நீட் தேர்வை வைத்து திமுக மக்களை ஏமாற்றுகிறதா?

Published On:

| By Minnambalam

நா.மணி

நீட் தேர்வு அமலாக்கம் செய்யப்பட்டது முதல், தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவின் எந்தவொரு மாநிலத்திலும் அல்லது யூனியன் பிரதேசத்திலும், சாதி மத பேதமின்றி, ஏழைகள் வீட்டிலிருந்து மருத்துவராக எவர் ஒருவரும் வர முடியவில்லை.

அப்படி யாரேனும் ஒருவர் அல்லது ஒரு சிலர் வெற்றி பெற்றிருந்தால், அது, விதிவிலக்கு. அதனை பொதுமைப்படுத்துவது மாபெரும் அறிவீனம். அதிகபட்சம் போனால் , தமிழ்நாட்டில் 7.5 விழுக்காடு அரசு பள்ளி மாணவர்களிலிருந்து மருத்துவர்கள் வந்து கொண்டு இருக்கலாம். இவர்களுக்கும் கூட நீட் தேர்வு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

நீட் தேர்வு நடைமுறைக்கு வந்த பிறகு, கிராமத்து மாணவர்களின் மருத்துவக் கனவுகள் நிறைவேறவில்லை. கிராமத்திலிருக்கும் பணக்காரர்கள் கூட, நகர்ப்புற பணக்காரர்களோடு ஒப்பிடும்போது, நீட் தேர்வில் சம அளவில் வெற்றி பெற முடியவில்லை.

நகர்புற ஏழைகளும் நீட் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. இது வெளிப்படையான உண்மை. “கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை” என்பதைப் போல, இந்த வெளிப்படையான உண்மைக்கு சான்றுகள் தேவை இல்லை. சான்றுகள் வேண்டுவோர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வழியாக சரி பார்த்துக் கொள்ளலாம்.

நீட் தேர்வு அமலாக்கத்திற்கு முன்பும், தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு இடங்கள் நிரப்பப்பட்டு இருக்கும். இப்போதும் அதே 69 விழுக்காடு இடங்கள் நிரப்பப்படுகிறது. ஆனால், நீட் தேர்வுக்கு முன்பு இந்த இட ஒதுக்கீட்டில் பயனடைந்தவர்கள் யார்? நீட் தேர்வுக்கு பிறகு பயன்பெற்று வருபவர்கள் யார்? என்று மனக்கண்ணில் நிறுத்திப் பாருங்கள்.

மருத்துவர் ஆகும் வாய்ப்பு பெற்றவர்கள் அனைவரும் அந்தந்த சமூகப் பிரிவில் ஒப்பீட்டளவில் வசதி படைத்தவர்களே. நீட் தேர்வு பயிற்சிக்கு தாராளமாக செலவு செய்பவர்கள் மட்டுமே மருத்துவராக மலர்ந்திருக்க முடியும். ஆலன், ஆகாஷ் , ஃபிட்ஜி போன்ற கார்ப்பரேட் மாடல் நீட் தேர்வு பயிற்சி மையங்கள், தங்கள் வெற்றிப் பதாகைகள் உயர்த்தி பிடித்து, பல்வேறு ஊடகங்கள் வாயிலாக கோடிக்கணக்கான ரூபாய் விளம்பரத்திற்காக செலவழிக்கிறது. அதனை, மீண்டும் கோடி கோடியாக திரும்ப பெற்று வருகிறது.

குடிசைத் தொழில் போல் ஆங்காங்கே தொடங்கி நடைபெற்ற வரும் நீட் தேர்வு பயிற்சி மையங்கள், ஏழை எளிய மக்களின் நடுத்தர வர்க்கத்தை காட்டிலும் கொஞ்சம் குறைவான வருவாய் உள்ளவர்களின் வருமானத்தை கபளீகரம் செய்து வருகிறது. ஏழைகளின் மருத்துவக் கனவு இவர்களுக்கு தீனி போட்டு வருகிறது.

தனியார் பள்ளிகளில் நீட் தேர்வு பயிற்சி எனக் கூறிக் கொண்டு கட்டணங்கள் இரண்டு மடங்கு மூன்று மடங்கு அதிகரித்து விட்டது. பள்ளிகளில் பெயர் பதிவை பெயரளவிற்கும் பயிற்சி முழுவதும் தனியார் பயிற்சி மையங்களில் என்னும் நிலை வந்து விட்டது. பள்ளிகளில் மாணவர்கள் முழுத் திறனையும் செலுத்திப் படிக்கும் படிப்பு அதில் பெறும் மதிப்பெண்கள் மாநில அளவில் முதல் மதிப்பெண் என்றாலும் அது பயனின்றி போய்விட்டது.

Is DMK cheating people through NEET exam?

