டாஸ்மாக் கடை ஒன்றில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. Is fake liquor selling in salem tasmac
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (பிப்ரவரி 5) தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அந்த வீடியோவில், “சாராயம் வித்திட்டு இருக்கீங்களாடா…” என்று ஒருவர் கேட்க, இன்னொருவர், “வீடியோ எடுக்காதீங்க” என்று சொல்கிறார்.
இதற்கு வீடியோ எடுத்தவர், “ யார்ப்பா இதை விக்கிறா… கள்ளக்குறிச்சியில எல்லோரும் செத்து சுண்ணாம்பு ஆகிட்டானுங்க…” என்று சொல்ல,
அதற்கு இன்னொருவர், “ஜோதிராமன்தான்… போலீஸுக்கு காசு கொடுத்துதான் பன்றோம்” என்று பதிலளிக்கிறார்.
பாக்கெட் 100 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும், சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் வளையமாதேவி பஞ்சாயத்தில் டாஸ்மாக் கடை எண் 7142ல், இப்படி விற்கிறார்கள் என்றும் அந்த வீடியோவில் கூறுகிறார்கள்.
திமுகவினர் கொம்பு முளைத்தவர்களா? Is fake liquor selling in salem tasmac
இந்த வீடியோவை பகிர்ந்துள்ள எடப்பாடி பழனிசாமி, “சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே டாஸ்மாக் கடை ஒன்றில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. மரக்காணம் மரணங்களில் இருந்தோ, நாட்டையே உலுக்கிய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணங்களில் இருந்தோ இந்த ஸ்டாலின் மாடல் அரசு ஒரு பாடம் கூட கற்கவில்லையா ?
“போலீஸுக்கு பணம் கொடுத்து தான் விற்கிறோம்” என்று கள்ளச்சாராயம் விற்பவன் தைரியமாக சொல்லும் அளவிற்கு கள்ளச்சாராய விற்பனையை நிறுவனமயப் படுத்தியுள்ளதற்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசு வெட்கப்பட வேண்டும். போதாக்குறைக்கு, “திமுக கட்சிக் காரன்” எனும் அடையாளம் வேறு.
திமுக என்றால், இரண்டு கொம்பு முளைத்தவர்களா? அவர்கள் எந்த தவறு செய்தாலும் காவல்துறை கண்டுகொள்ளாதா ? தமிழ்நாட்டில் நீங்கள் ஆட்சிக்கு வந்தது, உங்கள் கட்சி அடையாளத்தை லைசன்சாக பயன்படுத்தி, சகல குற்றங்களையும் திமுகவினர் செய்வதற்கு தானா ஸ்டாலின் அவர்களே ?

உடனடியாக இந்த கள்ளச்சாராய விற்பனையில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்வதோடு, எந்தவித அரசியல் குறுக்கீடும் இன்றி அனைவர் மீதும் சட்ட நடவடிக்கையை உறுதி செய்ய வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன். மேலும், தமிழ்நாடு முழுக்க கள்ளச் சாராயத்தை ஒழிக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
என்ன நடந்தது? Is fake liquor selling in salem tasmac

இந்த வீடியோ தொடர்பாக நாம் ஆத்தூர் போலீஸ் வட்டாரத்தில் விசாரித்த போது,
“சேலம் மாவட்டம் ராமநாயக்கன்பாளையத்தில் நேற்று காலை 10 மணியளவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் கலந்துகொண்டார்.
அப்போது எஸ்.பி.க்கள், டிஎஸ்பிக்கள், வருவாய்த் துறை அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் என எல்லோரும் அங்கு சென்றுவிட்டனர்.
இந்தநிலையில் எல்லா பத்திரிகையாளர்களுக்கும், ‘கள்ளக்குறிச்சி போல் இங்கும் கள்ளச்சாராயத்தை குடித்து விபரீதம் நடக்கப்போகிறது’ என ஒரு வீடியோ சென்றது. இதை பத்திரிகையாளர்கள் எஸ்.பியிடம் காண்பித்துள்ளனர்.
இதை பார்த்த எஸ்.பி… இந்த வீடியோ எங்களுக்கும் வந்துள்ளது. டிஎஸ்பி விசாரிக்கிறார் என்று பதிலளித்துள்ளார்.
சைபர் கிரைம் மூலமாக இந்த வீடியோ எங்கிருந்து வந்தது? யார் அனுப்பியது? என்று டிஎஸ்பி ஆய்வு செய்தார்.
அந்த வீடியோவை எடுத்த நபர், டாஸ்மாக் கடையையும், சாராய பாக்கெட்டை பிரிப்பதையும் மாற்றி மாற்றி எடுத்தபோது, அதில் அவரது கையும், முகமும் பதிவாகியிருந்தது.
அதற்கு முன்னதாக வளையமாதேவி பாருக்கு சென்ற போலீசார் அந்த பாரில் இருந்த சமையல்காரர் சுரேஷ் என்ற வயதான நபரிடம் விசாரித்தனர்.

அவரிடம், இங்கு யார் வந்தது? யார் வீடியோ எடுத்தது? என்று போலீசார் கேட்கும் போது, ‘பாம்பு ரவிதான் வந்துவிட்டு சென்றார்’ என்று சொல்லியிருக்கிறார்.
இதற்கிடையே வளையமாதேவியில் பாரை நடத்தி வரும் ஜோதிவேலுவிடமும் போலீசார் விசாரித்தனர். அவர், ‘நாங்கள் சாராயம் எதுவும் விற்கவில்லை’ என்று கூறியுள்ளார்.
இந்தநிலையில் வீடியோவில் பதிவான முகத்தையும், பாரில் நேரடியாக பார்த்த சமையல்காரர் சுரேஷ் கூறியதையும் வைத்து ஆத்தூர் நகரப்பகுதியைச் சேர்ந்த பாம்பு ரவியை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
அப்போது பாம்பு ரவி அளித்த வாக்குமூலத்தில், ‘நான் ஆத்தூரில் நரசிங்கபுரம் உட்பட இரண்டு பார்களை நடத்தி வருகிறேன். ஆத்தூரைச் சேர்ந்த ஜோதிவேல் வளையமாதேவி, வீரகனூர், ஆத்தூர் ஆகிய மூன்று பகுதிகளில் பார் நடத்தி வருகிறார்.
ஆனால் நான் நடத்தி வரும் நரசிங்கபுரம் பாரை நடத்த ஜோதிவேல் தீவிரமாக முயற்சி செய்தார்.
அதனால் அவரை பழிவாங்க வளையமாதேவி பாரில் காலை 9 மணிக்கு நானும், என் கூட்டாளி இளங்கோ மன்னன் இருவரும், கள்ளக்குறிச்சியில் இருந்து வாங்கிவரப்பட்ட 3 லிட்டர் சாராயத்தை பாக்கெட் போட்டு, 30 டாஸ்மாக் பாட்டில்களை வைத்து வீடியோ எடுத்து வந்தோம். நான் எடுத்த வீடியோவில் நானே மாட்டிக்கொண்டேன் என்று ஒப்புதல் அளித்துள்ளார்” என்றார்கள்.
இந்த வீடியோ விவகாரத்தால் மாவட்டத்தில் அனுமதி இல்லாத பார்களை உடனடியாக மூட சொல்லி காவல்துறையினர் உத்தரவுபோட்டுள்ளனர்.
இந்த பாம்பு ரவியும், ஜோதிவேலும் திமுக ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. Is fake liquor selling in salem tasmac