ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ‘கண்ணன் குலத்தைச் சேர்ந்த நமது பங்காளிக்கு வாக்கு செலுத்துங்கள்’ என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெயரில் இன்று (பிப்ரவரி 17 ) ஒரு கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.
இதனிடையே அங்கு தங்கள் கட்சி வேட்பாளர்களை எப்படியும் வெற்றி பெற வைத்து விட வேண்டும் என்று அக்கட்சியினர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், அ.தி.மு.க வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமியின் பெயரில்,
‘கண்ணன் குலத்தைச் சேர்ந்த நமது பங்காளிக்கு வாக்குச் செலுத்துங்கள்’ என்ற கடிதம் வெளியாகி ஈரோடு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு முனிசிபல் காலனி பி.லோகநாதன் என்பவருக்கு எடப்பாடி பழனிசாமி அனுப்பியதாகக் கூறப்படும் அந்தக் கடிதத்தில்,
“ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் கண்ணன் குலத்தை சேர்ந்த நமது பங்காளிகள், கழக வேட்பாளர் தென்னரசுக்கு இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களிக்கவும்,
தங்கள் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அவர்களிடத்தில் வாக்களிக்க தாங்கள் உதவி செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த இடைத்தேர்தல் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்குகின்ற தேர்தலாக இருப்பதால், தாங்கள் கழக வேட்பாளருக்கு வாக்கு அளிக்க வேண்டும்.
கண்ணன் குலத்தில் நானும் ஒருவன் என்ற முறையிலும், கண்ணன் குலத்தைச் சேர்ந்த ஒருவர் மிகப்பெரிய ஓர் இயக்கத்தின் தலைமை பொறுப்பில் இருப்பதால் இந்த வெற்றி நம் கண்ணன் குலத்துக்குப் பெருமை சேர்க்கும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது “ இது ஒரு போலியான கடிதம் . அதிமுக என்பது சாதி , மதங்களுக்கு அப்பாற்பட்ட இயக்கம். நாளுக்கு நாள் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வின் செல்வாக்கு அதிகரித்து வருவதால் வேண்டுமென்றே திட்டமிட்டு விஷமிகள் இப்படி ஒரு கடிதத்தை பரப்பி வருகின்றனர்” என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ஜனாதிபதி வருகை: பாதுகாப்பு வளையத்தில் கோயமுத்தூர்!
வாய்ப்பு தந்த இயக்குநர்: ஓரங்கட்டும் மாதவன்