“அனைத்து கருத்துக்களில் இருந்தும் வி.கே.சசிகலா, மருத்துவர் சிவக்குமார் அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக ஆணையம் முடிவு செய்து விசாரணைக்கு பரிந்துரைக்கிறது”
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய ஆறுமுகசாமி ஆணையம் தனது அறிக்கையின் இறுதி முடிவாக 558 ஆம் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கும் வரிகள் தான் மேற்கண்டவை.
சசிகலா, அவரது உறவினரான டாக்டர் சிவக்குமார் ஆகியோர் ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அரசியல் ரீதியாக ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர்.
இவர்களைத் தாண்டி டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் அரசு அதிகாரியாக இருப்பவர். அதனால் மற்றவர்கள் மீதான விசாரணை பரிந்துரையை விட ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் மீதான விசாரணை பரிந்துரை கோட்டை வட்டாரத்தில் மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுதும் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளிடம் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
2011 ஆம் ஆண்டிலிருந்து 2019 அக்டோபர் வரை தொடர்ந்து எட்டு ஆண்டுகள் சுகாதாரத்துறை செயலாளராக இருந்தவர் ராதாகிருஷ்ணன். கொரோனா தாக்கம் அதிகரிக்க தொடங்கிய நிலையில் சுகாதாரத்துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் துறையிலிருந்து மாற்றப்பட்டு 2020 ஜூன் மாதம் மீண்டும் சுகாதாரத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார் ஜெ. ராதாகிருஷ்ணன்.
அப்போது முதல் 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சி போய் திமுக ஆட்சி வந்த நிலையிலும் தொடர்ந்து ஒரு வருட காலம் சுகாதாரத்துறை செயலாளராகவே பணியாற்றிய ராதாகிருஷ்ணன் தற்போது கூட்டுறவுத் துறை செயலாளராக பணியாற்றி வருகிறார்.
ராதாகிருஷ்ணன் அதிகாரிகள் வட்டாரத்தில் மட்டுமல்ல பொதுமக்கள் மத்தியிலும் புகழ் பெற்றவர். மக்களோடு மக்களாக இணைந்து அவர் ஆற்றிய பணிகளை தமிழ்நாடு என்றைக்கும் மறக்காது என்ற அளவுக்கு மக்கள் மனதில் பதிந்துள்ளது.
குறிப்பாக சுனாமியின்போது நாகை மாவட்டத்தில் ராதாகிருஷ்ணன் ஆற்றிய பணிகள் இன்றைக்கும் உருகி உருகி பேசப்படுகிறது. சுனாமியால் தாய் தந்தையரை இழந்த குழந்தைகளை தனது செலவில் வளர்த்து படிக்க வைத்து அண்மையில் அந்த பெண் குழந்தைகளுக்கு திருமணமும் செய்து வைத்தார். மக்கள் மனதில் அதிகாரி என்பதைத் தாண்டி ஓர் அப்பா, அண்ணன் என்ற பாச ஸ்தானத்தைப் பெற்றிருக்கிறார் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.
இந்த நிலையில்தான் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை ராதாகிருஷ்ணன் குற்றம் செய்தவர் என்று குறிப்பிட்டு அவரிடம் விசாரணை செய்ய பரிந்துரைத்துள்ளது.
ஆறுமுகசாமி அறிக்கையின் பேரில் தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்ட அரசாணையில், “சில குறிப்பிட்ட நபர்களுக்கு எதிரான விசாரணை ஆணைய அறிக்கையின் பரிந்துரையின் மீது சட்ட வல்லுநர்களின் ஆலோசனை பெற்று தக்க நடவடிக்கை எடுக்க 29-8-22 நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
விசாரணை ஆணைய அறிக்கையின் சுருக்கம் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் சுகாதாரத்துறையின் செயலாளரிடம் வழங்கப்பட்டு அத்துறையால் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
தற்போதுள்ள விதிகளின்படி, அகில இந்தியப் பணி அதிகாரிகள் மீது (ஐஏஎஸ்/ஐபிஎஸ்/ ஐஎஃப் எஸ் போன்றவை) புலனாய்வு அமைப்புகளால் மட்டுமே தொடங்கப்படும் விசாரணைக்கான அனுமதியை வழங்குவது அல்லது மறுப்பது குறித்த முடிவை தகுதியான அதிகாரி மூலம் மட்டுமே எடுக்க முடியும்.
