மக்கள் நீதி மய்யம் கட்சி காங்கிரஸ் கட்சியுடன் இணைக்கப்பட உள்ளதாக அக்கட்சியின் இணையதள பக்கத்தில் தெரிவித்திருப்பது கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு மதுரையில் தனது மக்கள் நீதி மய்யம் கட்சியை கமல்ஹாசன் தொடங்கினார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களிலும் தனித்து களம் கண்ட மக்கள் நீதி மய்யம் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
இந்நிலையில் சமீபகாலமாக காங்கிரஸ் கட்சியுடன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி நல்லுறவை வளர்த்து வருகிறது.
அதன்படி கடந்த டிசம்பர் 24ம் தேதி டெல்லியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்ட இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் கமல்ஹாசன் பங்கேற்று ஆதரவளித்தார்.
அதனைத் தொடர்ந்து கடந்த 25ம் தேதி, ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும், தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இருக்கும், காங்கிரஸுக்கே நிபந்தனையற்ற ஆதரவினை மக்கள் நீதி மய்யம் வழங்கும் என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் வரும் 30ம் தேதி ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியுடன் மக்கள் நீதி மய்யம் இணைப்பு நிகழ்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஈனர்களின் இழிசெயல்
இது அக்கட்சியினர் மத்தியில் அதிருப்தியையும், பலத்த கேள்விகளையும் எழுப்பிய நிலையில் விஷமிகளால் ஹேக் செய்யப்பட்டு, இத்தகவல்கள் பரப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து மக்கள் நீதி மய்யத்தின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில், “மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரப்பூர்வ வலைதளம் விஷமிகளால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. ஜனநாயக சக்திகளை ஒடுக்கியே பழக்கப்பட்ட ஈனர்களின் இழிசெயல்களுக்கு அஞ்சாமல் தக்க பதிலடி கொடுப்போம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
சனாதன நிகழ்ச்சியில் நானா? : இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் வேதனை
”ஆண் பெண் வித்தியாசம் இல்லையா ஐஸ்வர்யா?”: சின்மயி பதிலடி!