டெல்லியின் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து கெஜ்ரிவாலை தோற்கடித்த பாஜகவின் பர்வேஷ் வர்மா கருத்து தெரிவித்துள்ளார். is parvesh verma next cm of delhi?
மொத்தம் 70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டமன்றத் தேர்தல் வாக்குகள் இன்று (பிப்ரவரி 8) எண்ணப்பட்டு வருகின்றன. புதுடெல்லி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை 4,089 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பர்வேஷ் வர்மா.
மேலும் டெல்லியில் பாஜக 31 இடங்களில் வெற்றியுடன் மொத்தம் 48 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. ஆளும் ஆம் ஆத்மி 16 இடங்களில் வெற்றியுடன் மொத்தம் 22 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் தோல்வியை கெஜ்ரிவால் ஒத்துக்கொண்ட நிலையில், செய்தியாளர்களை சந்தித்த பர்வேஷிடம், ‘டெல்லியின் அடுத்த முதல்வர் நீங்களா என கேள்வி எழுப்பப்பட்டது.
தலைமை முடிவை ஏற்போம்! is parvesh verma next cm of delhi?
அதற்கு பதில் அளித்த அவர், “கடந்த 11 ஆண்டுகளாக அரவிந்த் கெஜ்ரிவால் எந்த வேலையும் செய்யவில்லை. அரவிந்த் கெஜ்ரிவால் பொய்களை மட்டுமே சொன்னார் என்பதை டெல்லி மக்கள் புரிந்துகொண்டனர். டெல்லி தேர்தலில் பாஜகவின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடியே காரணம்.
நான் மகிழ்ச்சியாக இருக்கும்போது அதிகமாக கொண்டாடுபவனும் அல்ல, தோல்வியடையும்போது அதிகமாக வருத்தப்படுபவனும் அல்ல.. பாஜக உயர்மட்டக் குழு (முதல்வர் பதவி குறித்து) என்ன முடிவு செய்தாலும், அதை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள்.
டெல்லியில் அமைக்கப்படவுள்ள இந்த அரசாங்கம், பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையை டெல்லிக்குக் கொண்டு வரும். இந்த வெற்றிக்கான பெருமையை பிரதமர் மோடிக்கு நான் சமர்ப்பிக்கிறேன். டெல்லி மக்களுக்கு நன்றி கூறுகிறேன். இது பிரதமர் மோடி மற்றும் டெல்லி மக்களின் வெற்றி” என்று பர்வேஷ் கூறினார்.
1998 முதல் தலைநகர் டெல்லியில் பாஜக ஆட்சியை இழந்து தவித்த நிலையில், 27 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு பாஜக ஆட்சியமைக்க உள்ளது என்பது தற்போது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
அதே வேளையில் 2013ஆம் ஆண்டுக்கு பின்னர் டெல்லியில் ஒரு தொகுதியில் கூட வெற்றியை அறுவடை செய்யாத காங்கிரஸ் மீண்டும் ஹாட்ரிக் தோல்வியை தழுவியுள்ளது.