கன்னடர்களுக்கே வேலைவாய்ப்பு மசோதா நடைமுறையாவது சாத்தியமா? தமிழ்நாட்டின் நடைமுறை என்ன?

அரசியல் சிறப்புக் கட்டுரை

கர்நாடகா அமைச்சரவை ஜூலை 15 ஆம் தேதி ஒப்புதல் அளித்த மசோதா ஒன்று இன்று நாடு முழுதும் பெரும் விவாதமாக மாறியிருக்கிறது. Karnataka state employment of local candidates in the industries, factories and other establishments bill 2024 என்ற பெயரில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா நிறுத்தி வைக்கப்பட்ட பின்னரும் அதன் மீது எழுந்த விவாதங்கள் நின்றபாடில்லை.

கர்நாடகாவில் உள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் கர்நாடகாவைச் சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை வழங்கும் வகையில் இந்த மசோதா கொண்டு வரப்பட்டது. குறிப்பாக நிர்வாகப் பிரிவுகளில் (Management positions) 50% இடங்களும், நிர்வாகம் அல்லாத பிற பிரிவுகளில் (Non Management positions) 70% சதவீத இடங்களும் கன்னட மக்களுக்கே வழங்க வேண்டும் என்று இந்த மசோதா குறிப்பிட்டது.

மேலும் சி மற்றும் டி கிரேட் வேலைகளில் 100% கன்னடர்களுக்கே வேலை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட செய்தி வெளிவந்தவுடன், தனியார் நிறுவனங்களிடமிருந்து கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன. Nasscom உள்ளிட்ட தொழிற்நிறுவன கூட்டமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில் எதிர்ப்புகளின் காரணமாக இந்த மசோதாவினை நிறுத்தி வைத்துள்ளது கர்நாடக அரசு.

உள்ளூர் மக்கள் என்பவர்கள் யார்?

இந்த மசோதாவின் சில விவரங்களைப் பார்ப்போம். உள்ளூர் மக்களுக்கு இட ஒதுக்கீடு என்ற வார்த்தை இந்த மசோதாவில் முக்கியமானதாக இடம்பெற்றுள்ளது. உள்ளூர் மக்கள் என்றால் யார் யார் என அந்த மசோதாவில் வரையறுக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

கர்நாடகாவில் பிறந்து, குறைந்தபட்சம் 15 ஆண்டுகளாக கர்நாடகாவில் வசிப்பவர்கள். மேலும் அவர்கள் கன்னட மொழியில் பேசவும், படிக்கவும், எழுதவும் தெரிந்தவர்களாக இருத்தல் வேண்டும்.

மேலும் இதற்கு தகுதி பெறுவதற்கு 10 ஆம் வகுப்பு வரையில் கன்னடத்தை ஒரு மொழியாக படித்திருக்க வேண்டும் அல்லது கன்னட நோடல் ஏஜென்சி நடத்துகிற கன்னட மொழிப் புலமை தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

உள்ளூர் பணியாளர்கள் கிடைக்காவிட்டால்…

தனியார் நிறுவனங்களுக்கு பொருத்தமான உள்ளூர் பணியாளர்கள் கிடைக்காவிட்டால், சம்மந்தப்பட்ட தொழிற்சாலைகளும், நிறுவனங்களும் அரசாங்கத்துடன் இணைந்து உள்ளூர் பணியாளர்களுக்கு மூன்று ஆண்டுகள் பயிற்சி வழங்க வேண்டும்.

சில தவிர்க்க முடியாத விவகாரங்களில் மட்டும் இந்த மசோதா சில விலக்குகளை தனியார் நிறுவனங்களுக்கு அளிக்கிறது. ஆனாலும் அப்படிப்பட்ட விவகாரங்களிலும் கூட உள்ளூர் பணியாளர்கள் நிர்வாக பிரிவுகளில் 25% சதவீதத்திற்கு குறையக் கூடாது. நிர்வாகமல்லாத பிரிவுகளில் உள்ளூர் பணியாளர்கள் எண்ணிக்கை 50% சதவீதத்திற்கு குறையக் கூடாது. இவற்றை பின்பற்றாவிட்டால் 10,000 முதல் 25,000 வரை அபராதம் விதிக்கப்படும்.

போதுமான உள்ளூர் பணியாளர் கிடைக்கவில்லை என்றால், சம்மந்தப்பட்ட நிறுவனம் இந்த சட்டத்தின் பிரிவுகளிலிருந்து தளர்வு கேட்டு அரசாங்கத்திடம் விண்ணப்பிக்கலாம். அரசாங்கம் விசாரணை மேற்கொண்டு தளர்வு வழங்கலாமா இல்லையா என்பதை முடிவெடுக்கும். அரசாங்கத்தின் முடிவே இறுதியானது.

சரோஜினி மகிசி ஆணையம்

அரசாங்க வேலைகளில் கன்னட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை கன்னட இயக்கங்கள் நீண்ட காலமாக கோரி வந்தன. 1983 ஆம் ஆண்டு இது குறித்து ஆய்வறிக்கை சமர்ப்பிப்பதற்காக கர்நாடக அரசினால் சரோஜினி மகிசி ஆணையம் அமைக்கப்பட்டது. மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் கர்நாடகாவில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களில் சி மற்றும் டி கிரேட் வேலைகளிலும் உள்ளூர் மக்களுக்கே 100% வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்று அந்த ஆணையத்தின் அறிக்கை கூறியது. இப்படி நீண்ட காலமாக கர்நாடகாவில் இருந்த வந்த கோரிக்கையின் தொடர்ச்சியாக இந்த மசோதா கொண்டு வரப்பட்டது.

டிவீட்டை போட்டு டெலிட் செய்த சித்தராமைய்யா

கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா தனது எக்ஸ் பக்கத்தில், எல்லா தனியார் நிறுவனங்களிலும் சி மற்றும் டி கிரேட் வேலைகளுக்கு 100% கன்னடர்களையே வேலைக்கு எடுக்க வேண்டும் என்ற மசோதாவிற்கு கேபினெட் மீட்டிங்கில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருந்தார். கன்னட மண்ணில் கன்னடர்களின் வேலை வாய்ப்பு பறிக்கப்படுவது தடுக்கப்பட்டு, தாய்மண்ணில் கன்னடர்கள் நல்ல வாழ்க்கை வாழ்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரவேண்டும் என்பதே எங்கள் அரசாங்கத்தின் விருப்பம் என்று தெரிவித்திருந்தார். தனியார் நிறுவனங்களிடமிருந்து எதிர்ப்புகள் வந்த பிறகு அந்த பதிவினை நீக்கிவிட்டார்.

சமாளித்த தொழிற்துறை அமைச்சர்

அதன்பிறகு கர்நாடக தொழிற்துறை அமைச்சர் எம்.பி.பாட்டில், “நாங்கள் விரிவான ஆலோசனைகளை நடத்துவோம். தொழிற்சாலைகளின் நலன்களோடு சேர்த்து கன்னடர்களின் நலன்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வோம்” என்று பதிவிட்டதுடன், தொழிலதிபர்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதன்பிறகு சித்தராமைய்யா தனது பதிவினை மாற்றிக் கொண்டார். தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா இன்னும் தயாரிப்பு நிலையில் உள்ளது. இறுதி முடிவை எடுப்பதற்கு அடுத்த கேபினெட் கூட்டத்தில் விரிவான விவாதம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தொழிலதிபர் மோகன்தாஸ் பை, இது மிகவும் மோசமான, பிற்போக்குத்தனமான, அரசியல் சாசனத்திற்கு எதிரான மசோதா என்று விமர்சித்துள்ளார். மேலும் இது பாசிச மசோதா என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் இருக்கும் நடைமுறை

தமிழ்நாட்டிலும் இதுபோன்ற கோரிக்கைகள் நீண்ட காலமாக எழுப்பப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. தமிழ்நாட்டில் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளைப் பொறுத்தவரை தமிழ்நாட்டு மக்களுக்கு என்று தனிப்பட்ட முறையில் இட ஒதுக்கீடு எதுவும் நடைமுறையில் இல்லை.

தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் சமூக அடிப்படையிலான 69% இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களே டி.என்.பி.எஸ்.சி பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். மீதமுள்ள 31% இடங்களில் வேற்று மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கூட விண்ணப்பிக்க முடியும்.

ஆனால் 10 ஆம் வகுப்பு தமிழ் மொழி பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பணி நியமனம் செய்யப்பட்ட 2 ஆண்டுகளில் மொழித் திறன் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். பணி நியமனம் செய்யப்பட்ட 2 ஆண்டுகளில் மொழித் திறன் தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதும் என்ற அறிவிப்பு பல எதிர்ப்புகளை தமிழ்நாட்டில் உருவாக்கியது. வெளிமாநிலத்தவர்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்வாக இது வழிவகுத்துவிடும் என்று எதிர்ப்புகள் எழுந்தன.

மேலும் டி.என்.பி.எஸ்.சி தேர்வில் பிரிலிம்ஸ் மற்றும் மெயின்ஸ் என்று இரண்டு எழுத்துத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. பிரிலிம்ஸ் தேர்விலிருந்து தமிழ் மொழிப் பாடம் நீக்கப்பட்ட போதும் தமிழ்நாட்டில் எதிர்ப்புகள் எழுந்தன. ஆனால் மெயின்ஸ் தேர்வில் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் மொழிப்பெயர்க்கும் பிரிவுகள் உள்ளிட்ட தமிழ் மொழி தகுதித் தேர்வு சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் தமிழை விளக்கமாக எழுதத் தெரியாதவர்கள் இந்த தேர்வில் தேர்ச்சியடைய முடிவதில்லை.

