முதல்வருக்கு ஆணவமா? : ஆளுநருக்கு தக் ரிப்ளை கொடுத்த துரைமுருகன்

Published On:

| By christopher

முதல்வர் ஸ்டாலினை ‘ஆணவக்காரர்’ என ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றஞ்சாட்டிய நிலையில், அவரை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும், அமைச்சர் துரைமுருகனும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

இந்த ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த 6ஆம் தேதி தொடங்கி கடந்த சனிக்கிழமை 11ஆம் தேதி நிறைவுபெற்றது. முதல்நாள் உரையாற்ற சட்டமன்றத்திற்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலில் தேசிய கீதம் பாடப்படவில்லை என்று கூறி ஆளுநர் உரையை வாசிக்காமலே வெளியேறினார்.

அவரது இந்த செயலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.

ஆணவம் நல்லதல்ல!

இந்த நிலையில் நேற்று ஆளுநர் மாளிகையின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியான அறிக்கையில், “முதல்வர் ஸ்டாலின், தேசிய கீதத்துக்கு உரிய மரியாதையை வலியுறுத்துவதையும், அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள அடிப்படைக் கடமைகளைச் செய்யச் சொல்வதையும் “அபத்தமானது” மற்றும் “சிறுபிள்ளைத்தனமானது” என்று வற்புறுத்துகிறார்.

பாரதத்தை ஒரு தேசமாகவும் அதன் அரசியலமைப்பாகவும் ஏற்றுக்கொள்ளாத மற்றும் மதிக்காத ஒரு தலைவராக இருக்கும் அவர், கூட்டு நலன்கள் மற்றும் சித்தாந்தங்களின் உண்மையான நோக்கங்களை வஞ்சகம் செய்ததற்கு நன்றி. இத்தகைய ஆணவம் நல்லதல்ல.

பாரதமே உயர்ந்த தாய் என்பதையும், அவளது குழந்தைகளுக்கு அரசியலமைப்பே உயர்ந்த நம்பிக்கை என்பதையும் மறந்துவிடாதீர்கள். அவர்கள் இத்தகைய வெட்கக்கேடான அவமானத்தை விரும்பவோ பொறுத்துக்கொள்ளவோ மாட்டார்கள்” என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆளுநருக்கு தான் திமிர் அதிகம்!

இதுதொடர்பாக வேலூரில் அரசு பொருட்காட்சி திறப்பு விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் அமைச்சர் துரைமுருகனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், “தமிழக சட்டப்பேரவையில் காலம், காலமாக கூட்டம் தொடங்கும்போது தமிழ்தாய் வாழ்த்து பாடுவதும், முடியும் போது தேசிய கீதம் பாடுவதும்தான் மரபு. இதை ஆளுநர் மாற்றச் சொன்னார். தற்போது தமிழக முதல்வருக்கு ஆணவம் என அவர் கூறியுள்ளார். அவருக்கு தான் திமிர் அதிகம்” ஆவேசமாக பதில் அளித்தார்.

சட்டமன்றத்தில் ஆளுநர் வாக்கிங்

அதே போன்று, சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் கலந்துகொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் ஆளுநரை கடுமையாக விமர்சித்தார்.

அவர் பேசுகையில், “அரசு என்ன கொடுக்கிறதோ அதை படித்துவிட்டு செல்ல வேண்டும். அதுதான் ஆளுநரின் வேலை. ஆனால் தமிழ்நாடு ஆளுநர் சட்டமன்றத்தில் வாக்கிங் செல்கிறார். அவர் வருவதும் தெரியவில்லை, போவதும் தெரியவில்லை. நாம் அரசியல் செய்கிறோமோ இல்லையோ அவர் அரசியல் செய்கிறார்” என உதயநிதி பேசினார்.

கிறிஸ்டோபர் ஜெமா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

48வது சென்னை புத்தகத் திருவிழா நிறைவு : புதிய உச்சம் தொட்ட விற்பனை!

டாப் 10 நியூஸ் : பிரதமர் மோடி திறக்கும் சுரங்கப்பாதை முதல் மகா கும்பமேளா வரை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel