற்றஞ்சாட்டினார்.
ஈரோடு இடைத்தேர்தலில் மக்களை அடிமைப்போல், கொட்டகைக்குள் அடைத்து வைத்து, பணம் கொடுத்து ஆசைக்காட்டி தான் திமுக கூட்டணி வெற்றிபெற்றது.
அதனைதொடர்ந்து அவரது பிறந்த நாளுக்கு பல்வேறு தலைவர்களை பேச வைத்து தேசிய தலைவராக தன்னை முன்னிறுத்த ஸ்டாலின் பார்க்கிறார். அவருக்கு இங்குள்ள அரசியலே ஒன்றும் தெரியாது. இதில் எதற்கு தேசிய அரசியல்? மத்திய அரசில் அவரும், மாநில அரசியலில் அவரது மகனும் வரவேண்டும் என்று கனவு காண்கிறார். இதனை நாடு தாங்குமா? என்று கேள்வி எழுப்பினார்.
இப்படி தனது குடும்பத்தை வைத்து அரசியல் செய்து வரும் திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமென்றால் மக்கள் தான் அதற்கான மாற்றத்தை கொண்டு வரமுடியும். மக்கள் ஆதரவுடன் எழுச்சியுடன் இருக்கும் அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது” என்றார்.
கிறிஸ்டோபர் ஜெமா
Comments are closed.