‌இதன் வழியாக, அறியப்படும் செய்தி என்ன? “நீட் தேர்வு கட்டாயம் என்று அறிவிக்கப்பட்ட நாள் முதல், ‘நீட் சமூக நீதிக்கும் கூட்டாட்சிக்கும் எதிரானது’ என்று தமிழ் நாட்டில் எழுந்த அழுத்தமான குரல், 100 விழுக்காடு உண்மை, என்பதை நிரூபித்து இருக்கிறது. நீட் தேர்வு அமலுக்கு வந்தது முதல், தமிழ்நாட்டில் எழுந்த போராட்டங்கள், எழுதப்பட்டுள்ள எழுத்துக்கள், பேசப்பட்ட பேச்சுக்கள், நடத்தப்பட்ட போராட்டங்கள், அவற்றில் செலவிடப்பட்ட, மனித மணி நாட்கள் ( Man Days )…. என் நினைத்துப் பார்த்தால், மலைப்பாக இருக்கிறது. இத்தனை நடந்த பின்னும், பிற மாநிலங்களில் இருந்து பெரிய அளவுக்கு எந்த அசைவும் இல்லை. எதிர்ப்பும் இல்லை. போராட்டங்கள் இல்லை. இது ஏன் என்ற கேள்வி எழலாம்.

நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாட்டில் நடக்கும் போராட்டம், ஒட்டுமொத்த இந்தியாவுக்கான போராட்டம் என்றும் கொள்ளலாம். இந்தியா முழுவதும் ஒரே விதமான பாதிப்பு. ஆனால், தமிழ் நாட்டிலிருந்து மட்டும் ஏன் இந்த எதிர்ப்பு குரல்? இந்தியாவின் பிற பகுதியில் வாழும் ஏழைகளுக்கு மருத்துவக் கனவு ஏன் இல்லை ?ஏழைகளுக்கு மருத்துவக் கனவே முளைக்காத வண்ணம் அப்பகுதி ஏழை மக்களின் நிலை இருக்கிறது. இட ஒதுக்கீட்டில் பலன் பெற்று முன்னேறியவர்கள் தாங்கள் மட்டும் முன்னேறினால் போதும் என்று நினைக்கிறார்கள். அவர்களுக்கு நீட் தேர்வு ஒரு வகையில் வசதியாகவும் இருக்கிறது.

ஆனால் தமிழ்நாட்டின் தோன்றி வளர்ந்த சமூக சீர்திருத்த இயக்கங்கள், பெரியாரியம் மூட்டிய பெரும் நெருப்பு. அம்பேத்கர் ஆட்கொண்ட விதம் “எங்களின் கடையனின் கடையனுக்கும் மருத்துவக் கனவு நிறைவேற வேண்டும்” என்று கற்றுத் தந்திருக்கிறது. அந்தக் கற்றல், இதனை உள்வாங்கிய விதம், உருவகப்படுத்திக் கொண்ட விதம், அமைத்துக் கொண்ட தொலைநோக்குப் பார்வை, ஆகியவற்றில் வர்ணங்கள் வேறுபடலாம். கட்சிகளின் பெயர்கள் மாறுபடலாம். அமைப்புகளின் பெயர் மாறுபடலாம். ஆனால், சமூக நீதி என்று வரும்போது சமரசம் இல்லாமல் குரல் கொடுத்து வருகிறார்கள்.

தமிழ்நாட்டின் மக்கள் திரளில் ஒரு பகுதியினர் தரம் என்னும் பதாகையின் போதையில் இருக்கிறார்கள். நீட் தேர்வு தேர்ச்சி பெற்று மருத்துவக் கல்லூரிக்கு சென்றால் தான் தரம் என்று நினைக்கிறார்கள். ஆனால் ‘மருத்துவக் கல்வி’ என்றொரு கல்வி தோன்றிய காலம் முதல், எப்படி மருத்துவர்கள் உருவானார்கள்? தரமான மருத்துவம் தந்துகொண்டு இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இந்தியாவின் பிற பகுதிகளை ஒப்பிடும்போது எப்படி தரமான மருத்துவம் சுகாதாரமும் மேலோங்கி இருக்கிறது? இன்றைய மருத்துவக் கல்வியின் வளர்ச்சி மருத்துவர் கல்வியின் தரம் ஆகியவை நீட் இல்லாத மருத்துவர்களால் எப்படி ஊட்டி வளர்க்கப்பட்டது? என்பதை மிக வசதியாக மறந்து விட்டார்கள்.

