வைஃபை ஆன் செய்ததும் மதுரையில் அதிமுக நடத்த இருக்கும் மாநாடு பற்றிய தகவல்கள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன.
அவற்றை பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது. “வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி அதிமுகவின் பொன்விழா மாநாட்டை மதுரையில் நடத்துகிறார் அக்கட்சியின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி. நீண்ட இடைவெளிக்கு பிறகு அதிமுக நடத்தும் மாநாடு என்பதால் கட்சி வட்டாரத்திலும் அதிமுக கூட்டணி வட்டாரத்திலும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
தனது நேரடி எதிர்கட்சியான திமுகவுக்கும் கூட்டணி குடைச்சல்களை அவ்வப்போது கொடுத்து வரும் பாஜகவுக்கும் ஒரே நேரத்தில் பதில் சொல்லும் வகையில் பிரம்மாண்டமாக மாநாட்டை திட்டமிட்டு வருகிறார் எடப்பாடி.
இந்த நிலையில் தான் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி முதல் டிடிவி தினகரனும் ஓ பன்னீர்செல்வமும் இணைந்து தென் மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம், ஆலோசனை கூட்டம் என்று தொடங்கி இருக்கிறார்கள். தென் மாவட்டத்தில் இருக்கும் முக்குலத்து சமுதாய மக்களை அதிமுகவின் மதுரை மாநாட்டுக்கு செல்ல விடக்கூடாது என்று அவர்கள் அரசியல் ரீதியாக காய் நகர்த்தி வரும் நிலையில்… சில நாட்களுக்கு முன் அதை வெளிப்படையாகவே செய்தார்கள் முக்குலத்தோர் சமுதாய அமைப்பினர்.
மதுரையில் செய்தியாளர் சந்திப்பு நடத்திய முக்குலத்து சமுதாய அமைப்பு நிர்வாகிகள், ‘எடப்பாடி பழனிசாமி முக்குலத்து சமுதாய மக்களுக்கு துரோகம் செய்துவிட்டார். 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு கொண்டு வந்து மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் இருக்கும் 68 சமுதாய மக்களுக்கும் துரோகம் செய்ததோடு அந்த 10.5 சதவீத இட ஒதுக்கீடு வன்னியர்களுக்கும் நிலைக்காத அளவுக்கு அதை சட்ட பாதுகாப்பு இல்லாமல் செய்து அவர்களுக்கும் துரோகம் செய்துவிட்டார்.
அதிமுக நடத்தும் மதுரை மாநாட்டுக்கு முக்குலத்து சமுதாய மக்கள் போக மாட்டார்கள். இது தேவர் மீது ஆணை’ என்றெல்லாம் அவர்கள் பொங்கி தீர்த்தார்கள்.
கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி தேனியில் கொடநாடு வழக்கை விரைவில் விசாரித்து முடிக்குமாறு திமுக அரசை வலியுறுத்தி ஓபிஎஸ் டிடிவி இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அப்போதிலிருந்தே தென் மாவட்ட கிராமங்களில் முக்குலத்து சமுதாய சங்கங்கள் அதிமுகவின் மதுரை மாநாட்டுக்கு நமது மக்கள் யாரும் செல்லக்கூடாது என்ற ரகசிய பரப்புரையில் இறங்கினார்கள்.
இதை உணர்ந்த தென் மாவட்ட அதிமுகவைச் சேர்ந்த சில முக்குலத்து புள்ளிகள் எடப்பாடி பழனிசாமிக்கு சில தகவல்களை அனுப்பினார்கள். அதாவது மதுரை மாநாட்டுக்கு முன்பாக நீங்கள் பரமக்குடி வந்து ஒரே நாளில் தேவர் நினைவிடத்திலும் இமானுவேல் சேகரன் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தி விட்டு சென்றால்… இந்த முக்குலத்து மக்களிடம் ஏற்படுத்தப்பட்டு வரும் கொதிப்பு தணியக் கூடும் என்பதுதான் அந்த தகவல்.
இது பற்றி உடனடியாக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோரிடம் ஆலோசித்து இருக்கிறார் எடப்பாடி. அப்போது உதயகுமார், ‘இந்த நேரத்தில் நீங்கள் பரமக்குடி சென்றால் அது ஏதோ அரசியல் ரீதியாக தாஜா செய்வதற்காக நடத்தப்படக்கூடிய ஒரு விசிட் என்ற கருத்து உருவாக்கப்படும். அதுவே உங்களுக்கு எதிராக திரும்பவும் வாய்ப்பு உள்ளது. மேலும் சட்டம் ஒழுங்கு ரீதியாக பார்த்தாலும் இப்போதைக்கு அங்கே செல்வது உசிதமில்லை. மதுரை மாநாட்டுக்கு 10 லட்சம் பேர் வரை திரள்வது உறுதி. அதனால் இப்போதைக்கு இந்த திட்டம் வேண்டாம் என்று எடப்பாடியிடம் எடுத்து சொல்லியுள்ளார் உதயகுமார்’ என்கிறார்கள் மதுரை அதிமுகவைச் சேர்ந்த முக்குலத்து புள்ளிகளே.
சில நாட்களுக்கு முன்பு மதுரை வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாநாட்டு ஏற்பாடுகளை பார்வையிட்டு விட்டு மீண்டும் இந்த விவகாரம் குறித்து உதயகுமார் உள்ளிட்டவர்களிடம் ஆலோசித்து இருக்கிறார். அப்போதும் அவர்கள் அதையே வலியுறுத்தி இருக்கிறார்கள்’ என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆப்லைன் போனது வாட்ஸ் அப்.
“உங்களை நாய் கடித்தால் இங்கே வாங்க” : ஈபிஎஸுக்கு மா.சுப்பிரமணியன் பதில்!
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் தேசிய கொடி இறக்கப்பட்டது!