திமுகவின் தென் மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் ராமநாதபுரம் மாவட்டம் பாகனூரில் ஆகஸ்டு 17 ஆம் தேதி (இன்று) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்.பி. சிறப்புரை ஆற்றினார்.
அப்போது அவர் ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டியிடப் போவதாக வரும் தகவல்கள் குறித்து குறிப்பிட்டு அது தொடர்பான வரலாற்றுத் தகவலையும் கூறினார்.
“ராமநாதபுரம் மாவட்டம் என்பது பல்வேறு சிறப்புகளை பெற்ற மாவட்டம். தலைவர் கலைஞரின் மனதில் நீங்காத இடம்பெற்ற மாவட்டம் ராமநாதபுரம் மாவட்டம். தலைவர் கலைஞரின் உதயசூரியன் நாடகம் முதன் முதலில் 1958 ஆம் ஆண்டு அரங்கேற்றப்பட்டது இந்த ராமநாதபுரம் மாவட்டத்தில் தான். அந்த நாடகம் அரங்கேற்றப்பட்ட சில நாட்களிலேயே உதயசூரியன் சின்னமும் நம் இயக்கத்துக்கு கிடைத்தது.
இந்த மாவட்டத்தில்தான் இந்த தொகுதியில்தான் டெல்லியில் இருந்து யாரோ போட்டியிடப் போகிறார்கள் என்று செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.
அவர்களுக்கு ஒரே ஒரு செய்தியை நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். 1952, 57, 62 ஆகிய மூன்று தேர்தல்களிலும் இங்கே அரசராக இருந்த சண்முக ராஜேஸ்வர சேதுபதி போட்டியின்றி வெற்றி பெற்றார். அமைச்சரவையிலும் இருந்தார்.
1967 தேர்தல் வருகிறது. அந்தத் தேர்தலில் பேரறிஞர் அண்ணாவும் தலைவர் கலைஞரும் சேர்ந்து ராஜாவுக்கு எதிராக தங்கப்பன் என்ற வேட்பாளரை நிறுத்துகிறார்கள். தங்கப்பன் யார் என்றால், அரசரின் அரண்மனை வாசலிலே குதிரை வண்டி ஓட்டிக் கொண்டிருக்கும் ஒரு சாமானிய மனிதர். அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றது அரசர் இல்லை. அந்த சாமானியர்தான். அவரை வெற்றி பெறச் செய்தது திராவிட முன்னேற்றக் கழகம்.
இங்கே வரவேண்டும் போட்டியிட வேண்டும் என்று நினைப்பவர்கள், இந்த தமிழ்நாட்டை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்” என்று பேசினார் கனிமொழி.
-வேந்தன்
டிஜிட்டல் திண்ணை: அசோக் எங்கே? விலகும் மர்மம்!
ஆன்லைன் ரம்மி அதிர்ஷ்டத்துக்கான விளையாட்டானது எப்படி?: உயர்நீதிமன்றம்!