நீட் இல்லாத மருத்துவர்கள் அவர்கள் வீட்டில் உயிர் காத்து நிற்பதையும் மறந்து விட்டார்கள். நீட் தேர்வு என்பது நிராதரவான மக்கள், மருத்துவக் கல்வி பெறுவதிலிருந்து நிராகரிப்பது. ஏழை எளிய மக்களை தகுதி என்ற பெயரில் தகுதி நீக்கம் செய்வது, என்பதை அறிந்தும் அறியாமலும் தரம் என்ற மாய வலையில் சிக்கிக் கொண்டு இருக்கிறார்கள். “இல்லை இல்லை முன்பு போல் மருத்துவக் கல்வியின் தரம் இல்லை” இப்போது தகுதித் தேர்வு தேவை என்று வாதிடுவோர், தயவுசெய்து ஒன்றை சிந்திக்க வேண்டும்.

தகுதி பற்றிய பேச்சு எழுந்ததே மருத்துவக் கல்வி தனியார்மயம் ஆன பிறகே. அவ்வாறெனில் தனியார் மருத்துவக் கல்லூரியில் படித்து வரும் மாணவர்களுக்கு மட்டும் ஓர் தகுதித் தேர்வு வைத்துக் கொண்டு இருக்கலாமே. அதற்கு பதிலாக பொதுத் தேர்வுகளில் தகுதி வழியாக வந்தவர்களை நிராகரித்து, பொதுத் தேர்வு நீட் தேர்வு என்ற இரண்டு குதிரைகளில் இளம் மாணவர்களை ஓட வைக்க வேண்டும்?

தமிழ்நாட்டில் திரண்ட எழுந்து நடந்து வருகிற நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தின் எதிர்ப்பாளர்களை மூன்று விதமாக பிரிக்கலாம். ஒன்று, நீட் ஒரு தகுதி தேர்வு என்று நம்பி, தெரிந்தும் தெரியாமலும் ஆதரிப்போர். இரண்டு, நீட் தேர்வு அமலாக்க அரசியலை புரிந்து கொண்டு அதற்கு ஆதரவு அளிப்போர். மூன்று, ‘எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்’ என திமுகவின் நீட் எதிர்ப்பை பகடி பேசுபவர்கள். நீட் தேர்வை எதிர்க்காமல் திமுகவின் நீட் எதிர்ப்பு நிலையை எதிர்ப்பவர்கள். இந்த மூன்றாம் வகையினர், இதர இரண்டு வகையை காட்டிலும் மிகவும் ஆபத்தானவர்கள். நீட் தேர்வு எதிர்ப்பை நீர்த்துப் போக வழி வகை செய்பவர்கள்.‌ மக்களின் எதிர்பார்ப்பு உணர்வை படை மாற்றம் செய்பவர்கள்.

Is DMK cheating people through NEET exam?

நீட் தேர்வை தமிழ்நாட்டின் பல கட்சிகள் எதிர்த்தன. அதிலும் பல வகை உண்டு. பெயருக்காக எதிர்த்த கட்சிகள். கடுமையாக எதிர்த்த கட்சிகள். போலியாக எதிர்த்த கட்சிகள் என பல வகை உண்டு. நீட் போன்ற தேர்வுகளின் அடிநாதம் அறிந்து எதிர்த்த கட்சிகளில் திமுக முக்கியமான பெரிய கட்சி.

நீட் தேர்வு அமலாக்கம் செய்யப்பட்டபோது, திமுக பிரதான எதிர்க்கட்சியாக இருந்தது. திமுக கூட்டாகவும் தனியாகவும் பல்வேறு போராட்டங்களை நீட் தேர்வுக்கு எதிராக முன் வைத்தது. “கல்வி உரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு” என்ற அமைப்பு பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை 42 ஆசிரியர்கள், மாணவர்கள், பேராசிரியர் சங்கங்களை ஒன்றிணைத்து, முதல் கட்டமாக அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்பாட்டங்களை நடத்தியது.

அடுத்த கட்டமாக, மாநில அளவிலான முழு நாள் தர்ணா போராட்டத்தை வள்ளுவர் கோட்டத்தில் நடத்தியது. அதன் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில், அன்றைய எதிர்க்கட்சித் தலைவர், இன்றைய முதல்வரை நேரில் அழைக்கச் சென்றேன். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காத்திருந்த நிலையில், முதல் ஆளாக என்னை அழைத்து பேசினார். “குறுகிய கால அழைப்பு என்பதால் என்னால் வர இயலவில்லை. ஆனால் ,ஆர் எஸ் பாரதி, டி கே எஸ் இளங்கோவன் என இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை அனுப்பி வைக்கிறேன். உங்கள் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்று கூறி அனுப்பி வைத்தார்.

இப்படி பல போராட்டங்களை திமுக ஆதரித்தும், திமுக கட்சியும், அதன் அணிகளும் நீட் தேர்வைக் கடுமையாக எதிர்த்து வந்தது. திமுக ஆளும் கட்சியாக ஆட்சியில் அமர்ந்தவுடன், 2021, 2022 மற்றும் 2024 என மூன்று முறை, நீட் தேர்வுக்கு விலக்கு கோரி சட்டமன்றத்தில் ஏகமனதாக தீர்மானத்தை நிறைவேற்றி, நடுவண் அரசுக்கு ஆளுநர் வழியாக அனுப்பி வைத்தது. ஆளுநர் திருப்பி அனுப்பியதை, 2022-ல் மீண்டும் சட்டமன்றத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியது.

