2022-ஆம் ஆண்டின் சமூக முன்னேற்றக் குறியீட்டை சுட்டிக்காட்டியுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், திராவிட அரசியல் பிற்போக்குத்தனமானதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அனுப்பியுள்ள 19 பக்க கடிதத்தில்,
“திராவிட அரசியல் பிற்போக்குத்தனமானது என்று ஆர்.என். ரவி கூறியிருப்பது அவதூறானது மட்டுமல்ல அது அறியாமையில் தெரிவிக்கப்பட்டுள்ளதுமாகும்.
50 ஆண்டுகளுக்கும் மேலான திராவிட அரசு மற்றும் அரசியலின் விளைவாகவே, இன்றைக்கு வளர்ச்சியில் இந்திய அளவில் முதல் 3 இடங்களில் தமிழ்நாடு உள்ளது.
வளர்ச்சியும் சமூகநீதியும் கைகோர்த்துச் செல்லும் ஒரே மாநிலம் தமிழ்நாடுதான்.
பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு வெளியிட்டுள்ள 2022-ஆம் ஆண்டின் சமூக முன்னேற்றக் குறியீட்டில், தேசிய சராசரியான 60.19-க்கு எதிராக தமிழ்நாடு 63.33 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
இதன் அடிப்படையில் திராவிட அரசியல் பிற்போக்கானதா அல்லது முற்போக்கானதா என்று நடுநிலையாளர்களால் கணிக்க முடியும்” என்றும் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அதில், “தமிழ்நாட்டில், தொடர்ந்து திராவிட ஆட்சி நடப்பதால்தான் பொருளாதார வளர்ச்சியிலும், மேம்பாட்டிலும் தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட முன்னணியில் உள்ளது.
அதிக தொழிற்சாலைகள் உள்ள மாநிலங்கள் குறித்த புள்ளிவிவரத்தில், தமிழ்நாடு 38,837 தொழிற்சாலைகளுடன் முதலிடத்திலும், குஜராத் மாநிலம் 28,479 தொழிற்சாலைகளுடன் 2-ஆவது இடத்திலும் உள்ளது.
2020-2021-ஆம் ஆண்டில், ரூ.13,641 கோடியாக இருந்த மின்னணு ஏற்றுமதி, கடந்த 2 ஆண்டுகளில் 223 விழுக்காடு அளவிற்கு வளர்ச்சியைப் பதிவு செய்து, 2022-2023-ஆம் ஆண்டில் ரூ.44,044 கோடியாக உயர்ந்து தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
எனவே, தமிழ்நாட்டில் திராவிட அரசியல் பிற்போக்குத்தனமானது என்று சொல்பவர்களின் பார்வையில்தான் குறைபாடு இருக்கிறது. ஆளுநர் என்ற அரசியலமைப்புப் பதவியை வகிக்கும் ஒரு நபரின் பொருத்தமற்ற அரசியல் போக்கையே இது அம்பலப்படுத்துகிறது.
அரசியல் சாசனத்தின் அடிப்படைக் கட்டமைப்பின் முக்கிய அங்கமான கூட்டாட்சித் தத்துவம், நிருவாக நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது என ஆளுநர் ஆர்.என். ரவி விமர்சித்து, அவதூறாகப் பேசியிருப்பதுதான் அதைவிட அதிர்ச்சியளிக்கும் விஷயம்.
கூட்டாட்சி என்பது நிருவாக நோக்கங்களுக்காக உருவாக்கப்படவில்லை மாறாக அரசியலமைப்பின்கீழ் இந்தியா இவ்வாறாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 1-இல் இந்தியாவை “மாநிலங்களின் ஒன்றியம்” என்று வரையறுக்கிறது. இதன் மூலம் மாநிலங்கள் ஒன்றிணைந்து ஒன்றியத்தை உருவாக்குகின்றன.
ஆளுநர் ஆர்.என்.ரவி, “இலக்கியம் மக்களுக்கு மோசமாக போதிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்து தமிழ் இலக்கியத்தை இழிவுபடுத்தியுள்ளார். இதுபோன்ற அவரது அறிக்கைகள் அரசியலமைப்பை அவமதிக்கும் வகையில் உள்ளது.
அவரது இதுபோன்ற செயல்கள், இந்திய அரசமைப்பின் 156 (1)-ஆவது பிரிவின்கீழ், அரசியலமைப்பை நிலைநிறுத்துவதற்கும், இணங்குவதற்கும் தான் ஏற்றுக் உறுதிமொழியை மீறியுள்ளதையே காட்டுகிறது.
இதை தவிர, ஆர்.என். ரவி தமிழ்நாட்டு மக்களின் நெஞ்சங்களில் நிலைத்திருக்கும் “தமிழ்நாடு” என்ற பெயரை, “தமிழகம்” என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று ஏற்கவியலாத அதிர்ச்சியை அளிக்கும் கருத்தை கூறியுள்ளார்.
ஆளுநரின் இந்தச் செயல் தமிழ்நாட்டின் மீது அவருக்குள்ள அதீத வெறுப்பையும் காட்டுகிறது.
அதோடு, திராவிடத்தின் அடையாளமும், முன்னாள் முதலமைச்சரும். தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளின் அடையாளமாகத் திகழ்பவருமான பேரறிஞர் அண்ணாவால் ‘தமிழ்நாடு’ எனச் சூட்டப்பட்ட பெயரை களங்கப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது” என தெரிவித்துள்ளார் மு.க.ஸ்டாலின்.
பிரியா