இந்த வகையில் தற்போது ஜெ.ராதாகிருஷ்ணன் மீது ஆறுமுகசாமி ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் விசாரணை நடத்த முடியுமா? அதிகாரிகள் வட்டாரத்தில் இந்த கேள்வியை முன் வைத்தோம்.
“இந்த அரசாங்கத்தை இயக்குவதே ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்தான். மக்கள் பிரதிநிதிகள் அரசாங்கத்தை வெளியில் இருந்து இயக்கினாலும் உள்ளிருந்து நாடி நரம்புகளாக செயல்படுவது அதிகாரிகள்தான். இந்த வகையில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கான பணியும் அதிகாரமும் முக்கியமானது. நிர்வாக நடைமுறைப்படி இப்போது ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கையின் சுருக்கம் சுகாதாரத்துறை செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
ஆறுமுகசாமி ஆணையம் ஐந்து வருடங்கள் விசாரித்து தயார் செய்து சமர்ப்பித்த அறிக்கையின் சுருக்கம் மட்டுமே சுகாதாரத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் சுகாதாரத்துறை செயலாளர் முழு அறிக்கையையும் கேட்பார்.
அதையும் ஆய்வு செய்வார். இந்த விவகாரத்தில் சுகாதாரத்துறை செயலாளரின் வரம்பும் கேள்விக்குறியதாக இருக்கிறது. அவர் தலைமைச் செயலாளரிடம் இந்த ஆணைய அறிக்கை பற்றி சட்ட வல்லுநர்களிடம் ஆலோசித்து தலைமைச் செயலாளரிடம் அறிக்கை அளிக்க வேண்டும்,
அந்த அறிக்கையில் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். உள்ளிட்டோர் மீது ஆறுமுகசாமி ஆணையம் கூறிய கூற்று உண்மையென்றால் விசாரணை நடத்த பரிந்துரைப்பார்கள். இங்கே யார் விசாரணை நடத்துவது என்ற கேள்வி எழுகிறது. இதையெல்லாம் தாண்டி ராதாகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென்றால் தலைமைச் செயலாளரின் அனுமதி வேண்டும்.
தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பொதுத் துறையின் கீழ் வருகிறார்கள். பொதுத் துறை செயலாளர், பொதுத் துறையின் அமைச்சரான முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் ஒப்புதலுக்குப் பிறகே தலைமைச் செயலாளர் அனுமதி அளிக்க முடியும். அப்படி அனுமதி அளித்தால்தான் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.சை நெருங்க முடியும்.
எனவே இந்த விவகாரத்தில் ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். மீது விசாரணை, வழக்கு என்பதெல்லாம் மிக மிக அரிதான விஷயம்தான்.
நாளையே யாராவது, ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையின் மீது அரசு எடுத்த நடவடிக்கை என்னவென்று வழக்கு போட்டாலோ, அல்லது அரசியல் ரீதியாக கேள்வி எழுப்பினாலோ அதை எதிர்கொள்வதற்காகத்தான் சுகாதாரத்துறை செயலாளரிடம் அந்த அறிக்கையை அனுப்பி வைத்திருக்கிறார் தலைமைச் செயலாளர். நிர்வாக ரீதியாகவோ, சட்ட ரீதியாகவோ இந்த ஆணைய அறிக்கை மீது வேறு எந்த முன்னேற்றமும் இப்போதைக்கு சாத்தியம் இல்லை” என்கிறார்கள் அதிகாரிகள் வட்டாரத்தில்.
-ஆரா
ரயில் நிலைய கொலை: சிபிசிஐடிக்கு கிடைத்த 4 முக்கிய வீடியோ காட்சிகள்!
மின்சார கட்டண மோசடி : எச்சரிக்கும் சைலேந்திர பாபு!
ஒரு அரைவேக்காட்டுத்தனமான அறிக்கையை 5 ஆண்டுகள் உண்டு கொழுத்த ஆணையம் சமர்ப்பித்துள்ளது.