எனவே தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தமிழர்களுக்கு என்று அரசு வேலைவாய்ப்பில் சிறப்பு இடஒதுக்கீடுகள் எதுவும் வழங்கப்படவில்லை. இருந்தாலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள Eligibility Criteria-கள் மூலம் வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களால் பெரிதாக தமிழ்நாட்டில் தேர்வாக முடிவதில்லை.

அதேசமயம் மத்திய அரசுப் பணிகளிலோ, தனியார் நிறுவனங்களிலோ தமிழர்களுக்கு என்று எந்த இடஒதுக்கீடும் தமிழ்நாட்டில் நடைமுறையில் இல்லை. எனவே கர்நாடகத்தில் கொண்டு வரப்பட்ட கன்னட மக்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா தமிழ்நாட்டிலும் பெரும் விவாதத்தினை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா, ஹரியானா மற்றும் ஜார்க்கண்டில் கொண்டுவரப்பட்ட மசோதாக்கள்

2019 ஆம் ஆண்டு ஆந்திராவில் தொழில் நிறுவனங்களில் 75% இடங்களை உள்ளூர் மக்களுக்கே வழங்க வேண்டும் என்ற மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

2020 ஆம் ஆண்டு இந்த மசோதா அரசியல் சாசனத்திற்கு எதிரானதாக இருக்கும் என்று ஆந்திர உயர்நீதிமன்றம் சொல்லிவிட்டது.

அதேபோல் ஹரியானா மாநிலத்தில் 2020 ஆம் ஆண்டு 30,000 ரூபாய் வரை மாத சம்பளம் உள்ள பணிகளில் 75% இடங்களை உள்ளூர் மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற மசோதா நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதாவிற்கு ஆளுநரின் ஒப்புதலும் பெறப்பட்டது.

மண்ணின் மைந்தர்கள் என்ற பெயரில் இந்த இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று சொல்லியும் தனியார் நிறுவனங்கள் பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்றத்திற்கு சென்றன.

விசாரித்த நீதிமன்றம், ஒரு தனியார் முதலாளி மீது அரசாங்கம் முழுமையான கண்ட்ரோல் எடுப்பதை நோக்கி இது நகரும் என்று தெரிவித்ததுடன், ஒரு நபருக்கு அரசியல் சாசனம் வழங்கியுள்ள தொழில் செய்யும் உரிமையில் இந்த மசோதா தலையிடுவதாகவும் கூறியது. ஒருவர் இந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் இல்லை என்ற அடிப்படையில் எந்த தனிநபர் மீதும் ஒரு மாநில அரசு பாகுபாடு காட்டக் கூடாது என்று சொல்லி இந்த சட்டத்தினை நிராகரித்து விட்டது. இப்போது இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரன் அரசு 2023 ஆம் ஆண்டு அம்மாநிலத்தின் அரசு வேலைகளை 100% சதவீதம் உள்ளூர் மக்களுக்கு வழங்கும் இட ஒதுக்கீடு மசோதாவை அறிமுகப்படுத்தியது. 1932 ஆம் ஆண்டு முன்பான நில ஆவணங்கள் அடிப்படையில் ஒரு நபரை உள்ளூர் நபர் என்று இந்த மசோதா வரையறுத்தது. இந்த மசோதா அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று சொல்லி ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் இந்த மசோதாவை திருப்பி அனுப்பிவிட்டார்.

இந்த முன்னுதாரணங்களைக் குறிப்பிட்டு கர்நாடகாவின் இந்த மசோதா நடமுறைக்கு வருவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு என்கிறார்கள் சட்ட நிபுணர்கள்.

– விவேகானந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தஞ்சாவூர்: 300 ஆண்டுகளாக மொஹரம் பண்டிகையைக் கொண்டாடும் இந்துக்கள்!

‘கறந்த பால் மடி புகாது, கருவாடு மீன் ஆகாது’ : சசிகலாவை விமர்சித்த ஆர்.பி.உதயகுமார்

உச்சநீதிமன்ற நீதிபதியாக ஆர்.மகாதேவன் பதவியேற்பு!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

1 thought on “கன்னடர்களுக்கே வேலைவாய்ப்பு மசோதா நடைமுறையாவது சாத்தியமா? தமிழ்நாட்டின் நடைமுறை என்ன?

  1. Tamil nattoda criteria ah va vachu easy ah yarum select agurathu illaya. Nalla kandupupidippu. Or UP Karan tamil eh theriyama tamil la first mark vangunathellam maranthutingala. Nalla jaldra podrura man nee. 200 received ah.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *