பீகார் மாநில சேலை அணிந்து வந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ( பிப்ரவரி 1) தொடர்ந்து 8வது முறையாக மத்திய அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அதில், 12 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி இல்லை, 36 உயிர்காக்கும் புற்றுநோய் மருந்துகளுக்கு சுங்கவரி முற்றிலுமாக நீக்கம் உள்ளிட்ட அறிவிப்புகள் வரவேற்பை பெற்றுள்ளன.
அதேவேளையில், தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா போன்ற மாநிலங்களுக்கு எந்த திட்டமும் அறிவிக்கவில்லை. ரயில்வே, மெட்ரோ உள்ளிட்டவைகளுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து ஒரு வார்த்தை உச்சரிக்கப்படாதது ஏமாற்றம் அளித்துள்ளது.
எனினும் பாஜக கூட்டணியில் உள்ள நிதிஷ்குமார் ஆளும் பீகாருக்கு மக்கானா வாரியம், பசுமை விமான நிலையம், தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் முனைவோர் மற்றும் மேலாண்மை நிறுவனம் உள்ளிட்ட பல புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது எதிர்க்கட்சிகளின் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.
இதுதொடர்பாக சில எதிர்க்கட்சி எம்.பிக்கள் கருத்துகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
திமுக எம்.பி டி.ஆர்.பாலு is middle class happy with budget 2025
தேர்தல் நடைபெற உள்ள டெல்லியையும், இந்த வருட இறுதியில் தேர்தல் வரவுள்ள பீகாரையும் கருத்தில் கொண்டு பட்ஜெட் 2025 அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசுக்கு முட்டுக் கொடுக்கும் பீகாருக்கு வாரி வழங்கப்பட்டுள்ளது.
ஷிரோமணி அகாலிதள எம்.பி. ஹர்சிம்ரத் கவுர் பாதல்
இந்த பட்ஜெட்டில் பீகார், பீகார், பீகார் என தேர்தல்கள் நடக்கவிருக்கும் பீகார் மாநிலத்திற்கு மட்டுமே உடையதாக உள்ளது. பஞ்சாப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. கடந்த 4 ஆண்டுகளாக குறைந்தபட்ச ஆதரவு திட்டத்திற்கான சட்டப்பூர்வ உத்தரவாதத்திற்காக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளுக்கு அவர்கள் என்ன அறிவித்தார்கள்? இது விவசாயிகளுக்கு எதிரான பட்ஜெட். தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் விவசாயிகள் குரல் கேட்கப்படவில்லை இது வருத்தமளிக்கிறது.
காங்கிரஸ் எம்.பி. கிரண் குமார் சமாலா
மத்திய அரசின் பட்ஜெட்டை பார்க்கும்போது, பீகார் நிறைய முக்கியத்துவம் அளித்திருப்பதைக் கண்டோம், அதே நேரத்தில் தெலுங்கானா போன்ற மாநிலங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று எதிர்நோக்குகிறோம். இன்றைய மொத்த பட்ஜெட் உரையில் ஒரு அரசியல் அஜெண்டா இருக்கிறது.
திமுக எம்.பி. தயாநிதி மாறன்
இது மிகவும் ஏமாற்றமளிக்கும் பட்ஜெட்டாக தெரிகிறது, டெல்லி வாக்காளர்களை, குறிப்பாக பிப்ரவரி 5 ஆம் தேதி வரவிருக்கும் டெல்லி தேர்தலுக்காக, கவரும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. 12 லட்ச ரூபாய்க்கு வரி இல்லை என்று நிதியமைச்சர் விலக்கு அளித்துள்ளார். பின்னர் அவர் ரூ.8-12 லட்ச ரூபாய்க்கு 10% வரி வரம்பு உள்ளது என்று கூறுகிறார். எனவே, இது மிகவும் குழப்பமாக இருக்கிறது. எனவே, அடிப்படையில் நடுத்தர வர்க்கத்தினர் மீண்டும் நிதியமைச்சரால் ஏமாற்றப்பட்டதாகத் தெரிகிறது. நாட்டின் பிற பகுதிகளுக்கு உள்கட்டமைப்பு செல்லவில்லை, இந்த ஆண்டு பீகாரில் தேர்தல்கள் இருப்பதால் அது பீகாரை நோக்கி மட்டுமே செல்கிறது. தமிழ்நாடு அல்லது வேறு எந்த தென் மாநிலங்களுக்கும் ஒரு வார்த்தை கூட இல்லை.
காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம்
நிதியமைச்சரின் உரை பட்ஜெட்டின் ஒரு சிறிய சுருக்கம். பட்ஜெட்டை விரிவாகப் படிக்காவிட்டால், அதைப் பற்றிய தெளிவான மதிப்பீட்டைச் செய்ய முடியாது. பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன, ஆனால் அவை அனைத்தும் 2029 க்குப் பிறகு சிறப்பாக நிறைவேற்றப்படும். எனவே, அவை உண்மையில் புதிய திட்டங்களா அல்லது பழைய திட்டங்களுடன் சேர்க்கப்படுகிறதா என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும், மேலும் பழைய திட்டங்களின் நிலை என்ன என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். அறிவிக்கப்பட்ட திட்டங்கள் பிரமாண்டமாகத் தோன்றலாம், ஆனால் முந்தைய பட்ஜெட்டுகளுடன் ஒப்பிடும் போது இதேபோன்ற பிரமாண்டமான திட்டங்கள் எவை நிறைவேறியுள்ளன என்ற கேள்வி எழுகிறது.
சசிதரூர்
நடுத்தர வர்க்க வரி குறைப்பு குறித்து பாஜகவினர் ஆரவாரம் செய்கிறார்கள், அதன் விவரங்களுக்காக நாம் அனைவரும் ஆர்வத்துடன் காத்திருக்கிறோம் என்று நினைக்கிறேன். ஆனால் நமது பொருளாதாரத்தின் தன்மை மற்றும் நிதியமைச்சர் அவற்றை நிவர்த்தி செய்ய என்ன செய்ய விரும்புகிறார் என்பது பற்றிய சில அடிப்படை கேள்விகள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. is middle class happy with budget 2025