India alliance without Mamata Banerjee

‘தனித்து போட்டி’ : மம்தாவுக்கு காங்கிரஸ் பதில்!

அரசியல் இந்தியா

மம்தா பானர்ஜி இல்லாமல் இந்தியா கூட்டணியை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது என்று காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தெரிவித்துள்ளன.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் சூழலில் இந்திய அரசியல் களம் சூடு பிடித்திருக்கிறது.

திமுக, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் என 20க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை அமைத்துள்ளன. இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள முக்கிய கட்சியான திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, ‘இந்தியா கூட்டணியில் இருந்தாலும் 42 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிடுவதாக’ இன்று (ஜனவரி 24) அறிவித்துள்ளார். இது கூட்டணி கட்சிக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

கொல்கத்தாவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, “தேர்தல் முடிவுக்குப் பிறகு, அனைத்திந்திய அளவில் கூட்டணி குறித்து முடிவு செய்வோம். காங்கிரஸுடன் எந்த பேச்சுவார்த்தையும் செய்யவில்லை. மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிடுகிறோம் என்று எப்போதும் நான் கூறி வருகிறேன்.

நான் காங்கிரஸுக்கு பல பரிந்துரைகளை செய்தேன். ஆனால் காங்கிரஸ் அதை நிராகரித்துவிட்டது. நாங்கள் ஒரு மதச்சார்பற்ற கட்சி, வங்காளத்தில் எங்களால் மட்டுமே பாஜகவை தோற்கடிக்க முடியும்” என்றார்.

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரையை தாக்கி பேசிய மம்தா பேனர்ஜி, “அவர்கள் என் மாநிலத்திற்குள் நாளை நுழைய இருக்கிறார்கள். ஆனால் இந்தியா கூட்டணியில் இருக்கும் என்னிடம் ஒரு மரியாதைக்கு கூட தெரிவிக்கவில்லை. அதனால் வங்காளத்தைப் பொறுத்த வரையில் எனக்கும் அவர்களுக்கும் எந்த உறவும் இல்லை” என கூறியுள்ளார்.

மம்தா பானர்ஜியின் இந்த அறிவிப்பு குறித்து பாஜக மூத்த தலைவர் ரவி சங்கர பிரசாத் கூறுகையில், “சுயநல, சந்தர்ப்பவாத கூட்டணி (இந்தியா) அமையும் போது இதுபோன்ற விஷயங்கள் எல்லாம் நடக்கும்” என விமர்சித்துள்ளார்.

இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இதுதொடர்பாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்றும், பாஜகவை தோற்கடிக்க எதையும் செய்வோம் என்றும் மம்தா பானர்ஜி கூறியிருக்கிறார். மம்தா ஜியும் திரிணமூல் காங்கிரஸும் இந்தியக் கூட்டணியின் வலுவான தூண்கள் என்று ராகுல் காந்தி தெளிவாக சொல்லியுள்ளார். மம்தா பானர்ஜி இல்லாத கூட்டணியை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. திரிணமூல் காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக விவாதித்து வருகிறோம், அனைவருக்கும் திருப்தி அளிக்கும் வகையில் தொகுதிப்பங்கீடு நிறைவடையும்

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அனைத்து இந்தியா கூட்டணி தலைவர்களும் ராகுல் காந்தியின் யாத்திரையில் கலந்துகொள்ள வேண்டும் என்று பலமுறை அழைப்பு விடுத்திருக்கிறார்” என தெரிவித்துள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே கூறுகையில், “அவர் எங்கள் டிடி. அவரை மிகவும் நேசிக்கிறோம். மதிக்கிறோம். இந்தியா கூட்டணி ஒன்றுபட்டுள்ளது. நாங்கள் அனைவரும் ஒன்றாக போராடுவோம். அவரது அறிவிப்பால் கூட்டணிக்கு எந்த இழப்பும் ஏற்படாது.

ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு வித்தியாசம் இருக்கும். கூட்டணியில் உட்கட்சி பூசல் இல்லை. நாங்கள் தொடர்ந்து பேசிக்கொண்டுதான் இருக்கிறோம்” என்று கூறினார்.

முன்னதாக, காணொளி காட்சி மூலம் நடந்த 5ஆவது இந்தியா கூட்டணி கூட்டத்தில் மம்தா பானர்ஜி, பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

பாலியல் வழக்கு : ராஜேஷ் தாஸூக்கு எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம்!

தளபதி விஜய் வாங்கிய முதல் எலெக்ட்ரிக் கார்… என்ன ஸ்பெஷல்?

+1
0
+1
1
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0

1 thought on “‘தனித்து போட்டி’ : மம்தாவுக்கு காங்கிரஸ் பதில்!

  1. காங்கிரஸ் முக்த் பாரத்…🙏
    வந்தே மாதரம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *