தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகப் பழ. நெடுமாறன் கூறியதற்கு இலங்கை ராணுவம் மறுப்புத் தெரிவித்துள்ளது.
கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த போரில் பிரபாகரன் உயிரிழந்துவிட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்தது.
இந்நிலையில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் உயிருடன் தான் இருக்கிறார் என உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளார்.
“தமிழீழ மக்களின் விடியலுக்கான திட்டத்தை அவர் விரைவில் அறிவிக்கவுள்ளார். அவரைப் பற்றித் திட்டமிட்டு பரப்பப்பட்ட யூகங்களுக்கும் ஐயங்களுக்கும் இந்த செய்தி உறுதியாக முற்றுப்புள்ளி வைக்கும்.
பிரபாகரன் குடும்பத்தினருடன் எனக்கு தொடர்பு இருக்கிறது. இந்த தொடர்பின் அடிப்படையில் அவர்களின் அனுமதியுடன் இந்த செய்தியை வெளியிடுகிறேன்” என்று தெரிவித்தார்.
இதுதொடர்பாக இலங்கை ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் பிபிசி தமிழிடம் கூறுகையில்,
“பிரபாகரன் 2009ஆம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட யுத்தத்தில் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் இருக்கிறது. 2009 மே 18ஆம் தேதி கொல்லப்பட்டதற்கான டி.என்.ஏ.ஆதாரங்கள் உள்ளது. தவறான தகவல்களை அவர்கள் வெளியிடுகிறார்கள்.
பழ. நெடுமாறனின் இந்த கூற்று எங்களுக்கு எந்த எச்சரிக்கை உணர்வையும் ஏற்படுத்தவில்லை. காரணம், அவர் கொல்லப்பட்டுவிட்டார் என எங்களுக்குத் தெளிவாகத் தெரியும். அதில் சந்தேகமில்லை” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த ஜனவரி 24ஆம் தேதி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் சார்பில் வெளியிட்ட அறிவிப்பில்,
“எங்கள் தேசியத் தலைவர் மற்றும் அவரது குடும்பம் தொடர்பாகப் புனைந்து பரப்பப்பட்டு வரும் ஆதாரமற்ற தகவல்களும், அதன்மூலம் புலம்பெயர் தமிழ் மக்களிடம் பெருந்தொகை நிதி சேகரிப்பு செயல்பாட்டில் இயக்க விரோத கும்பல் ஒன்று ஈடுபடுவதாகவும் அறிகிறோம். இதுதொடர்பாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இந்திய புலனாய்வாளர்களால் திட்டமிட்டு இயக்கப்படும் இயக்க விரோத கும்பல்கள் மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்துவது தொடர்பாக எச்சரிக்கை கலந்த விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேசமயத்தில் பிரபாகரன் உயிருடன் இருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
பிரியா
கோவை நீதிமன்றம் அருகே கொலை: பட்டப்பகலில் நடந்த கொடூரம்!
பாக்ஸ் ஆபிஸ் விவாதம்: விஜய் சேதுபதி வேதனை!