மோடி உயிருக்கு ஆபத்தா? பதைபதைக்கும் மத்திய, மாநில உளவுப் பிரிவுகள்!

அரசியல் இந்தியா

எதிர்வருகின்ற பிப்ரவரி 25 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு வருகை தர உள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஜூலை 29-ம் தேதி துவங்கி ’என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் தமிழ்நாடு தழுவிய ஒரு நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

அந்த நடைபயணம் வரும் பிப்ரவரி 25 அன்று பல்லடத்தில் நிறைவு பெற இருக்கிறது. அதற்காக தமிழக பாஜக-வால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரம்மாண்டமான நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க இருக்கிறார்.

அந்த கூட்டத்தில் தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் யார் யார் இணைகிறார்கள் என்று உறுதி செய்யப்படுமென்றும், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் அக்கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்றும் தெரிகிறது.

இந்நிலையில் பிப்ரவரி 8 வியாழக்கிழமை அன்று சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள 13 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் வழியாக வெடிகுண்டு மிரட்டல் ,அடையாளம் தெரியாத நபரால் விடுக்கப்பட்டிருந்தது. அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மின்னஞ்சல் முகவரியில் இருந்து இந்த மிரட்டல் வந்திருந்தது.

தமிழக காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவினர் மற்றும் மத்திய மாநில உளவுப் பிரிவினரும் இந்த மிரட்டல் எங்கிருந்து வந்தது அதன் பின்னணி என்ன என்பது பற்றி ஆராய்ந்து வருகிறார்கள். பள்ளிகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட அந்த மின்னஞ்சல் வெளிநாட்டிலிருந்து வந்த காரணத்தினால், அதன் IP Address குறித்த தகவல்களை கண்டுபிடிக்க முடியாமல் உளவுப் பிரிவினர் திணறி வருகிறார்கள்.

வெளிநாட்டிலிருந்து வந்த அந்த மின்னஞ்சலுக்கும், இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா என்று வெளிமாநிலங்களில் இருந்து வந்துள்ள என்.ஐ.ஏ (தேசிய புலனாய்வு முகமை) புலனாய்வுப் பிரிவினர் இன்று (பிப்ரவரி 10) அதிகாலை 6 மணி முதல் தமிழகத்தில் சோதனைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

பெரம்பூர் 5-வது வீதியைச் சேர்ந்த முகமது பாஷா, சென்னை ராமாபுரம் ஜாபர் அலி, கோவை ஒத்தகால் மண்டபம் முகமது அலி ஜின்னா ஆகியோரின் வீடுகளிலும், திருச்சி கூனி பஜார், பல்லாவரம் சோமசுந்தரம் வீதி, புளியந்தோப்பு, திருவிக நகர், கொளத்தூர், வில்லிவாக்கம் சிட்கோ நகர், மதுரை திடீர் நகர், திருநெல்வேலி ஏர்வாடி முகமது நகர் உட்பட 25க்கும் மேற்பட்ட இடங்களிலும் சோதனைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

முகமது சுலைமான்

மேலும் கடலூர் மாவட்டம் மங்களம்பேட்டையைச் சேர்ந்த முகமது சுலைமானின் மொபைல் போனை பறிமுதல் செய்த என்.ஐ.ஏ அதிகாரிகள் வரும் 14-ம் தேதி புதன்கிழமையன்று புரசைவாக்கம் என்.ஐ.ஏ அலுவலகத்தில் ஆஜராகுமாறு தெரிவித்துள்ளனர்.

இதுமட்டுமல்லாமல் என்.ஐ.ஏ. கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் நாம் தமிழர் கட்சியினரின் வீடுகளிலும் சோதனைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது.

அந்த பள்ளிகளுக்கு வந்த மின்னஞ்சலானது புரோட்டான்மெயில் (Protonmail) எனும் மின்னஞ்சல் வகையினைப் பயன்படுத்தி அனுப்பப்பட்டுள்ளது. 10 நிமிடங்களில் அழிந்துவிடும் தன்மை கொண்ட இதுபோன்ற 15 வகையான மின்னஞ்சல் வகைகளை வெளிநாடுகளைச் சேர்ந்த தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

இத்தகைய மின்னஞ்சல்களின் ஐ.பி முகவரி மற்றும் சர்வர் விவரங்கள் கண்டுபிடிக்க முடியாத ஒன்றாக உள்ளது. எனவே இது ஒரு நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது. அந்த காரணத்தினால் தமிழகப் போலீசார் மத்திய அரசின் மூலமாக சர்வதேச காவல் பிரிவான இண்டர்போல்(IP) உதவியை நாடியுள்ளனர்.

இதைப்பற்றி மேலும் விசாரித்த போது,

தமிழ்நாட்டு பள்ளிகளுக்கு வந்த மிரட்டலை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்பதும், காவல்துறை மற்றும் உளவுத்துறையினரை திசைதிருப்பி வேறு எங்கோ அசம்பாவிதங்களை நிகழ்த்துவதற்காக தமிழ்நாட்டில் இப்படிப்பட்ட மிரட்டல்களை விடுத்திருக்கலாம் என்பதும் உளவுப் பிரிவினருக்கு தெரிய வந்துள்ளது.

இன்னும் இரு வாரங்களில் பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வர இருக்கிற நிலையில், இப்படிப்பட்ட வெளிநாடுகளில் இருந்து வரும் மிரட்டல்களை இலேசாக எடுத்துக் கொள்ள முடியாது, மூன்றாவது முறை மோடி இந்தியாவின் பிரதமர் ஆவார், அதன் மூலம் ஆசியாவின் மிகவும் வலிமை மிக்க தலைவராவார்  என்று உலகம் முழுதும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஒருவேளை தமிழ்நாட்டில் நடக்கும் இந்த சதி வலைப் பின்னல்கள் மோடியை குறிவைத்தும் இருக்கலாமோ என்ற சந்தேகமும் வலுவாக எழுகிறது.

மேலும் சீனா தனது ஆதிக்கத்தினை இந்தியாவினை நோக்கி நகர்த்தி வருவதால், இலங்கை போன்ற மற்ற நாடுகளில் உள்ள தடைசெய்யப்பட்ட அமைப்புகளில் உள்ளவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டி அவர்களுக்கு மூளைச்சலவை செய்து இந்தியா போன்ற நாடுகளுக்கு எதிராக செயல்படத் திட்டமிட்டுள்ளதாகவும் இந்திய உளவுப் பிரிவிற்கு தகவல் தெரிய வந்துள்ளது.

அதனால்தான் இந்த வெடிகுண்டு மிரட்டலை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் மத்திய, மாநில உளவுப் பிரிவினர் பதைபதைத்துப் போய் பல கோணங்களில் ஆராய்ந்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வணங்காமுடி

இது யாருக்கான ’வணக்கம்’? – லால் சலாம் விமர்சனம்!

குமரி மீனவர்களுக்கு எச்சரிக்கை!

+1
0
+1
3
+1
0
+1
3
+1
2
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *