வைஃபை ஆன் செய்ததும் இன்ஸ்டாகிராமில் கமல்ஹாசனின் படங்கள் வந்து விழுந்தன. கூடவே, ‘அரசியல் அப்டேட் ப்ளீஸ்’ என்ற குறிப்பும் வந்திருந்தது.
வாட்ஸ் அப் அதைப் பார்த்துவிட்டு தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது. “கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி சென்னையில் நடந்த மக்கள் நீதி மய்யத்தின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு அக்கட்சியின் துணைத் தலைவர் மௌரியா செய்தியாளர்களிடம்,
’ராகுல் காந்தி விடுத்த கோரிக்கையை ஏற்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் டிசம்பர் 24 ஆம் தேதி ஒற்றுமை இந்தியா பாத யாத்திரையில் கலந்துகொள்கிறார்’ என்று தெரிவித்தார்.
இதையடுத்து அரசியல் அரங்கில் பல்வேறு விவாதங்கள் எழுந்தன. ஏற்கனவே கமல்ஹாசன் அமைச்சர் உதயநிதியோடு சினிமா ரீதியாக நல்ல நட்பில் இருக்கிறார். அந்த சினிமா நட்பு அரசியல் நட்பாகவும் மாறக் கூடும் என்று பேசப்பட்டது. இந்த நிலையில் ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையில் கமல்ஹாசன் பங்கேற்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து வேறு மாதிரியான புயல் கிளம்பியது.
அதாவது ஏற்கனவே கட்சி நடத்த கஷ்டப்பட்டு வரும் கமல்ஹாசன் டெல்லி சென்று ராகுல் காந்தியின் பாத யாத்திரையில் பங்கேற்கிறார். தமிழக காங்கிரசை வலிமைப்படுத்தும் நோக்கில் கமல்ஹாசனை தமிழக காங்கிரசில் இணையுமாறு ராகுல் காந்தி வற்புறுத்துகிறார். இதையடுத்து கட்சியைக் கலைத்துவிட்டு காங்கிரஸோடு இணையப் போகிறாரா என்ற கேள்வியும் வலிமையாக எழத் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் சிலரிடம் விசாரித்தபோது அந்த கூட்டத்தில் நடந்ததைச் சொன்னார்கள். ‘டிசம்பர் 18 ஆம் தேதி நடந்த கூட்டத்தில் கமல்ஹாசன் தனக்கு ராகுல் காந்தி எழுதிய இரண்டு பக்க கடிதத்தை எடுத்துக் காட்டினார். இந்திய ஒற்றுமை யாத்திரையில் கலந்துகொள்ளுமாறு ராகுல் காந்தி எனக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். நான் பங்கேற்க இருக்கிறேன் என்று தெரிவித்ததும் நிர்வாகிகள் கைதட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
அதன் பின் கட்சியின் பூத் கமிட்டிகளை வலிமைப்படுத்துவது பற்றி பேசினார். அதன் பிறகு வரும் பிப்ரவரி 21 ஆம் தேதியின் கட்சி ஐந்தாம் ஆண்டு முடிந்து ஆறாம் ஆண்டு தொடக்க விழா ஏற்பாடுகள் பற்றியும் பேசினார். இந்த விழாவில் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவதாகவும் தெரிவித்தார்.
இவ்வளவுதான் அவர் பேசியவை. ஆனால் ஏதோ கமல் கட்சியைக் கலைத்துவிட்டு காங்கிரஸ் மாநிலத் தலைவராகப் போகிறார் என்று சிலர் கிளப்பி விடுகிறார்கள். இன்னொரு கட்சியில் சேருவதாக இருந்தால் அவர் ஏன் ஐந்து வருடமாக கட்சியை இந்த அளவுக்கு நடத்த வேண்டும்? தனிக் கட்சி ஆரம்பிக்காமலேயே ஏதேனும் ஒரு கட்சியில் சேர்ந்திருந்தால் இந்நேரம் எம்பியாக கூட இருந்திருப்பாரே? இந்த வதந்தியின் பின்னால் பாஜகவினர்தான் இருக்கிறார்கள்’ என்கிறார்கள் மக்கள் நீதி மய்யத்தினர்.
கமல்ஹாசன் டெல்லி செல்லத் தயாராகி வரும் நிலையில் அவரோடு தமிழகத்தில் இருந்து மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் பலரும் புறப்படத் தயாராகிவிட்டார்கள்.
ஆனால் கோவிட் பரவி வருவதால் கட்டுப்பாடுகளை பின்பற்றுமாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும் வேண்டுகோள் விடுத்திருப்பதால் கூட்டம் சேர்க்க வேண்டாம் என்று கமல் முடிவெடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
கூவத்தூர் முதல் பொதுக்குழு வழக்கு வரை : கொட்டித்தீர்த்த ஓபிஎஸ்
திமுக அனைத்து அணி நிர்வாகிகள் கூட்டம்: தேதி மாற்றம்!