மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சிக்கு சென்ற தி.மு.க. எம். எல். ஏ.வை குறிவைத்து பெட்ரோல் வெடிகுண்டு வீசியதாக பரவிய தகவலை அடுத்து கடலூர் போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
கடலூர் ஒன்றியம் நல்லாத்தூரில் அமைந்துள்ள கிருஷ்ணா திருமணம் மண்டபத்தில் திமுக நிர்வாகி மணிவண்ணன் மகள் எழிலரசிக்கு ஜூலை 9 ஆம் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. விழாவில் கலந்துகொள்ள, கடலூர் தொகுதி திமுக எம். எல். ஏ. ஐயப்பன் அவரது ஆதரவாளர்களுடன் வந்தார்.
அவருடன் வந்தவர்கள் சிலர் கீழே பீர் பாட்டில் உடைந்து கிடக்கிறது என்று சொல்ல, இன்னொருவர் மண்ணெண்ணெய் வாசனை வருகிறது என்று சொல்ல, அடுத்த பத்து நிமிடங்களில் திமுக எம். எல். ஏ. மீது வெடிகுண்டு வீச்சு என்றும் நூலிழையில் உயிர் தப்பித்தார் என்றும் செய்திகள் தொலைக்காட்சியில் முதன்மை இடம் பிடித்தன.
அதைப் பற்றி ஜூலை 10 ஆம் தேதி காலையில் நமது மின்னம்பலம்.காமில்
திமுக எம் எல் ஏ. உயிருக்குக் குறி? என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இந்த சம்பவம் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களை சுட்டிக காட்டி சட்டம் ஒழுங்கு பற்றி கேள்வி எழுப்பியிருந்தார்.
சம்பவம் நடந்த அன்று கடலூர் மாவட்ட எஸ்.பி. ராஜாராம், டி.எஸ்.பி. பிரபு, இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி அனைவரும் ஸ்பாட்டுக்கு சென்று பல கோணங்களில் விசாரித்தனர். பீர் பாட்டில் தூரத்திலிருந்து தூக்கி வீசப்பட்டால் எப்படி உடைந்திருக்கும், அருகில் இருந்து போட்டால் எப்படி உடையும் என்றெல்லாம் ஆராய்ந்தனர். பாட்டில் வந்து விழுந்தபோது அருகில் இருந்த ஐஸ்கிரீம் விற்பனையாளர், ஐஸ் கிரீம் வாங்கியவர்கள் யாருக்காவது பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா, சத்தம் கேட்டு யாராவது பார்த்தார்களா என்ற கோணங்களில் விசாரித்தனர். ஆனால் சரியான ரிசல்ட் கிடைக்கவில்லை. மஞ்சள் நீராட்டு விழா நடத்திய மணிவண்ணனுக்கு உள்ளூர் மோட்டிவ் இருக்கிறதா எனவும் விசாரித்தனர்.
மறுநாள் ஜூலை 10 ஆம் தேதி காலை 5 மணிக்கு பள்ளிப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வியின் மச்சினன்கள் விஷ்ணுமூர்த்தி, சீத்தாபதி மற்றும் ராஜா ஆகிய மூவரையும் தூக்கணாம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். அவர்களுடன் மண்டபத்தில் ஐஸ்கிரீம் விநியோகம் செய்த கடலூரைச் சேர்ந்த யுவராஜ் மற்றும் ரமேஷ் இருவரையும் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
இந்த விவரங்களை அறிந்த அதிமுக ஒன்றிய சேர்மன் பக்கிரி, ஒன்றிய செயலாளர் அழகானந்தம் ஆகியோர் தலைமையில் அதிமுகவினர் தூக்கணாம்பாக்கம் காவல் நிலையம் எதிரில் திரண்டனர். இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் இந்த வழக்கை அதிமுகவினரின் தலையில் கட்டி முடிக்கப் பார்க்கிறார் என்று புகார் கூறிய அவர்கள், ‘பழி வாங்காதீர்கள்… பொய் கேஸ் போடாதீர்கள்’ என்று குரல் எழுப்பத் தொடங்கினர்.
இதையடுத்து தூக்கணாம்பாக்கம் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ், அதிமுக ஒன்றிய சேர்மன் மற்றும் ஒன்றிய செயலாளரிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். ‘நாங்கள் கேஸ் போடவில்லை. சந்தேகப்பட்ட நபர்களிடம் விசாரணை மட்டுமே நடத்துறோம். உங்க ஆட்களிடம் மட்டுமே விசாரிக்கவில்லை. கடலூர் புது நகரில் நான்கு பேரிடமும், முதுநகரில் நான்கு பேரிடமும், திருப்பாதிரிப்புலியூரில் ஏழு பேரிடமும், தூக்கணாம்பாக்கத்தில் ஐந்து பேரிடமும் என மொத்தம் 20 பேரிடம் நாங்கள் விசாரித்து வருகிறோம்” என்று சமாதானம் செய்து அனுப்பி வைத்தார் இன்ஸ்பெக்டர்.
இந்த விபரம் எஸ். பி. ராஜாராம் கவனத்திற்கு சென்றதும், ஏடிஎஸ்பிக்கு தகவல் சொல்ல, உடனே ஏடிஎஸ்பி அசோக்குமார், டிஎஸ்பி பிரபு, இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி மூவரும் ஒருவருக்கு பின்னால் ஒருவர் தூக்கணாம்பாக்கம் காவல் நிலையம் சென்றனர். அதன் பிறகு சம்பவம் நடந்த திருமண மண்டபம் சென்று அலசி ஆராய்ந்து பார்த்தனர்.
இதற்கிடையே ஐஸ் க்ரீம் வினியோகம் செய்த யுவராஜ், ரமேஷ் இருவரும் போலீஸாரிடம், “ விழா முடியும் நிலையில், எங்கள் ஐஸ் கிரீம் ஸ்டால் மிக அருகில் ஒரு பீர் பாட்டில் உடைந்து கிடந்தது. அது எங்களுக்கே தெரியவில்லை. நிகழ்ச்சிக்கு வந்தவர் ஒருவர், ‘ஏம்ப்பா பாட்டில் உடைஞ்சு கிடக்கு… அதை ஒரமா தள்ளிவிடுங்க’ என்றார். அதன் பிறகு அந்த உடைந்த பாட்டிலை ஒரு பக்கமா தள்ளிவிட்டாச்சு. அப்போது, எம்.எல். ஏ. ஃபங்ஷனுக்கு வரவே இல்லை. அதற்குப் பிறகுதான் வந்தார்.
மேல் மாடியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சென்று திரும்பினார். கீழே வரும்போது பீர் பாட்டில் உடைந்து கிடக்கிறது என்று சிலர் சொல்ல அருகில் இருந்தவர்கள் பெட்ரோல் வாடை வருது என்றும் பேசினார்கள். எம். எல். ஏ. வுடன் இரண்டு பத்திரிகையாளர்கள் வந்தனர். அவர்கள் செல்போனில் போட்டோ, வீடியோ எடுத்தனர். அவ்வளவுதான் நடந்தது. நாங்கள் பார்த்த கொஞ்சம் நேரத்தில் திருமணம் மண்டபத்தில் பெட்ரோல்
வெடிகுண்டு வீச்சு என்று செய்தி வருகிறது” என்று வாக்குமூலம் கொடுத்துள்ளனர். அதன் பிறகு போலீஸார் மாலை 7 மணிக்கு அனைவரையும் வெளியில் அனுப்பி வைத்தார்கள்.
இதன் பிறகு எஸ்.பி. ராஜாராம் பிற அதிகாரிகளிடம், ’இந்த கேசை கவனமாக விசாரிக்கணும். பீர் பாட்டிலை மண்டப வளாகத்தின் உள்ளே வந்து யாராவது மெதுவாக உடைத்திருக்கவேண்டும். மீடியாவுக்கு கொஞ்சம் கூட சமூக அக்கறை இல்லாமல் இப்படி பொய்யான செய்திகளை பரப்புவதின் நோக்கம் என்ன? வெகு சீக்கிரம் உண்மையை கண்டுபிடிப்போம்” என்று அறிவுறுத்தியுள்ளார்.
–வணங்காமுடி