Is DMK cheating people through NEET exam?

2021 ஆம் ஆண்டு முதல் மூன்று முறை மீண்டும் மீண்டும் நீட் தேர்வை எதிர்த்தும் விலக்கு அளிக்க கோரியும் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தை இத்தனை ஆண்டு காலம் கிடப்பில் போட உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? அதற்கான உரிமை, சட்டத்தில் மத்திய அரசுக்கு எங்கு இருக்கிறது? சட்டமன்றத்தில் ஏகமனதாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது என்றால் அதற்கு என்ன பொருள்? தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த குரல் அல்லவா? அதனை கண்டு கொள்ளாமல் இருத்தல் துரைத்தனம் அல்லவா?

தமிழ்நாடு நிறைவேற்றிய நீட் எதிர்ப்பு தீர்மானத்தின் மீது ஏறி அமர்ந்திருப்பது, அரசியல் அமைப்பு சாசனத்தின் மீது அமர்ந்து இருப்பதற்கு ஒப்பல்லவா? கூட்டாட்சியின் குரல்வளையை நெரிப்பது ஆகாதா? சமூக நீதியை சாகடிக்கும் செயல் அல்லவா? என்று , நீட்டை எதிர்க்கிறோம் என்று சொல்லும் அனைத்து அரசியல் கட்சிகளும் கேட்டு இருக்க வேண்டும்.

திமுக இப்படி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பிவிட்டு , இன்னும் வலுவாக தொடர் போராட்டங்களை ஏன் முன்வைக்க வில்லை என்று சொல்வதில் வேண்டுமானால் பொருள் இருக்கலாம். ஆனால், தமிழ்நாடு சட்டமன்றத்தின் தீர்மானம் சரிதான் என்றால் அதற்கு உடன் நிற்க வேண்டும். அரசியல் வேறுபாடுகள் மறந்து ஆதரிக்க வேண்டும்.

அதனை விடுத்து, நீட் தேர்வு முன்வைத்து, திமுகவை எதிர்ப்பது, இந்த அரசியல் கட்சிகளை நம்பும் மக்களை ஏமாற்றுவதற்கு சமம். நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்பது எதிர்க்கட்சி தலைவருக்கு மட்டுமல்ல, அரசியல் அரிச்சுவடி அறிந்த அனைவருக்கும் தெரியும்.‌ அப்படி இருக்க, இப்படி ஒரு கேள்வியே சட்டமன்றத்தில் தேவையற்றது. அப்படி தேவையற்ற ஒரு கேள்விக்கு, “நீட் தேர்வு ரத்து செய்யும் அதிகாரம் மாநில அரசிடம் இல்லை” என்று தானே பதில் அளிக்க முடியும்?

இதனை கையில் தூக்கிக் கொண்டு “இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” என தவெக தலைவர் கூறியிருப்பது, கட்சி தொடங்கியவுடன் மக்களை ஏமாற்றத் தொடங்கி விட்டார் என்பதற்கான சாட்சியமாக மட்டுமே கொள்ள வேண்டும். “எடுத்தவுடன் ஏமாற்றத் தொடங்கி விட்டார்களே! நம் நாட்டிலே சொந்த நாட்டிலே” என திருப்பி பாடத் தான் தோன்றுகிறது.

கட்டுரையாளர்:

Is DMK cheating people through NEET exam? - Article in Tamil by Professor N Mani

நா.மணி பேராசிரியர். “நீட் கூட்டாட்சிக்கும் சமூக நீதிக்கும் எதிரானது ஏன்?” என்ற நூலின் ஆசிரியர். நீட் எதிர்ப்பை முன் வைத்து பல்வேறு கோணங்களில் கட்டுரையாளர் எழுதிய கட்டுரைகளை மின்னம்பல பக்கங்களில் காணலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா : தால் வடா

களைகட்டிய சென்னை… நம்ம ஊரு திருவிழாவில் இத்தனை கலை நிகழ்ச்சிகளா?

பொங்கலுக்கு மெட்ரோ ட்ரெயின்ல போறீங்களா? – இதை நோட் பண்ணுங்க!

பொங்கல் அலப்பறைகள்… அப்டேட் குமாரு

சிந்தாதிரிப்பேட்டை புதிய மீன் அங்காடிக்கு எதிராக வழக்கு!

Champions Trophy : பவுமா கேப்டன்சி.. 136 ஆண்டுகால ஏக்கத்தை போக்குமா தென்னாப்பிரிக்கா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share