துரைமுருகனை வைத்து விளையாட்டா?: அண்ணாமலை கேள்வி!

Published On:

| By christopher

is dmk playing by durai murugan with me?

துரைமுருகன் போன்ற மூத்த அமைச்சர்களை வேண்டுமென்றே முன்நிறுத்தி பின் நின்று விளையாடுகிறார்களோ என்ற சந்தேகத்தையும் எழுப்புவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின்‌ மாநில தலைவர்‌ அண்ணாமலை நேற்று (செப்டம்பர் 22) மேற்கொண்ட நடைபயணத்தின் போது, ’6வது முறையாக ஆட்சி செய்யும்‌ திமுக 5 அணைகளை மட்டுமே கட்டியுள்ளது’ என்று பேசியிருந்தார்.

துரைமுருகன் கண்டனம்!

அவரது பேச்சு இன்றைய செய்தித்தாள்கள் மற்றும் ஊடகங்களில் வந்தது. அதனை குறிப்பிட்டு பேசிய தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன், ”நித்தம்‌ நித்தம்‌ இப்படிப்பட்ட உண்மைக்கு மாறான செய்திகளை பேசி வம்பில்‌ மாட்டிக்‌ கொள்வதை அண்ணாமலை வழக்கமாக கொண்டுள்ளார்.

தமிழ்நாட்டில் 40 க்கும்‌ மேற்பட்ட அணைகள் கலைஞர்‌ தலைமையிலான திமுக ஆட்சி காலத்திலேயே கட்டப்பட்டுள்ளது. இப்படியே பொய் பேசிக் கொண்டிருந்தால் அண்ணாமலை கூறும்  குற்றச்சாட்டு யாவும்‌ புஸ்வானமாகிவிடும்‌” என்று துரைமுருகன் தெரிவித்திருந்தார்.

அண்ணாமலை பதில்!

இந்த நிலையில், அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் அமைச்சர் துரைமுருகனுக்கு பதில் அளித்துள்ளார். அதில் “தமிழக அரசியலில் மூத்த தலைவர்களில் ஒருவரும், நீண்ட நெடிய அரசியல் அனுபவம் மிக்கவருமான, திமுக பொதுச்செயலாளர், அண்ணன் அமைச்சர் துரைமுருகன், இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

திமுகவினர், திமுக தலைவர் பேரனுக்கு போஸ்டர் ஒட்டுதல் முதற்கொண்டு, சாதாரண பொதுமக்கள், கடைகள் நடத்துபவர்கள், பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்துதல், பாலியல் குற்றங்களில் ஈடுபடுதல் உள்ளிட்ட எவ்வளவு பெரிய சமூக விரோதச் செயல்கள் செய்தாலும், அவர்கள் திமுகவிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்ற அறிக்கையே, வழக்கமாக அவர் பெயரில் வெளிவரும்.

அதிலிருந்து ஒரு நல்ல மாற்றமாக, எதிர்க்கட்சியாக இருந்தும், என் மீது கொண்டுள்ள அன்பினாலும், நான் தவறான தகவல்களைத் தெரிவித்து விடக்கூடாதே என்ற அக்கறையினாலும் அண்ணன் துரைமுருகன் இந்த அறிக்கையை வெளியிட்டிருப்பதாகவே நான் எடுத்துக் கொள்கிறேன்.

நேற்றைய தினம், நடைபயணத்தின்போது, மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதியில், கொங்கு பகுதியில் உள்ள 24 அணைகளில், திமுக வெறும் ஐந்து அணைகளையே கட்டியுள்ளது என்று பேசியிருந்தேன்.

அண்ணன் துரைமுருகன், திமுக நாற்பதுக்கும் மேற்பட்ட அணைகள் கட்டியிருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். கொங்கு பகுதியில் ஐந்து அணைகள் என்று நான் குறிப்பிட்டுக் கூறியதை அவர் கவனிக்க மறந்துவிட்டார்.

புள்ளி விவரங்களை விரல் நுனியில் வைத்து விளையாடும் அண்ணன் திரு துரைமுருகன் அவர்கள், அவசரகதியில், இந்த சிறிய தகவலைச் சரிவர கவனிக்காமல் கோட்டை விட்டுவிட்டாரே என்பது வருத்தத்தைத் தருகிறது.

மேலும் திமுக கட்டியதாக அவர் குறிப்பிட்டுள்ள அணைகளில் பல, அதிமுக ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டவை என்று தமிழக அரசு இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

அவற்றையும் திமுகவினர் திருத்த மறந்துவிட்டார்கள் என்பது, அண்ணன் துரைமுருகன் போன்ற மூத்த அமைச்சர்களை வேண்டுமென்றே முன்நிறுத்தி பின் நின்று விளையாடுகிறார்களோ என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது.” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

ரூ.451 கோடியில் வாரணாசி ஸ்டேடியம்: அடிக்கல் நாட்டினார் பிரதமர்!

தொழில்‌ நிறுவனங்களின் மின்‌ கட்டணம் குறைக்க முதல்வர் உத்தரவு!

துருவ நட்சத்திரம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

’காதுல பூ’: அரசு ஊழியர்களின் அடுத்தக்கட்ட போராட்டம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share