டிஜிட்டல் திண்ணை: தமிழ்நாட்டில் கவனம் குவிக்கும் மோடி… பாஜக கரை வேட்டி கட்டும் பன்னீர்?

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும் மத்திய பிரதேச புதிய முதல்வராக மோகன் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டது பற்றிய செய்திகள் இன்பாக்சில் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜ் டைப் செய்ய தொடங்கியது.

“நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் வெற்றி பெற்ற பாஜக ஒவ்வொரு மாநிலத்துக்கும் புதிய முதல்வர்களை நியமித்து வருகிறது. அந்த வகையில் மத்திய பிரதேசத்தின் முதல்வராக இதுவரை மூன்று முறை இருந்த சிவராஜ் சிங் சௌஹானுக்கு பதிலாக மோகன் யாதவ்  புதிய முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். விரைவில் ராஜஸ்தான் மாநிலத்துக்கும் புதிய முதல்வரை தேர்ந்தெடுக்க இருக்கிறது பாஜக.  இத்தோடு பாஜக தேசிய தலைமையின் ஐந்து மாநில தேர்தல் தொடர்பான விவகாரங்கள் முடிவுக்கு வருகின்றன.

இதையடுத்து தென்னிந்தியா மீது குறிப்பாக தமிழ்நாடு மீது மோடியும் அமித்ஷாவும் கவனம் செலுத்த இருக்கிறார்கள். ஏற்கனவே பாஜக கூட்டணியை விட்டு அதிகாரபூர்வமாக வெளியேறிவிட்டது அதிமுக. ஐந்து மாநில தேர்தல் முடிந்த பிறகு பாஜகவின் செல்வாக்கு அதிகரிக்கும். அப்போது எடப்பாடியை பேசி சரிக்கட்டி விடலாம் என்று நினைத்திருந்தனர் பாஜக மேலிடத்தினர். ஆனால் எடப்பாடியோ பாஜக வெற்றி பெற்ற பிறகும் அவர்களுக்கு அரசியல் மரபுப்படி கூட வாழ்த்து தெரிவிக்கவில்லை.  பெயரளவுக்கு வாழ்த்து சொன்னால் கூட அதை வைத்தே மீண்டும் பாஜக-அதிமுக கூட்டணி என்ற தோற்றம் உருவாகிவிடும் என்பதால் அதை கவனமாக தவிர்த்தார்.

இந்த நிலையில்தான் தற்போது தமிழ்நாட்டின் பக்கம் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறது பாஜக தேசிய தலைமை. தெலங்கானா  மாநிலத்தில் மொத்தம் எட்டு தொகுதிகளை பெற்றுள்ளது பாஜக.

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனக்கு நெருக்கமானவர்களிடம் பேசுகையில், ‘தெலங்கானாவில் கேசிஆரின் குடும்ப அரசியலையும், ஊழலையும் பாஜகதான் வலிமையாக பிரச்சாரத்தில் பேசினோம். ஆனால் அதன் பலனை அங்கே கட்டமைப்பு வைத்துள்ள காங்கிரஸ் அனுபவித்துவிட்டது. அதேபோல தமிழ்நாட்டில் திமுகவின் குடும்ப அரசியலையும் ஊழலையும் அதிமுகவை விட நாமே வலிமையாக எதிர்க்கிறோம். இங்கேயும் தெலங்கானா கதையாக அதிமுக அந்த பலனை அனுபவித்துவிட கூடாது. நாம் கொடுக்கும் உழைப்பை நாமே அறுவடை செய்ய வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார். இதை தேசிய தலைமைக்கும் அனுப்பியிருக்கிறார்.

Image

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கின்ற நிலையில், தமிழ்நாட்டில் ஓ. பன்னீர் செல்வத்தை  மீண்டும் பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறது பாஜக. கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி தேர்தல் வெற்றி தொடர்பாக ஓபிஎஸ் மோடிக்கு எழுதிய கடிதத்தில், ‘தங்களின் வழிகாட்டுதலின் கீழ் நாம் இணைந்து செயல்படுவோம் என்று கூறியிருந்தார். அதன்படி பாஜக கூட்டணியில் பன்னீரை சேர்த்துக் கொள்வதா அல்லது பாஜகவிலேயே சேர்த்துக் கொள்வதா என்ற ஆலோசனையும் பாஜகவில் நடந்து வருகிறது.

அண்ணாமலை தலைமையில் தமிழக பாஜக தற்போது செயல்பட்டு வரும் நிலையில் ஓ. பன்னீர் செல்வத்தை பாஜகவில் சேர்த்தால் அவருக்கு என்ன பொறுப்பு கொடுப்பது என்ற கேள்வியும் எழுகிறது. ஆனால் தற்போது அதிமுகவில் சட்ட ரீதியாக கொடியும் இல்லாமல் சின்னமும் இல்லாமல் இருக்கும் பன்னீருக்கு தென் மாவட்டங்களில் இருக்கும்  முக்குலத்து சமுதாய ரீதியான செல்வாக்கை பெறுவதில் பாஜக முனைப்பாக உள்ளது. அதனால் பன்னீர் செல்வம் தற்போது பாஜகவுடன் நட்பாக இருந்தாலும்… அரசியல் ரீதியாக அதன் வடிவம் என்ன என்ற ஆலோசனை பன்னீர், பாஜக இரு தரப்பிலும் நடக்கிறது.

பன்னீருக்கு நெருக்கமானவர்கள் சிலரிடம் பேசியபோது, ‘ பாஜகவின் பின்னால் சும்மா ஆதரவு என்ற நிலையில் இருந்தால் ஒரு பயனும் இல்லை. அதேநேரம் பாஜகவில் பன்னீர் இணைந்துவிட்டால் எடப்பாடிக்கு அது மேலும் சாதகமாகத்தான் இருக்கும்.  அதிமுகவுக்கும் பன்னீரும் துளி கூட உறவு இல்லை என்ற நிலை உருவாகிடும். எனவே அதிமுக என்ற தனது அடையாளத்தை பன்னீர் இழக்க விரும்பமாட்டார். வருகிற ஜனவரி 6 ஆம் தேதி கோவையில் தனது ஆதரவாளர்களின் மாநாட்டை அறிவித்திருக்கிறார் பன்னீர். அதற்கான வேலைகளுக்காக அவ்வப்போது கோவைக்கும் சென்று வருகிறார். அந்த மாநாடு முடிந்ததும் பன்னீர் இதுகுறித்து ஒரு முடிவெடுப்பார்’ என்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அவைகுறிப்பிலிருந்து பெரியார் பெயர் நீக்கம்: ஸ்டாலின் கண்டனம்!

பிக்பாஸ் நாமினேஷன்: இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறப்போவது யார்?

+1
0
+1
5
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *