விசிகவில் இணைகிறாரா காயத்ரி ரகுராம்?

அரசியல்

பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் இடையேயான திடீர் சந்திப்பு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவை சேர்ந்த திருச்சி சூர்யா – டெய்சி விவகாரத்தில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி பேசியதாக நடிகை காயத்ரி ரகுராம் பாஜகவிலிருந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதன் எதிரொலியாக ஜனவரி 3ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் தன் மீதான குற்றச்சாட்டுக்கு விளக்கமளித்து தமிழக பாஜகவில் இருந்து விலகுவதாக காயத்ரி அறிவித்தார்.

அதன்பின்னர் தன்னை பற்றி சமூகவலைதளங்களில் அவதூறு கருத்துகள் பதிவிட்டு வருவதாக கூறி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

வேறு கட்சிகளில் சேர்வது குறித்தும் காயத்ரி ரகுராம் ஆர்வம் காட்டி வரும் நிலையில், எந்த கட்சியில் அவர் இணையப்போகிறார் என்ற பலத்த கேள்வி எழுந்துள்ளது.

சமீபத்தில் நமது மின்னம்பலம் ஊடகத்திற்கு காயத்ரி ரகுராம் அளித்த பேட்டி ஒன்றில் விசிக தலைவர் திருமாவளவன் குறித்து பாராட்டி பேசியிருந்தார்.

என் மனதில் உயர்ந்துவிட்டார்

அவர் பேசுகையில் “திருமாவளவன் அண்ணன் கடவுள் குறித்து பேசியது என்னை காயப்படுத்தியது. அதனால் அவரும், நானும் மாறி மாறி சமூகவலைதளங்களில் தாக்கி பேசிக்கொண்டோம்.

ஆனால், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் நெறியாளர் அதுகுறித்து எழுப்பியபோது தான் தவறாக பேசிவிட்டதாக திருமாவளவன் அண்ணா வருத்தம் தெரிவித்தார்.

அரசியல் அனுபவத்திலும் சரி, மக்கள் ஆதரவிலும் சரி இன்று மிகப்பெரிய தலைவராய் இருக்கும் திருமாவளவன் அண்ணா நடந்துகொண்ட விதத்தின் மூலம் என் மனதில் உயர்ந்துவிட்டார்” என்று காயத்ரி ரகுராம் தெரிவித்திருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

வாழ்த்து தெரிவித்த திருமா

is gayathri raguram joined thirumavalavan

இந்த சூழ்நிலையில் தான் நடிகை காயத்ரி ரகுராம் சென்னை அம்பேத்கர் திடலில் வைத்து விசிக தலைவர் திருமாவளவனை நேற்று (பிப்ரவரி 21) சந்தித்துள்ளார்.

அப்போது ’உலக வரலாற்றில் பெண்கள்’ எனும் நூலைப் பரிசாக அளித்து, அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14 காயத்ரி ரகுராம் தொடங்கவிருக்கும் சக்தி யாத்ரா வெற்றி பெறவும் திருமாவளவன் வாழ்த்தினார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் காயத்ரி ரகுராம், “எதிர்பாராத மனிதர்கள் எனக்கு உதவியபோது. விசிக தலைவர், எம்.பி., அண்ணா தொல் திருமாவளவன் அவர்களுக்கும், விசிகவுக்கும் எனது நன்றிகள். ஆதரவு அளித்ததற்கு நன்றி. மரியாதை நிமித்தமான அற்புதமான சந்திப்பு இது” என பதிவிட்டுள்ளார்.

மேலும் இதுகுறித்து திருமாவளவன் வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவுக்கும் ’நன்றி அண்ணா’ என்று ட்விட் செய்துள்ளார் காயத்ரி ரகுராம்.

கடந்த காலத்தில் திருமாவளவனுக்கு எதிராக பேசி வந்த காயத்ரி ரகுராம், இப்போது அவரை பாராட்டி பேசி வருவதும், அதன் தொடர்ச்சியாக நேரில் சந்தித்துள்ளதும் தன்னை விசிகவில் இணைத்து கொள்வதற்கான திட்டமா என்று கேள்வி எழுந்துள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

போலீசாரை தாக்கி தப்ப முயன்ற ரவுடி சுட்டுப்பிடிப்பு!

தொடங்கியது இந்தியாவின் யூபிஐ- சிங்கப்பூரின் பே நவ் டிஜிட்டல் பரிமாற்றம்! 

போர் ஓராண்டு நிறைவு: பைடனின் வருகையும் புதினின் உடல்நிலையும்!

+1
1
+1
2
+1
1
+1
5
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *