பின்வாங்கவே மாட்டேன்… 70 வயது எடப்பாடி பேசியது சரியா? – அண்ணாமலை ஆவேசம்!
எடப்பாடி பழனிசாமி குறித்து பேசியதில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
அரசியலுக்கு தற்காலிக ஓய்வு கொடுத்துவிட்டு, நாளை (ஆகஸ்ட் 28) அண்ணாமலை லண்டனுக்கு படிக்க செல்லவுள்ளார்.
இதற்கிடையே தமிழ்நாட்டில் அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே மோதல் போக்கு வெடித்திருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியை தற்குறி என்று கடுமையான வார்த்தைகளால் விமர்சித்திருந்தார் அண்ணாமலை. இதற்கு அண்ணாமலை தான் தற்குறி, தான்தோன்றித்தனமாக பேசுகிறார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பதிலடி கொடுத்தனர்.
இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 27) சென்னை அடையாறில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “நான் மூன்று மாதம் தூரத்தில் பயணம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். தமிழ்நாட்டை தாண்டி எங்கே இருந்தாலும் என் இதயம் இங்கேதான் இருக்கும்.
மூன்று மாதம் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் இருந்தாலும் கூட இதுவரை எப்படி சண்டை போட்டோமோ, அது தொடரும்.
ஆளும் கட்சி செய்யக் கூடிய தவறுகளை சுட்டிக்காட்டி தொடர்ந்து அறிக்கை வெளியிடப்படும். தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் வரவேண்டும். அங்கு சென்றாலும் தொலைபேசி மூலம் பேசி தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் அறிவுரை வழங்கிக் கொண்டே இருப்பேன்” என்று கூறினார்.
முதல்வரின் அமெரிக்கப் பயணம் குறித்து பேசிய அண்ணாமலை, “துபாய்க்கு சென்று வந்து 6,000 கோடி ரூபாய் முதலீடு என்றார். அது இன்றுவரை இல்லை. சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் சென்று வந்தார். அதிலும் ஒன்றுமில்லை. வெளிநாடு சென்று வந்தது தொடர்பாக வெள்ளை அறிக்கை கேட்டோம் வெளியிடவில்லை.
இப்போது அமெரிக்காவுக்கு போகிறார். பொறுத்திருந்து பார்ப்போம். முதல் மூன்று பயணமும் தோல்வியில் முடிந்தது போல, இது இருக்கக் கூடாது என்று நினைக்கிறோம்.
சான் பிரான்சிஸ்கோ உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான தமிழர்கள் கொடிகட்டி பறந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களை பிடித்தாலே ஆயிரக்கணக்கான கோடி தமிழ்நாட்டுக்கு வரும்” என்று குறிப்பிட்டார்.
உங்களுக்கு அனுபவமே இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சொல்லியிருக்கிறாரே என்ற கேள்விக்கு, “’எனக்கு 75 வயது ஆகிவிட்டது 50 ஆண்டுகள் அனுபவம் இருக்கிறது. ஒலிம்பிக்கில் ஓட அனுமதியுங்கள்’ என்று ஜெயக்குமார் கேட்பாரா. 100மீட்டர் ரேஸில் யார் ஓட வேண்டுமோ, அவர்கள்தான் ஓட வேண்டும்.
அரசியலில் வயதாகிவிட்டது என்பதற்காக ஒலிம்பிக்கிற்கு அனுப்ப முடியுமா? அவரது வாதம் அப்படிதான் இருக்கிறது.
தமிழ்நாட்டில் 40சதவிகித வாக்காளர்கள் என்னுடைய வயதில் இருக்கிறார்கள். அவர் வயதுடைய வாக்காளர்கள் 20 சதவிகிதம் தான் உள்ளனர்.
இளைஞர்கள் அரசியலை வேறு மாதிரி பார்க்கிறார்கள். இந்தியாவைச் சேர்ந்த 35 வயதான நிதின் காமத் 3.6 பில்லியன் டாலருடன் ஒரு பில்லியனராக இருக்கிறார்.
அவரிடம் சென்று உனக்கு அனுபவம் குறைவு என்று கூறி அவருடைய சொத்தை இன்னொருத்தருக்கு கொடுக்கச் சொல்ல முடியுமா?
அதனால் இந்த வாதத்தை நான் மறுக்கிறேன். இந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் 10 ஆண்டுகள் காவல்துறையில் பணியாற்றி இருக்கிறேன். அப்போது எத்தனை அரசியல்வாதிகளிடம் நான் குப்பை கொட்டியிருப்பேன். அதை ஏன் மறுக்கிறீர்கள்.
அதற்கு முன்பு 4 ஆண்டுகள் இன்ஜினியரிங், லக்னோவில் 2 ஆண்டுகள் எம்.பி.ஏ படித்திருக்கிறேன். அந்த அனுபவத்தை ஏன் ஏற்க மறுக்கிறீர்கள்.
10 ஆண்டுகள் கிராமத்தில் மண்வெட்டி பிடித்து வயலுக்கு தண்ணீர் பாய்த்திருக்கிறேன். அப்பாவுடன் விடிய விடிய வயல்களில் தண்ணீர் பாய்ச்சியிருக்கிறேன். பால் கறந்திருக்கிறேன், சாணி அள்ளியிருக்கிறேன். அதுவும் ஒரு அனுபவம் தானே.
கிளை தலைவராக வெள்ளை வேட்டி சட்டை போட்டுக்கொண்டு கும்பிடு போட்டு பணம் கொடுப்பதுதான் அரசியல்வாதியா? இன்னும் அந்த காலத்திலேயே உட்கார்ந்துகொண்டிருக்கிறார்கள்” என்று விமர்சித்தார்.
எடப்பாடி பற்றிய விமர்சனம் குறித்த கேள்விக்கு, “எடப்பாடி அண்ணன் பற்றிய விமர்சனம் 100 சதவிகிதம் என்னை பொறுத்தவரை சரி. அதில் ஒரு பாயிண்ட் நான் பின்னால் போகமாட்டேன்.
இதனால் தினமும் ஒரு அமைச்சர் என்னை வந்து திட்டலாம். தற்குறி என்று சொல்லலாம். படிக்க போனால் கொச்சைப்படுத்தலாம். நான் செய்யும் வேலையை கொச்சைப்படுத்தலாம். ஆட்டை வெட்டலாம். இதெல்லாம் இவர்கள் பண்ணலாம்.
ஆனால், அனுபவம் இல்லை என என்னால் அமைதியாக இருக்க முடியாது? உட்கட்சியாக இருந்தாலும் சரி, வெளி கட்சியாக இருந்தாலும் சரி என் பாணி மாறாது…
நான் எல்லா தலைவர்களையும் மதிக்கிறேன். ஆனால், அரசியலில் தங்களுக்கென சொந்த பாணி இருக்க வேண்டும். எல்லாவற்றையும் காப்பியடிக்க ஆரம்பித்தால் எங்கேயாவது மாட்டிக்கொள்வோம்.
அவர்களுடைய கை, காலை பிடித்து மேலே வந்ததாக எடப்பாடி பழனிசாமி சொன்னார். இதைக் கேட்டு, இன்று பேசக் கூடிய தலைவர்கள் எங்கே போனார்கள். இவர்கள் ஆபாசமாக பேசுவார்கள், அதே பாணியில் நான் பேசினால் கோவம் வருகிறதா? இன்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எல்லாம் குமுறிக்கொண்டிருக்கிறார்களே.
39 வயதான அண்ணாமலையை விடுங்க… 70 வயதான எடப்பாடி பேசியது சரியா? கை, காலை பிடித்து அரசியல் செய்து கொண்டிருக்கிறேனா?
கர்நாடகாவில் பாஜக அரசாக இருந்தாலும் உண்ணாவிரதம் நடத்துகிறேன். மத்தியப் பிரதேச முதல்வர் பாஜகவைச் சார்ந்தவராக இருந்தாலும் அவரை வரவேற்க நான் போகவில்லை.
அப்படி தமிழகத்தை முதன்மைப்படுத்தி நான் அரசியல் செய்துகொண்டிருக்கிறேன். தமிழக மக்கள் இதைதான் எதிர்பார்க்கிறார்கள். காங்கிரஸ் போல் பாஜக இருக்கக் கூடாது என நினைக்கிறார்கள்.
70 வயதான அதிமுக தலைவர்கள் எல்லாம் டை அடித்துக்கொண்டு இளைஞர் என நினைத்துக்கொள்கிறார்கள்” என்று கடுமையாக விமர்சித்தார்.
மேலும் அவர், “அரசியல் குடும்பத்துக்கு சம்பந்தமில்லாத ஒரு லட்சம் இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று பிரதமர் மோடி அறைகூவல் விடுத்திருக்கிறார். செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பாஜக உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் துரிதப்படுத்தப்படும். அன்று பிரதமர் மோடி பாஜகவில் மீண்டும் உறுப்பினராக சேரப்போகிறார். பாஜகவில் 6ஆண்டுகளுக்கு ஒரு முறை மீண்டும் உறுப்பினராக சேர வேண்டும்.
தமிழ்நாட்டில் செப்டம்பர் 2ஆம் தேதி எச்.ராஜா முதல் உறுப்பினராக மீண்டும் இணைவார். இந்த முறை கிராமத்தை நோக்கி பாஜக செல்கிறது.
செப்டம்பர், அக்டோபர் முழுவதும் பாஜகவில் இணைய ஆலோசனைகளை கொடுக்க கிராமங்களில் பயணிக்கவுள்ளோம். கட்சியில் இணையக் கூடியவர்களுக்கு பொறுப்பும் கொடுப்போம்” என்று தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
என்.சந்திரசேகரன் போட்ட பிளான்… டாடா செய்த மாயம்… வாயடைத்த ரிசர்வ் வங்கி!
ஸ்டாலின் அமெரிக்கா பயணம்… குவியும் வாழ்த்து!