நாம் தமிழர் கட்சியின் நட்சத்திர பேச்சாளரான காளியம்மாள், தன்னைப் பற்றி வரும் விமர்சனங்களுக்கு இன்று (ஜனவரி 31) பதில் அளித்துள்ளார்.
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானுடன் நிலவும் கருத்து முரண்பாடு காரணமாக அவர் தற்போது கட்சி நிகழ்வுகளில் இருந்து விலகியே இருக்கிறார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 5ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இன்று வரை அவர் ஈரோடு கிழக்கு தொகுதி பக்கமே செல்லவில்லை.
இரண்டு நாட்களுக்கு முன்பு நாதக வேட்பாளரான சீதாலட்சுமியிடம் இதுகுறித்து கேட்கப்பட்டது, அதற்கு அவர், “ஊடகத்தில் வேண்டுமானால் காளியம்மாள் முக்கிய முகமாக இருக்கலாம். கட்சியில் அவர் பெரிய ஆளெல்லாம் கிடையாது” என்று கூறியிருந்தார். அவரின் பேச்சு சர்ச்சையான நிலையில், சீமானின் அறிதல் இல்லாமல் இதுபோன்று பேசியிருக்க முடியாது என அக்கட்சியினர் மத்தியிலேயே பேசப்பட்டது.
இதற்கிடையே அவரை தங்கள் பக்கம் கொண்டு வர திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட மாற்றுக்கட்சியினர் காத்திருக்கின்றனர். இது குறித்து நமது மின்னம்பலம் தளத்தில், டிஜிட்டல் திண்ணை: சீமான் கூடாரத்தை காலி பண்ண… காளியம்மாளை துரத்தும் கழகங்கள்!’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்த நிலையில் தவெகவில் இன்று இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில் காளியம்மாள் மறுப்பு தெரிவித்துள்ளார்.
அவர் நியூஸ் 18 செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ”உடல்நலக்குறைவால் நான் வீட்டில் ஓய்வில் உள்ளேன். நான் தவெகவில் இணைவதாக எந்த அனுமானத்தில் கூறுகின்றனர்? மாற்றுக்கட்சியில் இணைவதாக இருந்தால் உங்களுக்கு தெரிவிப்பேன்” என தெரிவித்துள்ளார்.